Friday, 6 February 2015

வெள்ளிமூங்கா, ஒரு இனிய அனுபவம்

கடந்த வாரத்தில் ஒரு நள்ளிரவில் கொசுக்கள் திடீரென கடித்துத்துப்பி என் தூக்கத்தை கலைத்து எகிறிக் குதித்தன. இது போன்ற சமயங்களில் கண்விழித்தால் விடியும் வரை எனக்கு தூக்கம் வராது. வீட்டம்மாவும் செல்லமகளும் கொசுவலையில் சுகமாக தூங்க, தரையில் தூங்கியே பழக்கப்பட்ட நான், அன்றைய இரவை கழிக்க எழுந்து ஹாலுக்கு வந்து கணினியை முடுக்கினேன்.


சிலமணிநேரம் பேஸ்புக், கூகிள் பிளஸ், இத்யாதி வலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருந்த நான் யூடியுப் உள்ளே சென்று படங்களைத் தேட சிக்கியது வெள்ளிமூங்கா.

நிற்க. சத்தியமா விமர்சனம் பண்ணி உங்களின் கழுத்தை அறுக்கப் போவதில்லை. நான் படத்தில் ஆச்சரியப்பட்ட சில தருணங்களை மட்டும் உங்களுக்கு பகிர்கிறேன்.

கன்னாபின்னாவென்று ஏகப்பட்ட படங்களை பார்த்து பழகிய எனக்கு சின்ன சின்ன டிவிஸ்ட்களை முன்னாலேயே கணிக்கும் பழக்கம் உண்டு. அதுவும் 99 சதவீதம் சரியாகவே இருக்கும்.


படத்தில் காமெடியனாக வரும் அஜூ வர்கீஸ், தனது காதலியை கரெக்ட் செய்ய காதலியின் அப்பாவை பாம்பு கடித்து போது காப்பாற்ற செய்யும் அலப்பறை, உண்மையிலேயே புத்தம் புதிதாக ப்ரெஷ்ஷாக இருந்த நகைச்சுவை.

நான் கணிக்காத அல்லது கணிக்க முடியாத டிவிஸ்ட்டாக இருந்தது தான் அதன் பலம்.

அஜூ தனது காதலியை சைட் அடித்துக் கொண்டு இருக்கும் சமயம் காதலியின் அப்பாவுக்கு காலைப் பிடித்து அலற அங்கு செல்லும் அஜூ பாம்பு கடித்து விட்டதென்று கத்தி கூப்பாடு போட்டு, காதலி, காதலியின் அம்மா அப்பா எல்லோரையும் ஆஸ்பத்திரிக்கு கூப்பிடுவார். 


ஜீப்பில் காதலியை தன் அருகில் அமர வைத்து கதவோரம் அப்பாவை அமர வைத்து காதலியில் அப்பாவின் காலை வெளியில் நீட்டி வைத்து, அப்படி வெளியில் நீட்டப்பட்ட காலின் முனையில் சிகப்பு துணியை கட்டுவார். லாரிகளுக்கு வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் இரும்புக் கம்பிகளில் கட்டுவார்களே அது போல. 

காதலியின் அம்மாவும் ஜீப்பின் பின்னே அமர வண்டி கிளம்பும். ஆஸ்பத்திரியில் ஐசியு வாசலில் அஜூவும் அவரது காதலியும் பதற்றத்துடன் நின்றிருக்க  வெளியே வரும் டாக்டர் காப்பாற்றி விட்டோம். இருந்தாலும் அதிகம் பதற்றப் பட்டதால் பீபி அதிகமாகி, மயக்கத்தில் இருக்கிறார். இரண்டு நாள் கழித்து தான் வீடு செல்ல முடியும் என்று சொல்லுவார்.

காமிரா அங்கிருந்து திரும்ப காதலியின் அப்பா காலில் கட்டுடன் நொண்டி நொண்டி நடந்து வந்துக் கொண்டு இருப்பார். காமிரா ஜூம் ஆகி உள்ளே செல்ல காதலியின் அம்மா ஐசியுவில் படுத்திருப்பார்.

உண்மையில் அவருக்கு காலில் முள் தான் குத்தியிருக்கும், அஜூ காதலியின் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க காப்பாற்றுவது போல் சீன் போட அதனால் ஏற்பட்ட படபடப்பில் காதலியின் அம்மா பீபி அதிகமாகி மயக்கமாகி விடுவார். அதிலிருந்து அவரது காதல் புட்டுக்கும். நான் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கவே இல்லை, அதனால் ரொம்பவே பிடித்து இருந்தது.

அது போலவே நாயகன் பிஜூமேனனுக்கு எம்எல்ஏ சீட் கிடைத்து தன் உள்ளூர் எதிரிகள் எல்லாம் அவரை தோற்கடிக்க நினைத்திருக்க, தேர்தலில் தான் தோற்று விட்டால் எம்பி சீட் கிடைத்து எம்பி ஆகப் போவதாக கிளப்பி விட்டு அதனால் எதிரிகளே அவருக்காக வேலை பார்த்து எம்எல்ஏ ஆக்குவது பட்டைய கிளப்புகிறது.

இதே போன்ற விஷயத்தை காதலிலும் செய்வது, உண்மையில் நாயகியின் அம்மா நாயகனின் பள்ளித் தோழி எனும் சுவாரஸ்யம், பேச்சுக்கு பேச்சு டெல்லியுடன் தொடர்பு என கிளப்பி விடுவது என படம் முழுக்க சுவாரஸ்யங்கள் விரவிக் கிடக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை பார்த்து மகிழுங்கள்.

நான் படம் பார்த்து முடிக்கும் போது விடிந்தே விட்டது. அதற்கப்புறம் பத்து மணிவரை வரை தூங்கியது வேறு விஷயம்.

ஆரூர் மூனா

6 comments:

 1. தூக்கத்தை தொலைத்து... என்னவொரு ரசனை...!

  ReplyDelete
  Replies
  1. அந்த இரவை கடந்தாகனுமே டிடி.

   Delete
 2. நானும் பார்த்தேன். கொஞ்சம் நடுவில் சவசவன்னு இருந்தது:(

  இதையே தமிழில் எடுத்தால் பிரபலமான ஒருவர் நடிச்சா எப்படி இருக்குமுன்னு கற்பனை செஞ்சு பார்த்தேன். நம்ம பிரபலங்கள் மிடில் ஏஜ் மேனா நடிக்க மாட்டாங்களே:-)

  பிஜு மெனோனின் தாயாராக வரும் கே பி ஏ சி. லலிதா.... அடிக்கடி உனக்கு நாப்பது வயசாயிருச்சுன்னு சொல்லிக் காட்டும்போது பிஜுவின் முகபாவம் பார்க்கணும், சூப்பர்!

  முன்னறியிப்பு பார்த்தீங்களா? மம்மூட்டி நடிப்பு சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிம்மா,

   நம்மாளுங்க நடிக்க மாட்டாங்களே, நிறைய ஹீரோயிசம் எதிர்பார்ப்பாங்களே.

   முன்னறியிப்பு இனிமேல் தான் பார்க்கனும்

   Delete