Sunday, 30 November 2014

காவியத்தலைவன் படம் பார்த்த / பார்க்க விரும்பிய கதை

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தின் முதல் காட்சிக்காக அடித்துப் பிடித்து 09.30 மணிக்கே கிளம்பியது காவியத்தலைவன் படத்திற்காகத்தான். 


 இப்பொழுது வீட்டில் பாப்பா இருப்பதால் முன்பு போல் நினைத்தவுடன் கிளம்புவது எல்லாம் நடக்காத காரியம். காலையிலேயே எழுந்து வீட்டம்மாவுக்கு வீட்டு வேலைகள் செய்து கொடுத்து விட்டு தாஜா பண்ணி சினிமாவுக்கு கிளம்பினேன்.

திரையரங்கில் முதல் வண்டியை நான் தான் பார்க் பண்ணினேன். அதுவே மிகவும் சந்தேகத்தை கிளப்பியது. அது போல என்னுடன் காலை 10மணிக்காட்சி படம் பார்த்தவர்கள் 20 பேர் தான் இருக்கும்.

ஆனால் வசந்தபாலனின் டச் தான் படத்தின் ஸ்பெஷலாக இருந்தது.

---------------------------------------------------------------------------

வசந்தபாலன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் தோத்தவனை நாயகனாக வைத்து அவர் இயக்கிய வெயில் எனக்கு மிக மிக நெருக்கமான படம். அந்த படத்தில் வரும் பசுபதி கேரக்டர் கிட்டத்தட்ட நானே தான். பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டரில் அந்த படத்தின் க்ளைமாக்ஸ் நேரத்தில் நான் அழுத அழுகைக்கு தியேட்டரில் அமர்ந்திருந்த எல்லோரும் என்னை ஆறுதல்படுத்தினர். காருக்குள் கில்மா பண்ணிக்கிட்டு இருந்த ஜோடிகள் உள்பட.

 
அங்காடி தெரு படமும் அப்படித்தான். நான் படம் பார்த்து ஓவராக உணர்ச்சி வசப்பட்டு சேர்மக்கனி ரொம்ப கஷ்டப்படுறா, நானே கட்டிக்கிறேன்னு என் வீட்டம்மாக்கிட்டயே சொல்லி டின்னர் சாப்பிடும் போது நடுமுதுகிலேயே மிதி வாங்கினேன்

காவல் கோட்டம் நாவலை முன்பே படித்திருந்ததால் அரவாண் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முடிவு நேர்மாறாக இருந்தது. இருந்தாலும் வசந்தபாலனின் மீதான ரசிப்புத்தன்மை கொஞ்சம் கூட குறையவில்லை.

----------------------------------------------------------

படத்தின் எதிர்பார்ப்புகளுக்கு எனக்கான மிக முக்கிய காரணம் நாடகம். என் வயதையொத்த பலபேருக்கே தெருவோர நாடகங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. நான் சொல்வது எஸ். வி. சேகர், கிரேஸி மோகன் வகையறா நாடகங்களை அல்ல.

நான் வளர்ந்த திருவாரூர் பகுதிகளிலேயே 80களின் இறுதியில் நாடகம் வழக்கொழிந்து விட்டது. அப்படியே சில இடங்களில் நடந்திருந்தாலும் எனக்கு சிறு வயது என்பதால் அனுமதிக்க மாட்டார்கள்.

என் அம்மா வழி பாட்டி வீடு இருக்கும் நீடாமங்கலம் பகுதிகளிலும், என் பெரியம்மா வீடு இருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதிகளிலும் நடக்கும். சித்திரை திருவிழா காலங்களில் தவறாமல் எல்லா சுற்றுவட்டார கிராமங்களிலும் நடக்கும் நாடகம், கரகாட்டம் எல்லாவற்றையும் பார்ப்பேன்.

இரண்டு இரவுகள் முழுக்க நடைபெறும் நாடகங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. நாடகங்களுக்கு இடையே வரும் பபூன் காமெடிகள் இன்று அபத்தமாக தெரிந்தாலும் அன்று ரசித்து கைதட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கேன்.

இன்று அந்த மாதிரி நாடகங்கள் காணாமல் போய் விட்டன. முழு ராத்திரி கண்விழித்து பார்க்கும் பொறுமையும் மக்களுக்கு இல்லாமல் போய் விட்டது. என்னைப் போன்ற நாடக ஆர்வலர்களுக்கு உள்ளுக்குள்ளேயே அந்த நாடக கலாரசிகன் உறங்கிப் போய் விட்டான்.

