Tuesday, 10 March 2015

ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 3

இந்த தொடருக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியடைந்து தகவல்களை நிறைய ரயில்வே ஆட்களிடம் சேகரிக்கத் தொடங்கியுள்ளேன். ஆனால் அதிகபட்ச ஆர்வம் வேகத்தை மட்டுப்படுத்தி தொடரை காலி செய்து விடுமே என்று அஞ்சுவதால் இந்த பகுதிக்கு அப்புறம் இத்தொடர் வாரம் ஒரு நாள் வருமாறு முறைப்படுத்திக் கொள்கிறேன்.


பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் எனப்படும் தொழிற்சாலை பெரம்பூரில் உள்ளது. இது தொடங்கப்பட்ட வருடம் 1856. நினைத்துப் பாருங்கள், 25 வருடம் ஒரு தலைமுறை என்று வைத்துக் கொண்டாலும் ஏழு தலைமுறை ஆட்கள் வேலை செய்துள்ள பெருமை கொண்டது இது. அதாவது நம் தாத்தாவுக்கு தாத்தாவின் தாத்தா காலம்.

இத்தகைய பெருமை கொண்ட தொழிற்சாலையில் தான் நான் பணிபுரிகிறேன். அந்த காலகட்ட கட்டிடங்கள் இன்னும் தொழிற்சாலையின் உள்ளே இருக்கின்றன. தமிழகத்தின் முதல் ரயில் சென்னை ராயபுரம் - ஜோலார்பேட்டை இடையே ஓடியது. அந்த ரயில் கூட இங்கே தான் தயாரிக்கப்பட்டதாம். ஐசிஎப் தொடங்கப்படும் வரை ரயில்கள் இங்கே தான் தயாரிக்கப்பட்டுள்ளன.


ஆசியாவின் மிகப் பெரிய மரஅறுவை ஆலை இங்கு தான் உள்ளது. 90 அடி நீளமுள்ள, ஐந்து ஆட்கள் சேர்ந்து மரத்தை கட்டிப்பிடித்தாலும் தொட முடியாத விட்டம் கொண்ட தேக்கு மரங்கள் அந்தமானில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டதாம்.

துறைமுகத்தில் இருந்து ரயில் மூலம் வந்து உள்ளே கொண்டு செல்லப்படும் மரம் பலகைகளாக அறுக்கப்பட்டு ரயில்கள் செய்யப்படுமாம். இப்போது போல் இரும்பில் ரயில்பெட்டிகள் அந்த காலத்தில் தயாரிக்கப்படவில்லை. முழுவதுமே மரப்பலகைகள் மூலம் தான் தயாரிக்கப்பட்டனவாம்.


அறுக்கப்பட்ட பலகைகள் தேவைக்கு ஏற்ப வெட்டப்பட்டு ஆணிகள் ரிவிட்டுகள் மூலம் இணைக்கப்பட்டு ரயில்பெட்டிகளாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன. தளம் (Flooring) கூட மரத்தினால் தான் செய்யப்பட்டுள்ளன.

தரைப்பகுதிக்காக மரங்கள் வரிசையாக அடுக்கி ரிவிட்டுகள் அடிக்கப்பட்டு அதன் மீது சிமெண்ட் கலவை பூசி, தண்ணீர் இந்த தளத்தில் நின்றால் தளம் பாதிக்கப்படுமல்லவா, அதற்காக தளத்தில் நிற்கும் தண்ணீர் வடிந்து ஓடுவதற்காக வாட்டம் பார்த்து தளம் பூசப்படுமாம். அதன் மேல் ரெட் ஆக்சைட் பெயிண்ட் பூசப்பட்டு தயாரானது அந்த காலத்து ரயில்களின் தளம்.

ஒரு ஐம்பது பேர் கொண்ட பெரிய குழு இணைந்து இரண்டு நாட்கள் வேலை செய்தால் தான் ஒரு ரயில்பெட்டியின் தரைத்தளம் வேலையை செய்து முடிக்கப்படும் என்றால் மனித ஆற்றலின் மகத்துவம் எத்தகையது என்று தெரிந்து கொள்ளுங்கள். 

