Friday, 20 March 2015

ரயில் பயணங்களில் - பழசு 2011

இப்பொழுது எல்லாம் ரயில் பயணம் என்பது நியாயமாக பணம் கொடுத்து செல்பவனுக்கு கிட்டாது என்றே தோன்றுகிறது. திங்கள் கிழமை சொந்த ஊரில் நடக்கும் திருமணத்திற்காக நாளை இரவு திருவாரூர் செல்ல வேண்டியிருந்தது. பல வருடங்களாகவே ஊருக்கு பேருந்திலோ அல்லது காரிலோ மட்டும் சென்று கொண்டிருந்ததால் மாறுதலுக்காக இந்த முறை ரயிலில் செல்லலாம் என்று முடிவெடுத்து டிக்கெட் முன்பதிவு செய்ய ஆவடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள முன்பதிவு நிலையத்திற்கு காலை 07.00 மணிக்கெல்லாம் சென்றேன்.

நண்பர்கள் தட்கலில் எடுக்கும் முறையே ஏற்கனவே சொல்லி அறிவுறுத்தியிருந்ததால் சீக்கிரம் சென்ற நான் அங்குள்ள கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். எனக்கு முன்னால் 80 பேர் வரிசையில் நின்றிருந்தார்கள். அப்பாவிகளா என்று நினைத்துக் கொண்டு நானும் வரிசையில் நின்றேன். 7மணியிலிருந்து வரிசையில் நின்று 9மணிக்கு என்முறை வந்தது. சென்று முன்பதிவு விண்ணப்பத்தை கொடுத்தால், வெயிட்டிங் லிஸ்ட் 40 என்றார்கள். கடுப்பாகி விட்டது, அவர்களிடம் என்ன சொல்வது, முனகிக் கொண்டே வெளியில் வந்தேன்.


என் நண்பன் ஒருவனிடம் இதுபோல் டிக்கெட் எடுக்கப்போய் வந்த கதையை சொன்னேன். உடன் அவன் ஒரு ரயில் டிக்கெட் ஏஜெண்ட் நம்பரை கொடுத்து தொடர்பு கொள்ள சொன்னான். நான் அந்த நம்பரில் உள்ளவரிடம் கேட்டால் டிக்கெட் தயார் என்று் கூடுதலாக ரூ200 கொடுத்தால் டிக்கெட் கிடைக்கும் என்றும் கூறினான். இதற்கு நான் பேருந்திலேயே செல்லத்தயார் என்று கூறி விட்டு வந்து விட்டேன்.

எவ்வளவோ வட இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு அலுவல் காரணமாக பலமுறை சென்றிருக்கிறேன். அந்தப் பயணங்கள் பெரும்பாலும் நான் மட்டுமே செல்லும்படி இருக்கும். எனவே துணைக்கு மாவீரன் நெப்போலியன் அல்லது VSOP ஆகியோர் கூல்டிரிங்ஸ் பாட்டில்களில் மிக்ஸ் பண்ணி என்னுடன் இருப்பர். கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து இந்த முறை ரயிலில் செல்லலாம் என்று முடிவெடுத்து அதுவும் திருமணமாகி இத்தனை நாட்களில் முதன்முறையாக என் மனைவியுடன் செல்லலாம் என்று அதுவும் மிஸ்ஸானதால் வந்த கடுப்பு இது.

சிறுவயதில் விடுமுறைக்காக திருவாரூரிலிருந்து சென்னை வந்து விடுமுறை நாட்களை மாமா வீட்டில் கழித்து விட்டு திரும்பி செங்கோட்டை பாஸஞ்சரில் மயிலாடுதுறை வரை வந்து அங்கிருந்து மயிலாடுதுறையிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் ரயிலில் ஏறி திருவாரூர் செல்வோம்.

அந்தப் பயணத்தில் திருவாரூரிலிருந்து சென்னை செல்லும் போதும், சென்னையிலிருந்து மயிலாடுதுறை வரையும் உள்ள பயணம் இருட்டில் இருப்பதால் அவ்வளவாக ஈர்க்காது. ஆனால் காலை 06.00 மணிக்கு மயிலாடுதுறையில் இறங்கி பல் துலக்கிய பிறகு ரயில் நிலையத்தில் காலை சிற்றுண்டியாக இட்லி வடை அப்பா வாங்கித்தருவார். அதை ரயில் நிலையத்தில் அமர்ந்து சாப்பிடும் போது, அடடா அதன் சுவையே தனி. பிறகு 07.00 ரயில் மயிலாடுதுறையிலிருந்து புறப்படும். அது செல்லும் பாதையே மிகுந்த ரசனையாக இருக்கும்.

ஆற்றுப்பாலங்கள், இரு பக்கமும் தோப்புகள் என சுற்றுப்புறமும் அந்த காலை ரம்மியமான சூழ்நிலையும் அருமையாக இருக்கும். பிறகு +2 முடித்த பிறகு நான் படிப்பதற்காக சென்னைக்கு வந்து இங்கேயே தங்கி விட்டதாலும் பேருந்து பயணம் மட்டுமே வகுப்பு நேரத்திற்குரிய வசதியாக அமைந்து விட்டதால் அப்போதிலிருந்து பேருந்து பயணம் மட்டுமே. இப்பொழுதெல்லாம் கார் அல்லது ஆம்னி பஸ் மட்டுமே.

தற்பொழுது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரை பிராட்கேஜ் பணிகள் நடப்பதால் ரயில்கள் மயிலாடுதுறையிலிருந்து கும்போணம், தஞ்சாவூர் வழியாக திருவாரூர் செல்கின்றன. மீண்டும் இந்த மார்க்கத்தில் ரயில் பயணம் துவங்கிய பின்பே நான் அந்த பயண சுகத்தை அனுபவிக்க முடியும்.


ஆரூர் முனா

1 comment:

  1. இப்போதுதான் பாதை அகலமாகி விட்டதே, மனம் இனிக்க போய்வாருங்கள் நண்பரே!
    த ம 1

    ReplyDelete