ஆரூர் மூனா

Saturday, 29 November 2014

நாத்திகன் கோவிலுக்கு செல்லக் கூடாதா

ஒரு பதிவர் அவர், பெயர் வேண்டாமே. அவ்வப்போது வந்து என்னிடம் வாலன்டியராக சாட் பண்ணுவார். நான் ப்ரீயாக இருக்கும் போது பதிலளிப்பேன். நான் திருவாரூர்க்காரன் என்று அறிந்ததும் தேர் பற்றியும் மும்மூர்த்திகள் பற்றியும் விவாதிப்பார். எனக்கு தெரிந்தவற்றை நான் கூறுவேன். தல புராணம் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்.


திருவாரூர் பெரியகோவில் பற்றி ஆர்வத்துடன் நான் விவரித்ததை கவனித்த அவர் ஆன்மீக விஷயங்களை என்னிடம் சொற்பொழிவாக ஆற்றத் தொடங்கினார்.

அய்யா நான் நாத்திகன். இது பற்றி விவாதித்து, அதை நான் மறுத்து பேசி நமது நட்பு கெட்டு விடும், வேண்டாம். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, என் நம்பிக்கை எனக்கு. அப்படியே விட்டு விடுவோம். உலகத்தில் பேசுவதற்கு என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது வாருங்கள் விவாதிப்போம் என்றேன்.

உடனே என்னிடம் சண்டையிட தொடங்கி விட்டார். நம்பிக்கையில்லாத நீ எப்படி கோவிலுக்குள் நுழையலாம். என்ன அருகதை இருக்கு உனக்கு, நல்ல குடும்பத்தில் பிறந்தவங்க சாமி கும்பிடுவாங்க, அப்படி இப்படியென்று இன்னும் சொல்ல முடியாத நிறைய வார்த்தைகளை விட்டார்.

கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக கோவிலுக்குள் போக கூடாது என்றால் எப்படி. அது கோவில் மட்டுமல்ல, என் பயிற்சிக்களம். நான் கிட்டிபுள், கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டது அங்கு தான். 

ஒவ்வொரு வருடமும் முழு பரிட்சை காலத்தில் நண்பர்களுடன் குரூப் ஸ்டடி பண்ணியது அங்கு தான். தனியாக படிப்பதை காட்டிலும் நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது நிறைய பலனை தரும் என்பதை அறிந்ததும் அங்கு தான்.

நான் சைட் அடிக்கத் தொடங்கியது அங்கு தான். ஒரு தாவணி அணிந்த பெண்ணை ஒருதலையாக காதலிக்க தொடங்கியதும் அங்கு தான். திருவாரூர் போன்ற சிறு நகரங்களில் பெண்களை கண்ட இடத்திலும் காண முடியாது. ஒரு பார்க், பீச் போன்ற பொழுது போக்கு இடங்களும் கிடையாது. பெண்களை காண வேண்டுமென்றால் சாயரட்சை நடைபெறும் நேரத்திற்கு கோவிலுக்கு தான் செல்ல வேண்டும்.

இன்றும் கூட நான் திருவாரூரில் இருந்து மனசு சரியில்லாவிட்டால் கோவிலுக்கு சென்று என் நண்பர்களுடன் பொழுதை  செலவிட்ட பகுதியில் அமர்ந்து பழைய நினைவுகளை அசை போட்டால் போதும். என் எனர்ஜி லெவல் ஜிவ்வென்று ஏறி விடும்.

இப்படி என்னுடன் என் பால்ய வயதில் இணைபிரியாமல் இருந்த திருவாரூர் கோவிலை இது போன்ற அரைகுறைகளின் பேச்சை கேட்டு புறந்தள்ள முடியுமா என்ன.

ஆரூர் மூனா

Friday, 28 November 2014

காவியத்தலைவன் - சினிமா விமர்சனம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று சினிமா விமர்சனம் எழுதுகிறேன்.

