Sunday, 1 February 2015

நானும் என் பிரியாணியும் - பழசு

பிரியாணி. இந்த ஒரு வார்த்தை, அதன் ருசி என் வாழ்வில் ஏற்படுத்திய கிளர்ச்சிகள், மாற்றங்கள், நடந்த சுவையான சம்பவங்கள் இவற்றை தொகுத்து வழங்குகிறேன்,

சிறுவயதில் எனக்கு திருவாரூரில் என் அப்பா டீலக்ஸ் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து தரும் பிரியாணி, அடடா அதன் சுவை மாதம் இருமுறை வாங்கித்தருவார்,நானும் என் தம்பியும் போட்டிப்போட்டு திருப்தியுடன் சாப்பிடுவோம், நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு தெரிந்த வரையில் இந்த ஒரு கடை பிரியாணியை மட்டும் தான் சாப்பிட்டு இருக்கிறேன், பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் தொழிற்கல்வி பட்டயப்படிப்பு படிக்க சென்னை ஐசிஎப் வந்து விட்டேன். எனக்கான வெளியுலக வாசலை திறந்து விட்டது இந்த காலக்கட்டம் தான். சென்னையில் ஏராளமான பிரியாணி கடைகள், தோன்றும் போதெல்லாம் பிரியாணி தான். இருந்தாலும் அது, படித்த காலகக்கட்டம். மேலும் இந்த குடிப்பழக்கம் என்னிடம் இல்லாத நாட்கள் அவை, அந்த சமயத்தில் வில்லிவாக்கத்தில் உள்ள மகேஷ் ஓட்டல் பிரியாணி, அயனாவரம் நூர் ஹோட்டல் பிரியாணி. பெரம்பூரில் ரயில்வே கீழ்ப்பாலத்திற்கு அருகில் உள்ள ஒரு அசைவ ஹோட்டல் பிரியாணி(அதன் பெயர்ப் பலகையில் ராஜ்கிரண் தொடைக்கறி கடிப்பது போல் ஓவியம் தீட்டப்பட்டிருக்கும்) ஐசிஎப் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடை பிரியாணி ஆகியவை எங்கள் பகுதியில் மிகவும் புகழ் பெற்றவை.

படிப்பு முடிந்த பிறகு ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் சென்னை மண்டல அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட இடம் அது, 2001 முதல் நான் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த 2009 வரை நான் இருந்த நிலையே வேறு, நிர்வாக அலுவலர் என்பதால் அந்த நிறுவனத்திற்கு வரும் வெளியூர், வெளிநாட்டு விருந்தினர்களை விமான நிலையத்தில் பிக்அப் செய்ய கார் அனுப்புவது முதல் அவர்க்ள் தங்கியிருக்க விருந்தினர் இல்லம் ஏற்பாடு செய்வது, அவர்களது அலுவல் பணி முடியும் வரை உடன் இருப்பது, சென்னையை சுற்றிப்பார்க்க உறுதுணையாக இருப்பது, திருப்பி ஏர்போர்ட்டில் இறக்கி விடும் வரை என்னுடைய பொறுப்பு. அந்த நாட்களில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது என்னுடைய பொறுப்பு என்பதால் எனக்கு பிடித்த கடையில் பிரியாணி வாங்க வண்டி ஓட்டுனரை அனுப்புவேன். இது வாரம் மூன்று நாட்கள் குறைந்தது இருக்கும் என்பதால் என் பிரியாணி நண்பன் என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தான். ஊருக்கு திரும்பி சென்ற விருந்தினர்கள் எல்லாம் என்னையும், பிரியாணியையும் மறக்க முடியவில்லை என்று மின்னஞ்சல் அனுப்பும் அளவுக்கு அவர்களையும் பிரியாணி பிரியன் ஆக மாற்றியவன் நான்.

