Friday, 20 March 2015

மயக்கம் என்ன - பழசு 2011

காலையிலேயே என் மனைவி இன்று விரைவாக அலுவலகம் செல்ல வேண்டும் என்று 07.00 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டாள். சரி என்னடா செய்யலாம் என்று யோசித்து இணையத்தை திறந்து ராக்கி தியேட்டர் வெப்சைட்டை திறந்தால் 07.30 மணிக்கு மயக்கம் என்ன சிறப்பு காட்சி என்று குறிப்பிட்டிருந்தது. உடனே கிளம்பி விட்டேன். 10.30 மணிக்கெல்லாம் படம் முடிந்து விட்டது. மழையும் பெய்வதால் தியேட்டரில் கூட்டமும் இல்லை.

மயக்கம் என்ன படத்தின் கதைக்குள் செல்வோமா?

கார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) ஒரு போட்டோகிராபர். மிகப் பெரிய Wild Life Photographer ஆக வேண்டும் என்ற கனவுகளோடு இருக்கிறான். பெற்றோர் இல்லை. நான்கு நண்பர்களுடன்(இரண்டு ஆண் நண்பர்கள், இரண்டு பெண் நண்பர்கள்) சேர்ந்து அவனும் அவனது தங்கையும் வளர்கிறார்கள். நான்கு நண்பர்களின் ஒருவன் சுந்தர், அவன் அவனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுடன்(கதாநாயகி ரிச்சா) டேட்டிங்கில் உள்ளான். ஆனால் அவளோ தனுஷை காதலிக்கிறாள். ஆனால் தனுஷ் உள்ளுக்குள் அவளை காதலிக்கிறார், வெளியில் நண்பர்களுக்காக அவளை வேண்டாம் என்கிறார். பிறகு பிரச்சனை அனைவருக்கும் தெரிய வந்து தனுஷூக்கும் ரிச்சாவுக்கும் திருமணம் நடக்கிறது. அதன் பிறகு நடக்கும் ஒரு விபத்தில் தனுஷூக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. தனுஷ் அந்த பிரச்சனையில் இருந்து மனைவியின் உதவியுடன் வெளிவந்து மிகப் பெரிய Wild Life Photographer ஆக வாழ்வில் ஜெயிப்பதே கதை.

தனுஷ் பிரமாதமாக நடித்துள்ளார். மிக இயல்பாக அவருக்கு பொருந்துகிறது. படத்தில் அவரது பட்டப்பெயர் ஜீனியஸ். ரிச்சாவைப் பார்த்த உடன் அவர் கூறும் வார்த்தை "போடி முண்டகலப்பை". தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது. மனநலம் சரியில்லாத காலக்கட்டத்தில் தன்னுடைய நெருங்கிய தோழியின் திருமணத்திற்கு வந்து மாப்பிள்ளையை பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்து விட்டு தன்னை எல்லோரும் புறக்கணிக்கிறார்கள் என்று புலம்பும் போது அசத்துகிறார்.

ரிச்சா கங்கோபாத்யாய படத்தின் ஹீரோயின். இவரை நான் "தி லீடர்" தெலுங்கு படத்தில் பார்த்துள்ளேன். ஆனால் அந்தப்படத்தை டிவியில் பார்த்ததால் அந்த அளவு ஈர்க்கவில்லை. ஆனால் இந்தப்படத்தில் நடிப்பில் அசத்துகிறார். மிகப் பொறுமையாக மனஉறுதியுடன் உள்ள போதும், தனுஷை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் போதும் நன்றாக நடித்துள்ளார். மிக அழகாக உள்ளார் (கொஞ்சம் ஜொள்ளு கூட விட்டேன் ஹிஹிஹி). தனுஷ் திருமணத்தில் கலாட்டா செய்ததால் மற்றொரு நண்பன் முன் கண்ணீர் விட்டு அழுததும் அவன் வந்து ரிச்சாவை கட்டியணைத்து ஆறுதல் கூறும் போது தனுஷை விட்டு விட்டு தன்னிடம் வந்துவிடும் படி கூறும் போது, மறுத்து விட்டு தனுஷ் மீதான காதலை சொல்லும் போதும், அந்த பிரச்சனையை லாவகமாக தீர்க்கும் போதும் அசத்துகிறார்.

மற்ற நண்பர்களாக வருபவர்கள் அனைவரும் ஓகே. அதிலும் சுந்தராக வருபவர் மிக அருமையாக நடித்துள்ளார். தனுஷூடன் ரிச்சாவுக்கு திருமணமாகும் போது திட்டிக்கொண்டே வாழ்த்தும் போது தியேட்டர் சிரிப்பில் அதிர்கிறது. பாடல்கள் பார்க்க அருமையாக உள்ளது. .ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார். பின்னணி இசையும் நன்றாக உள்ளது. குறிப்பா ‘வெண்ணிலவே’ பாட்டுக்கு தனுஷ் - ரிச்சா ஆடி முடிக்கவும் வந்த பின்னணி இசை அற்புதம்.

தனுஷூக்கு திருமணமாகி விட்டதாலும் ரஜினி மாமனார் என்பதாலும் தான் ஒரளவுக்கு சில காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் அந்த பேருந்து நிறுத்தத்தில் உணர்ச்சிவசப்பட்டு இருவரும் நெருங்கும் போது உதட்டு முத்தம் அழுத்தமாக இருந்திருக்கும். திருமணத்திற்கு பின்பு வரும் அந்தரங்க காட்சிகளும் அரையிருட்டில் அவ்வளவு டீடெயிலாக காட்டப்படாமல் முடிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் செல்வராகவன் அவரது உணர்வுகளுக்கு அந்தக்காட்சிகள் இன்னும் ஆபாசமாக இருந்திருக்கும்.

இது ஒரு மனநலம் பாதிப்பு பற்றி பட்டும் படாமல் சொல்லும் படம். படம் பார்க்கும் நமக்கு கொஞ்சம் பொறுமை இருந்தால் படத்தை பார்க்கலாம், படம் மிகவும் மெதுவாக செல்கிறது. சில காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. வித்தியாசம் என்றால் இது தானா. எனக்கு பிடிக்கவில்லை.

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படத்துடன் ஒப்பிட்டால் இது வெற்றிப்படமே.

ஆரூர் முனா

No comments:

Post a Comment