1930களில் நாசரின் நாடக குழுவில் சித்தார்த்தும் பிரித்விராஜ்-ம் சைடுபார்ட்டாக நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் இலக்கு ராஜபார்ட்டாக இருக்கிறது. ஆனால் அவர்களின் வழிமுறையில் வித்தியாசம் என்னவென்றால் பிரித்விராஜ் ரஜினியாக நினைக்கிறார். சித்தார்த் கமல்ஆக நினைக்கிறார். ஒரு சமயத்தில் சித்தார்த் ராஜபார்ட்டாக நடிக்கத் துவங்கும் போது பிரித்விராஜ் பொறாமை கொள்கிறார். சித்தார்த்தின் ஜமீன்தாரின் மகளுடனான காதலை நாசரிடம் போட்டுக் கொடுக்கிறார். அதனால் கம்பெனியை விட்டு துரத்தப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

நாடககுழுவில் ஸ்திரீபார்ட்டாக நடிக்க வேதிகா வருகிறார். பிரித்விராஜ் வேதிகாவை விரும்ப வேதிகாவோ சித்தார்த்தை விரும்புகிறார். இதனால் சித்தார்த் மீது மேலும் வன்மம் கொள்கிறார் பிரித்விராஜ்.

நாசரின் மறைவுக்கு பிறகு நாடககுழு பிரித்விராஜ் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. சித்தார்த்தை நாடககுழுவை விட்டே துரத்துகிறார். பிறகு நாடககுழுவுடன் சித்தார்த் சேர்ந்தாரா வேதிகாவின் காதல் என்னவானது என்பதே காவியத்தலைவன்.
எதிலும் நல்லதே காணும் மனோபாவம் கொண்ட கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக சித்தார்த். சிறப்பாக நடித்துள்ளார். ராஜபார்ட் தேர்வுக்காக சூரபத்மனாக நடிக்கும் போது பிரமாதப்படுத்தி விடுகிறார். கண்டிப்பாக இந்தப்படம் அவரின் மார்க்கெட்டை இரண்டு படி உயர்த்திவிடுகிறது.

பிரித்விராஜ் கூட சித்தார்த்துக்கு கொஞ்சம் கூட சளைத்தவரில்லை. க்ளைமாக்ஸில் சித்தார்த்தின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து தான் தோல்வியினால் பட்ட அவமானத்தை கண்ணீர் மல்க சொல்லும் போது தியேட்டரில் எழுந்து நின்று கைத்தட்ட தோன்றியது. நீர் நடிகனய்யா.
வேதிகா புராண பாத்திரங்களில் பின்னி எடுக்கிறார். சித்தார்த்துக்காக காத்திருந்து அடையும் காட்சியிலும் பிரித்விராஜை புறம் தள்ளும் காட்சியிலும் அட போட வைக்கிறார்.

நாசர் பற்றி சிறப்பாக சொல்லாவிட்டால் தான் தப்பு. கண்டிப்பாக குறிப்பிட வேண்டியது பொன்வண்ணனின் நடிப்பை தான். ராஜபார்ட்டுக்கு கனகச்சிதமாக பொருந்துகிறார்.

காஸ்ட்யூம்கள் கனகச்சிதமாக இருக்கிறது. இயக்குனரின் மெனக்கெடல் தெரிகிறது.

எனக்கு பெரிய ஆச்சரியம் இசை தான். எந்த இடத்திலும் கம்ப்யூட்டர் கம்போசர் ஏஆர் ரஹ்மான் என்ற அடையாளம் தெரியவேயில்லை. அந்த கால இசை, இசைக்கருவிகள் என பின்னி பெடலெடுத்து இருக்கிறார். 

நெருடலான ஒரு விஷயம் லொகேஷன்கள். சுமாரான மசாலா இந்தி படமான ஆக்சன் ரீப்ளே படத்துக்கே 80களின் மும்பைக்கு மெனக்கெட்டு இருந்தார்கள். மதராஸபட்டிணம் படத்துக்கும் அப்படிதான் செய்திருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் படக்குழுவினர் மெனக்கெடவேயில்லை. காரைக்குடி பக்கம் செட்டியார் வீடுகளே போதும் என நினைத்து விட்டார்கள். 

ஐமீன் தங்குமிடம் மட்டும் தான் லொகேஷனுக்கு பொருந்துகிறது. கரண்ட் இல்லாத கிராமங்களில் லாந்தர் விளக்குகளை வைத்து மேடைக்கு வெளிச்சம் தரும் இடமும் சூப்பர். மற்ற இடங்கள் எல்லாம் சுமார் தான். அதே போல் சுதந்திர போராட்டம் கூட. பொருந்தவில்லை.

மற்றபடி படத்தில் தமிழகத்தின் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் உள்ள நாடககலையினை மேக்கப், நடிப்பு மூலம் மிரட்டியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் பகீர். 

பார்த்து ரசியுங்கள்.

ஆரூர் மூனா