பிரியாணி வாவ். எங்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் இருந்த காரணத்தால் அடிக்கடி நான் அங்கு சென்று வருவேன். ஐதராபாத்தில் லக்டிகபூல் என்ற பகுதியில் உள்ள ஹோட்டல் அசோகாவில் தான் நான் வழக்கமாக தங்குவேன், அங்கு சென்றது முதல் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் நமக்கு பிரியாணி தான். ஹோட்டல்காரர்கள் சாப்பாடு நேரத்தில் என்ன வேண்டும் என்று கேட்காமல் பிரியாணியை அனுப்பி விடுவார்கள், இந்தியாவில் வேறு எந்த ஊரில் சாப்பிடும் பிரியாணியை விட ஐதராபாத்தில் உள்ள பிரியாணிக்கு மட்டும் அந்த சுவை வருகிறதோ தெரியவில்லை, அங்கு ஓரு கடை தான் என்றில்லை, எந்த கடையில் சாப்பிட்டாலும் அந்த சுவை வரும்.
அதிலும் செகந்திராபாத்தில் உள்ள பாரடைஸ் ஹோட்டல் தான் மிகுந்த பேமஸ். நள்ளிரவு, விடியற்காலை நேரத்திலும் அங்கு சுடச்சுட பிரியாணி கிடைக்கும். மதிய நேரத்தில் அலுவலகத்திலேயே கேண்டீன் இருக்கும். நண்பர்கள் சாப்பிட அழைப்பார்கள், நான் அவர்களையும் அழைத்துக் கொண்டு வெளியே பிரியாணி சாப்பிட வந்து விடுவேன். அதிலும் அங்கு மட்டும் தான் பிரியாணியில் எந்த ஒரு மசாலாவும் வாயில் பிடிபடாது, அப்படியே எடுத்து சாப்பிடும் வகையில் இருக்கும். பட்டை, ஏலக்காய், இலை இது போன்ற எதுவும் சிக்காது. ஆனால் அவற்றின் வாசம், சுவை மட்டும் இருக்கும்.
அது மட்டும் இல்லை, ஒரு முறை சென்னை ஏர்போர்ட் எதிரில் உள்ள பகுதியில் மிலிட்டரி ரம் கிடைக்கும், ஒரு முறை நானும் என் நண்பன் எட்வினும் ஒரு புல் ரம் வாங்கி அங்குள்ள ஒரு மைதானத்தில் ஒரு ஏழு மணியளவில் ஆரம்பித்தோம், எட்டு மணிக்கு முடிந்தது, பைக் எடுத்து ரூமுக்கு வரும் போது ஏர்போரட் எதிரில் வரும் போது நான் பிரியாணி சாப்பிட்டு போகலாம் என்று கூறினேன். அவன் சுவையான பிரியாணி என்றால் ஐதராபாத் தான் போக வேணடியிருக்கும் என்று கூறினான். போதையில், விடுறா வண்டியை ஏர்போர்ட்டுக்கு என்று கூறி பைக்கை பார்க் செய்து விட்டு அப்பொழுது இருந்த ஏர்டெக்கான் விமானத்தில் அந்த நிலையிலேயே ஏறி ஐதராபாத் சென்றோம். ஏறுவதற்கு முன் அங்குள்ள எனது நண்பன் சீனிவாசலுவுக்கு போன் செய்து விட்டதால் அவன் கார் எடுத்து வந்து ஏர்போர்ட்டில் நின்றான். வண்டியில் ஏறினோம்.

நேரே பாரடைஸ் ஹோட்டல் சென்றோம். வழியில் பத்தவில்லை என்பதால் அங்கு ஆளுக்கு ஒரு குவாட்டரை சாய்த்து விட்டு பிரியாணியை புல் கட்டு கட்டிவிட்டு கையில் பார்சலும் வாங்கிக் கொண்டு திரும்பி ஏர்போர்ட் வந்தோம். அப்பொழுது 11 மணிக்கு ஒரு விமானம் இருந்தது, டிக்கெட்டும் இருந்ததால் புறப்பட்டு 12 மணிக்கு சென்னை வந்து விட்டோம். பிறகு என்ன மறுநாள் முழுக்க சென்னையில் ஐதராபாத் பிரியாணி தான். ஆனாலும் சென்று வந்த செலவுக்கு பங்கு போடும் போது சண்டை போட்டு மாலை சமாதானத்திற்கு மீண்டும் சரக்கு போட்டது தனிக்கதை.

எங்கு சென்றாலும் அந்தந்த ஊர் ஸ்டைல்களில் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டவன் நான். 2004ம் ஆண்டு இறுதியில் கேரளாவில் திருவனந்தபுரத்திலுள்ள கழக்கூட்டம் என்ற பகுதியில் கின்ப்ரா பார்க் என்ற சினிமா பார்க்கில் அனிமேஷன் பார்க் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜக்ட்டில் நிர்வாக அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டேன்.

அது எங்களது கம்பெனியில் சிறிய ப்ராஜக்ட் என்பதால் அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மினிஸ்ட்ரேசன் இரண்டும் நானே, அங்கு சென்றும் என் பிரியாணி வேட்டையை விடவில்லை. அங்கு ஓருநாள் விட்டு ஒருநாள் வங்கி செல்லும் பணியிருக்கும். வங்கியோ பத்மநாதசாமி கோயிலின் எதிர்புறம் உள்ள பார்க்கின் பின்புறம் இருக்கும், அங்கு பணம் டிராப் செய்ய செல்லும் போதெல்லாம் செலானை கொடுத்து விட்டு டோக்கனை வாங்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள பத்மநாபா தியேட்டருக்கு பின்புறமுள்ள ஒரு ஹோட்டலுக்கு மதிய சாப்பாட்டு நேரத்துக்கு நானும் என்னுடன் வரும் கார் டிரைவரும் சென்று விடுவோம்.

