Thursday, 30 April 2015

வை ராஜா வை - சினிமா விமர்சனம்

ரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்களை அரங்கிற்கு திரட்டி சரியாக 07.30க்கு இன்று காட்சி இல்லை. உத்தம வில்லன் டிக்கெட் எடுத்தவங்களெல்லாம் வை ராஜா வை படத்திற்கு போங்க என்று அறிவித்தால் வேறு என்ன தான் நினைப்பதாம்.


எனக்கு கௌதம் கார்த்திக்கை பிடிக்காது. ஐஸ்வர்யா தனுஷ் எடுத்த 3 படத்தை முதல் நாள் முதல்காட்சி பார்த்து அனுபவப்பட்டவன் நான். எனக்கு எப்படி வை ராஜா வை படம் பிடிக்கும். ஆனாலும் படம் பாக்குற மாதிரி தான் தான் இருக்கு.

படம் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு நிமிடம் குறைவாகத் தான் இருக்கிறது. ஆனால் எனக்கு படம் போரடிக்கவில்லை. படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. நான் இதில் பாடல் காட்சிகள் மட்டும் விதிவிலக்கு.


ஈஎஸ்பி பவர் என்பது நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் பவர். இது எல்லா நேரத்திலும் எல்லாத்தையும் கண்டறியக்கூடியது இல்லை. சில நேரம் ஒரு மாதிரி மங்கலாக நினைவுக்கு வரலாம்.அவ்வளவுதான். ஆனால் அந்த லாஜிக் எல்லாம் இந்த படத்திற்கு ஒத்துவராது.

கௌதம் கார்த்திக் ஒரு மிடில்கிளாஸ் இளைஞன். சிறுவயதில் இருந்த ஈஎஸ்பி பவர் தந்தையின் கட்டுப்பாட்டினால் மறந்து போய் இருக்கிறது. பிரியா ஆனந்தை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார். வேலையும் கிடைத்து விடுகிறது. அந்த நேரத்தில் விவேக்கின் நட்பு கிடைக்கிறது.


கௌதம் கார்த்திக்கின் ஈஎஸ்பி பவர் விவேக்குக்கு தெரிந்து அந்த சக்தியை வைத்து ஒரு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஒரு கோடி ஜெயிக்கிறார். அவரிடம் பணம் இழந்த வில்லன் டேனியல் பாலாஜி கௌதம் கார்த்திக்கை வலுக்கட்டாயமாக மிரட்டி அவரது ஈஎஸ்பி பவரை வைத்து ஒரு சூதாட்ட கேசினோவில் பலகோடி ஜெயிக்க நினைக்கிறார். அவரை வீழ்த்த நினைக்கிறார் கௌதம் கார்த்திக். என்ன நடந்தது என்பதே வை ராஜா வை படத்தின் கதை.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு கௌதம் கார்த்திக்கை பிடிக்கவேயில்லை. அவரது முதல் படத்திலிருந்தே அப்படித்தான். அவரது முகவெட்டு கதாநாயக தோற்றத்தை தரவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் இந்த  படத்தில் அவர் இருக்கிறார். அவருக்கு அது போதும்.


பிரியா ஆனந்த் இந்த படத்திற்கு ஏன் என்றே தெரியவில்லை. இரண்டு பாட்டிற்கு வருகிறார். தேவையில்லாமல் கோவப்படுகிறார். பிறகு சேர்ந்து கொள்கிறார். காதலர்கள் என்றால் எப்பப்பாத்தாலும் எல்லார் முன்னாடியும் ஈஷிக்கிட்டே இருக்கனும்னு எவண்டா ஐஸ்வர்யாவுக்கு சொன்னது.

சதீஷ் மட்டும் அவ்வப்போது சில ஒன்லைனர்களால் சிரிக்க வைக்கிறார். விவேக் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறி விட்டார். காமெடி சரக்கு தீர்ந்து போனவருக்கு இது நல்ல மாற்று. மனோபாலா வரை இருந்தும் படத்தில் காமெடிகள் குறைவாகவே இருக்கிறது.

