Monday, 2 February 2015

கிழிந்து போன இன்றைய நாளின் டயரி பக்கம்

ஏகப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டி லோன் அப்ளை செய்திருந்தேன். அப்ளை பண்ணது சொசைட்டி அர்பன் பேங்க் லோன். அதுக்காக தாத்தாவை (லோன் அப்ளிகேசன், அதற்கான இணை டாக்குமெண்ட்கள் என்று பொருள் கொள்க, பின்னாடி தாத்தா வரும் போது தனித்தனியாக அறிஞ்சொற்பொருள் போட முடியாது) எடுத்துக்கிட்டு துணைக்கு குமார் என்பவரை அழைத்துக் கொண்டு கிளம்பினேன். 


குமாருக்கு ஒரு கிளைக்கதை உண்டு, எப்போ காரில் சென்றாலும் போகும் வழியில் சரக்கை போட்டுக் கொண்டு 100கிமீக்கு மேல் வேகத்தில் பறந்து உடன் செல்பவரையும் கதற வைப்பவர். நாலுமணி நேரத்தில் திருச்சி, ஆறு மணிநேரத்தில் மதுரை என கடந்ததை  மற்றவர்களிடம் சொல்லி பந்தா விட்டுக் கொண்டு இருப்பார்.

இன்று என் ஒட்டை டிவிஎஸ் விக்டரில் அமர்ந்து வந்தார். அயனாவரத்தில் வண்டியை முறுக்கி கட் அடித்து விரைந்தேன். ஓட்டேரி வந்ததும் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி இனிமேல் இந்த வேகம் சென்றால் வண்டியில் வரமாட்டேன் என்று இரைந்தார். திருவிளையாடல் நடத்தி பாடம் புகட்டிய சந்தோஷத்துடன் வண்டியை மெதுவாக செலுத்தினேன். 


சென்ட்ரல் பக்கம் இருந்த சொசைட்டிக்கு சென்று தாத்தாவை கொடுத்தால் தாத்தாவுக்கு மூக்கில் முடி இல்லை என்று திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இன்னும் முடி முளைக்க ஒரு மாசமாகும். அது வரை கடன்காரர்களுக்கு என்ன பதில் சொல்வது யோசித்தேன். 

யார் கடன்காரன். கடன் கொடுத்தவனுக்கு, வாங்கியவன் கடன்காரன். வாங்கியவனுக்கு கொடுத்தவன் கடன்காரன். அவ்வளவு தான் வாழ்க்கை. அல்ப காரணத்தால் தாத்தா திருப்பி விடப்பட்டார் என்று சொன்னால் நம்பவா போகிறார்கள். ஆளுக்கு தகுந்த மாதிரி எதாவது காரணம் சொல்லி இந்த மாதம் முழுக்க ஓட்ட வேண்டியது தான். அதற்குள் தாத்தாவுக்கு மூக்கில் முடி முளைக்க எர்வாமார்ட்டினை தேய்க்க வேண்டியிருக்கும்.


கூட வந்த பாவத்துக்காக குமாருக்கு பிரியாணி வாங்கித் தரணும். பெரியமேடு பிரியாணி வேண்டாம் என்று சொல்லி விட்டார். தாசமக்கான் வந்து ஒரு கடையில் பீப் பிரியாணி, சுக்கா, கறிவடை சாப்பிட்டோம். 

அந்த கடை பிரமாதமாக இருக்கும் என குமார் பில்ட்அப் செய்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். சுற்றி பீப்கறிக்கடைகள் சூழ அமைந்த பிரியாணி கடை அது. தக்காளிங்க, பொன்னி அரிசில பிரியாணி பண்ணியிருக்கானுங்க. நமக்கு பாஸ்மதியோ, சீரகசம்பாவோ இருந்தா தான் உள்ளே இறங்கும். கூட்டிட்டுப் போன குற்றத்துக்காக பல்லைக் கடிச்சிட்டு சாப்பிட்டு முடித்தேன். 


வெளியில் வந்ததும் திருநங்கைகள் சண்டை ஒன்று நடந்து கொண்டு இருந்தது. சண்டை விவரத்தையோ கண்ட காட்சிகளையோ வெளியில் சொன்னால் வாயில புண்ணு வந்துடும். இருந்தாலும் பரவாயில்லை என விவரித்தால் எனக்கு இருக்கும் மனநிலைக்கு ஆத்தா சரளமாக புழங்குவார்.

ஐ படத்துல அசிங்கமா காட்டிட்டானுங்க என்று சண்டை போடும் மகா ஜனங்களே அவர்கள் பொதுவில் எப்படி நாகரீகமா நடந்துக்கனும் என்பதை அவர்களுக்கு பாடம் எடுக்கவும்.

ஓட்டேரி பக்கமாக வந்தால் பொடிக்கடை ஸ்டாப்பிங் பக்கம் எல்லா குடிசை வீடுகளையும் இடித்து வைத்திருந்தார்கள். எப்படியும் அந்த பகுதி வாழ் மக்களை வெளியேற்றி சென்னைக்கு மிக அருகில் திருத்தணி பக்கமோ மாமண்டூர் பக்கமோ குடியேற்றி விடுவார்கள். எப்படியும் 100 வருடத்துக்கு மேல் அந்த பகுதி மக்கள் அங்கே வாழ்ந்திருப்பார்கள். ஒரே நாளில் எல்லாத்தையும் துடைத்து எறிந்து விட்டார்கள். வாழ்க ஜனநாயகம். 

இந்த ஊர் தன் அடையாளத்தை இழந்து புது வண்ணம் பூசிக் கொண்டு இருக்கிறது. இது நல்லதுக்கா. யாமறியோம் பராபரமே.

எல்லா இம்சைகளையும் கடந்து ஏரியா வந்து சேர்ந்தேன். முந்தைய நாட்களைப் போலவே இந்த நாளும் நாசமாய் முடிந்தது. நாளையிலிருந்து கடிவாளம் கட்டி தான் வெளியே செல்ல வேண்டும் போல.

வீட்டின் வெளியே "நான்" உடையை களைந்து விட்டு உள்ளே சென்றேன். வசந்தமுல்லை பொக்கை வாயில் சிரித்து தாவினாள். அட சொர்க்கம் இங்கே இருக்கிறது.

ஆரூர் மூனா

6 comments:

 1. அட...! இதுவல்லவோ சந்தோசம்...!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்கோ, நன்றி தனபாலன்.

   Delete
 2. வீடுதான் சொர்க்கம் என்பதில் சந்தேகமில்லை ! !

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள்

   Delete