ஒரு வருட காலம் ரயில்பெட்டி ஓடி முடித்த பிறகு POH (Periodically over hauling) க்காக தொழிற்சாலைக்கு வரும் போது தளம் சேதமடைந்து இருந்தால் தளம் முற்றிலும் புதியதாக மாற்றியமைக்கப்படும்.

காலம் செல்லச் செல்ல நிறைய ரயில்வே தொழிலாளர்கள் ஒய்வு பெற்ற பிறகு ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக மாற்றங்கள் வரத் தொடங்கின. இப்போ 19எம்எம் ப்ளைவுட் போட்டு ரிவிட் அடித்த பிறகு அதன் மேல் வேனிடைல் ஷீட் சொல்யூசன் மூலம் ஒட்டப்பட்டு தயாராகிறது.

இப்பொழுது ஒரு நாளைக்கு ஐந்து பேர் கொண்ட குழு இரண்டு ரயில்பெட்டிகளை தயார் செய்து வெளியில் அனுப்புகிறார்கள். எத்தகைய மாற்றம் தெரிகிறதா. வேலைப் பளுவே இல்லாமல் வண்டிகள் இன்று வெளியில் செல்கின்றன. நம் தாத்தாக்கால ரயில்வே தொழிலாளர்கள் சொற்ப சம்பளத்திற்கு கடுமையான உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். 

இத்தனை பெருமை கொண்ட ஆசியாவிலேயே பெரிய மரஅறுவை ஆலை 1979ம்ஆண்டு ரயில்வே தொழிலாளர்களாலேயே, ரயில்வே வேலைக்கு ஆள் எடுக்கும் போது ரயில்வே தொழிலாளர்களின் மகன்களுக்கு வேலை வழங்காமல்  பணம் வாங்கிக் கொண்டு நிறைய மலையாளிகளுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கொளுத்தப்பட்டது வரலாற்று சோகம்.

இன்று கூட அதே நிலையில் அந்த மரஅறுவை ஆலை இடிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து ஆவடி மார்க்கமாக செல்லும் ரயிலில் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில் நிலையத்தை கடந்ததும் இடது புறம் அந்த ஆலையை பாருங்கள்.

ரயில் நிலையத்தில் இறங்கி வந்து பார்த்தால் 170 ஆண்டுகால வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் அந்த எரிந்து போன மரஅறுவைஆலையை இன்னும் தெளிவாக பார்க்கலாம்.

(இன்னும் வரும்)

ஆரூர் மூனா

11 comments:

 1. Replies
  1. நன்றி சௌமித் ராஜ்குமார்

   Delete
 2. வாரம் ஒருவாட்டிதான் போடுவேன்னு சொல்றீங்க, மேட்டர இன்னும் கொஞ்சம் சேர்த்தி போடுங்க தலைவா...

  ReplyDelete
 3. எங்க மில் பக்கம் தானே...? பார்த்துள்ளேன்... சென்றும் உள்ளேன்...

  மறக்காம வாரம் ஒரு முறை தொடர்க...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக, நன்றி டிடி

   Delete
 4. என் தந்தை ரயில்வே அதிகாரியாக வேலை பார்த்தவர். அவருடன் சேர்ந்து நான்கைந்து முறை கோச் பேக்டரிக்குள் வந்திருக்கிறேன். நான் சிறுவயதில் பார்த்த மாதிரித்தான் இப்போதும் இருக்கிறது.

  ரயில்வே சம்பந்தமான தொடர் என்றதும் ஒரே மூச்சில் ஆனா ரூனா எக்ஸ்பிரஸ் மூன்றையும் படித்து விட்டேன். நல்ல தொடர். அதிலும் நயன்தாரா, சொர்ணாக்கா என்று இடையில் காமெடி வேறு.

  தொடருங்கள்... தொடர்கிறேன்...!

  ReplyDelete