தனுஷ் க்ளைமாக்ஸில் படத்தை முடித்து வைக்க வருகிறார். அவ்வளவு தான்.  தேவையே இல்லாமல் கௌரவ தோற்றத்தில் டாப்ஸி, அப்புறம் எஸ்.ஜே. சூர்யா. படத்தின் வியாபாரத்திற்கு இந்த கௌரவ தோற்றங்கள் எந்தவிதத்திலும் உதவப் போவதில்லை.

படத்தின் இன்றைய வசூல் எல்லாமே உத்தமவில்லனுக்கு போக வேண்டியது. அவ்வளவு தொலைவில் இருந்து உத்தம வில்லன் பார்க்க கிளம்பி வந்தவர்கள் எல்லாம் சும்மா போக வேண்டாம் என்பதற்காக வைராஜாவை படம் பார்த்து சென்றார்கள். 

ஒரு சிறப்பு காட்சி கூட இன்று இல்லை. ஆனால் காலை எட்டு மணிக்கு ஐந்து திரையரங்கங்களிலும் வை ராஜா வை படம் சிறப்பு காட்சிகளாக அரங்கு நிறைந்து ஒடுகிறது. ஜெய் உத்தம வில்லன்.

ஏண்டா போனோம் என்று யோசிக்க வைக்கவும் இல்லை. பார்த்த பிறகு தலையை வலிக்கவும் இல்லை. இந்த நேரத்தில் 3 படம் 08.00 மணிக்காட்சி பார்த்து விட்டு இரவு வரை சரக்கடித்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

கொஞ்சநாள்ல படம் எப்படியும் டிவியில போட்டுடுவாய்ங்க. வெயிட் அண்ட் வாட்ச்.

ஆரூர் மூனா

Friday, 17 April 2015

காஞ்சனா - 2 - சினிமா விமர்சனம்

பேய்ப்படத்தில் நகைச்சுவை நுழைத்து ஹிட்டடிக்கும் கலாச்சாரத்தை தமிழ் சினிமாவில் ஆரம்பித்து வைத்தது லாரன்ஸ் தான். ஆனால் கண்டெண்ட்டை வைத்து மறுபடியும் ஹிட் கொடுக்க முடியும் என்பதை தன் திறமையால் நிரூபித்து இருக்கிறார்.


கங்கா காம்ப்ளக்ஸில் இரண்டு தியேட்டர்களில் திரையிட்டும் இரண்டுமே ஹவுஸ்புல் என்பதும் வந்திருந்த கூட்டத்தில் பெரும்பான்மையினர் குடும்பத்தினர் என்பதுமே இப்படத்தின் வெற்றிக்கு சாட்சி.

லாரன்ஸ் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். டிஆர்பி ரேட்டிங்கை கூட்டுவதற்காக ஒரு பாழடைந்த பங்களாவில் பேய் இருப்பதாக நம்ப வைக்க ஒரு புரோகிராம் செய்கின்றனர். அதை படம் பிடிக்க மகாபலிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் முகாமிடும் போது அங்குள்ள பேய்க் கூட்டம் ஒன்று டாப்ஸியை ஆக்கிரமிக்கிறது. அது சரியாக வில்லனை பழி வாங்கியதா என்பதே காஞ்சனா - 2 படத்தின் கதை.


படத்தின் மிகப் பெரிய ப்ளஸ், முதல் பாதி தான். தியேட்டரே வெடிச்சிரிப்பிலும் திகிலிலும் அல்லோகலப் படுகிறது. இரண்டாம் பாதி கொஞ்சம் சுமார் ரகம் தான். அதுவும் அந்த இராம. நாராயணன் பாணியிலான க்ளைமாக்ஸ் அய்யோ அய்யய்யோ தான்.

படப்பிடிப்புக்கு போகும் கூட்டணியில் இருக்கும் லாரன்ஸ், டாப்ஸி, சுமன், மயில்சாமி, மனோபாலா, சாம்ஸ் பயந்து பயந்தே சிரிக்க வைக்கின்றனர்.