கேரளா பிரியாணி வித்தியாமான முறையிலும், சுவையிலும் சமைக்கப்பட்டிருக்கும். எப்படியெனில் சமைக்கும்போதே சாதத்தையும் மசாலாவையும் கலக்க மாட்டார்கள். கேட்கும் போது கொண்டு வரும் பாத்திரத்தில் அடிப்பகுதியில் சாதம் நடுப்பகுதியில் மசாலாவும் மேல்பகுதியில் சாதமும் வைத்துக் கொடுப்பார்கள். அருமையா சுவையாக இருக்கும் அங்கு பிரியாணியை சுவைத்து விட்டு அருகில் உள்ள பழரசக்கடையில் ஷார்ஜா என்று ஒரு ஜூஸ் கிடைக்கும். அதையும் சாப்பிட்டால் கேபிள் அண்ணன் ஸ்டைலில் சொல்வதென்றால் டிவைன்.

அந்த ஷார்ஜா என்ற ஜூஸ் பால் கட்டி அதாவது பால் பாக்கெட்டை ப்ரீசரில் வைத்து கட்டியான பின்பு, உடைத்து அந்த பால் கட்டியுடன் வாழைப்பழம், சர்க்கரை கலந்து அடித்து தருவார்கள். அந்த ஜூஸை நான் வேறு எந்த ஊரிலும் சாப்பிட்டதில்லை, யாருக்காவது அந்த ஜூஸ் சென்னையில் கிடைக்குமென்றால் சொல்லுங்கள். மீண்டும் சுவைத்து பார்க்க வேண்டும் போல் உள்ளது.

அதை விட கூத்து என்னவென்றால் எங்களது ப்ராஜக்ட்டில் தமிழர்கள் அதிமென்பதால் சுமாராக சமைக்கும் ஒரு பையனை வேலைக்கு வைத்திருந்தேன். சில மாதங்களுக்கு பிறகு ஒரு மலையாள சமையற்காரர் வேலைக்கேட்டு வந்தார். அவரிடம் பிரியாணி சமைக்கத்தெரியுமா என்று கேட்ட போது மதியம் அவர் வீட்டில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். சாப்பிட்டுப்பார்த்தேன். அவ்வளவு தான் அன்றிலிருந்து அவர் தான் பிரதான சமையற்காரர். பிறகென்ன நினைவு வரும்போதெல்லாம் மெஸ்ஸில் பிரியாணி தான்.

ஞாயிற்றுக் கிழமையானால் காலையிலேயே சரக்கு துவங்கி விடும். காலையில் இருந்தே பிரியாணி வரத்துவங்கி விடும். பின்புறமுள்ள பாக்கு தோட்டத்தில் அன்று முழுவதும் கிரிக்கெட் விளையாடுவோம். இருட்டும் வரை கிரிக்கெட் கூடவே சரக்கு, அவ்வப்போது பிரியாணி அந்த ஒரு நாளே அந்த வாரம் முழுவதும் வேலை செய்வதற்குரிய உற்சாகத்தை கொடுத்து விடும்.

ஜாலியாக இருப்பதை மட்டும் பேசுகிறானே வேலை இருக்காதோ என்று எண்ண வேண்டாம். அது குறுகிய கால ப்ராஜக்ட் எனவே பகல், இரவு இரண்டு ஷிப்ட் வேலையும் இடையறாது நடந்து கொண்டே இருக்கும். எந்த நல்ல நாளுக்கும் நாங்கள் வீட்டுக்கு வர முடியாது. அதற்கிடையே நடக்கும் ஞாயிற்றுக்கிழமை போன்ற சம்பவங்கள் மற்றும் பிரியாணி ஆகியவையே எங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். அந்த ப்ராஜக்ட்டில் ப்ராஜக்ட் மேனேஜர் தவிர மற்ற அனைவரும் பேச்சிலர்கள். அதனால் இவையே எங்களுக்கு இன்றும் மறக்க முடியாத நினைவுகளாக நெஞ்சில் நின்கின்றன. ஒரு வருடத்தில் ப்ராஜக்ட் முடிந்ததும் மீண்டும் சென்னை மண்டல அலுவலகத்திற்கே திரும்பி விட்டேன். கேரளாவில் அந்த நாட்களும் பிரியாணியும் என்றும் வாழ்வில் மறக்க முடியாதவை.

ஆரூர் முனா

No comments:

Post a Comment