லாரன்ஸ் இரண்டு வேடங்களில் வந்து அசத்தியிருக்கிறார். பேயைப் பார்த்து பயந்து போவது டாப்ஸிக்கு முன்னால் பயப்படாமல் இருப்பதை போல் நடிப்பது என மனுசன் நல்லாவே சிரிக்க வைக்கிறார். 


இரவில் தனியாக ஒன்னுக்கு போக பயந்துக் கொண்டு பாத்ரூமில் வாட்மேனாக மயில்சாமியை நியமிப்பது, பேயைப் பார்த்து அலறி அடித்து ஓடி வந்து படத்தில் இருக்கும் எல்லா பெண்களின் இடுப்பிலும் அமர்ந்து கொள்வது என காமெடியிலும்

மொட்டை சிவாவாக ஆக்சனிலும் பின்னியிருக்கிறார். 

டாப்ஸி அழகாகவே இருக்கிறார். நான் தான் முந்தைய படங்களில் சரியாக கவனிக்க தவறி விட்டேன். சரியான வடிவமைப்பு (ஸ்ட்ரக்ச்சர் என்பதின் சுமாரான தமிழாக்கம்). ப்ராம்ட்டிங் தெரியாத வகையில் சரியான உச்சிக்கிறார். சபாஷ் டாப்ஸி.

இரண்டாம் பாதி சற்று அலுப்பதற்கு காரணம் காஞ்சனா முதல் பாகத்தின் பெரும் வெற்றியடைந்த காட்சியை அதே மாதிரி இந்த படத்திலும் வைத்திருப்பது தான். முதல் பாதியில் காட்சிகளுக்கு மெனக்கெட்டிருப்பது போல் இரண்டாம் பாதியிலும் மெனக்கெட்டு இருக்கலாம்.

பேய் வீட்டில் தாப்ஸி குழுவினர் படப்பிடிப்பு நடத்திக் கொண்டு இருக்கும் போது காட்சியின் சுவாரஸ்யத்திற்காக இவர்களாக ஒரு பேய் அந்த காட்சியில் க்ராஸ் ஆவது போல் வைக்க, நிஜப் பேய் அவர்களின் பின்னால் க்ராஸ் ஆக இவர்கள் பயந்து அலற தியேட்டர் சிரிப்பில் பெரியதாகவே சிரிப்பில் அலறுகிறது.

படத்தில் பெர்பார்மன்ஸில் பின்னுவார் என்று நான் எதிர்பார்த்த ரேணுகாவை வீண் செய்து இருக்கிறார்கள். பேய்களிடம் கோவைசரளாவும் ரேணுகாவும் மாட்டி அடி வாங்கும் காட்சியில் குட்டிக்கரணம் அடித்து சிரிக்க வைக்கிறார்.

கோடை கொண்டாட்டத்திற்கு வந்திருக்கும் சிறுவர் சிறுமியர்களை கவர வந்திருக்கும் காஞ்சனா - 2 கண்டிப்பாக ஹிட் தான். அடுத்த பாகமும் வர இருக்கிறதாம்.

குறைகளாக சொல்ல ஆயிரம் லாஜிக் மீறல்கள் படத்தில் இருக்கிறது. அதையெல்லாம் புறந்தள்ளி குடும்பத்துடன் தியேட்டருக்கு போய் சிரித்து மகிழ்ந்து வாருங்கள்.

ஆரூர் மூனா

Thursday, 9 April 2015

ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 7

ரயில் பெட்டிகள் தயாராகி தொழிற்சாலையில் இருந்து வெளி வந்ததிலிருந்து 25 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும். அதன் பிறகு யார்டுக்கு கொண்டு வந்து கண்டமாக்கி விடுவார்கள். சில  பெட்டிகள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு டிபார்ட்மெண்ட் பணிகளுக்கென மாற்றிக் கொள்வார்கள்.


அந்த 25 ஆண்டு காலமும் வண்டி தொடர்ச்சியாக ஓடிக் கொண்டே இருக்க முடியாது. அப்படி ஓடினால் ரயில்பெட்டி பார்ட் பார்ட்டாக கழன்று விடும். இதை தவிர்க்க ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு முறை ஒர்க்ஷாப் கொண்டு செல்லப்பட்டு ஓவர்ஆயிலிங் செய்யப்பட்டு திரும்ப ரயில்களுடன் இணைக்கப்படும்.

அதைப் பற்றி இப்போது.

ரயில்பெட்டிகள் உள்ளே வந்தவுடன் LBR (Lower Bogie Repairshop)ல் வைக்கப்படும். பின்னர் வண்டியின் விவரங்கள் அந்தந்த பிரிவு பொறியாளர்களிடம் அளிக்கப்படும். பின்னர் அந்த பொறியாளர்கள் அவரவர் பிரிவு பணிகளை ஆய்வு செய்து குறிப்பெடுப்பார்கள்.


உதாரணமாக எனது செக்சன் வெஸ்டிபுள். இதற்கென ஒரு முதுநிலை பொறியாளர் இருக்கிறார். வண்டி LBR வந்தவுடன் வெஸ்டிபுள் ப்ரேம், ரப்பர், ப்ளேட், ரோலிங் ஷட்டர், ஹாண்ட் ரெயில், எல்பி ஷீட் போன்றவற்றை சோதித்து என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது என்பதை குறித்துக் கொள்வார்.

பின்னர் எந்தெந்த கேங்குகளுக்கு என்னென்ன வேலைகள் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பெழுதி தருவார். அதன்படி பணிகள் நடைபெறும். பணிகள் முடிந்தவுடன் பேஸின்பிரிட்ஜ் யார்டிலிருந்து வரும் சோதனை பிரிவு அதிகாரிகள் ரயில்பெட்டியை சோதித்து அனுமதி வழங்கிய பிறகு வண்டி லைனுக்கு கொண்டு செல்லப்பட்டு ரயில்களுடன் இணைக்கப்படும்.

இப்போ இன்னும் விரிவாக.

ஒவ்வொரு ரயில்பெட்டிக்கும் பிரத்யேக எண் இருக்கும் அந்த நம்பர் தான் அதன் ஆதார் ஐடி. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ரயில்பெட்டிகளை எப்படி கணக்கெடுத்து பிரிக்கிறார்கள் என்ற சந்தேகம் இருக்கும். ரயில்பெட்டியிலேயே நல்ல பெரிய எழுத்தில் அந்த ஐந்திலக்க எண் எழுதப் பட்டு இருக்கும்.


அதில் முதல் இரண்டு எண் அது தயாரிக்கப்பட்ட காலத்தை குறிக்கும். மிச்ச மூன்றிலக்கம் வண்டியின் வகையை குறிக்கும். உதாரணமாக 12802 என்ற எண்ணுள்ள வண்டி, 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 802 என்பது Pantry Car என தெரிந்து கொள்ளலாம். 800 சீரியல்களில் வரும் வண்டிகள் எல்லாமே Pantry Carகள் தான்.

இந்த வண்டிகள் பற்றிய முழு விவரத்தையும் பின்னர் வரும் பகுதிகளில் காணலாம்.

12802 என்ற எண்ணுள்ள வண்டி உள்ளே வந்தால் பொறியாளர் வசம் குறிப்புகள் இருக்கும். பொறியாளர் அந்தந்த பகுதிக்கு சென்று ஆய்வுகள் செய்வார்.

வெஸ்டிபுள் என்பது ரயில் பெட்டிகளில் டாய்லெட் இருக்கிறதல்லவா. அதை கடந்ததும் அடுத்த பெட்டிக்கு செல்ல ஒரு வழி இருக்குமல்லவா, அது தான். முதலில் ரோலிங் ஷட்டர் வரும். பிறகு நடப்பதற்கு ஒரு பிளேட் இருக்கும். அது மடக்கக் கூடிய தன்மையில் இருக்கும்.

பக்கவாட்டில் எல்பிஷீட்டுகள் இருக்கும். பிறகு கருப்பு கலரில் பெரிய ரப்பர் இருக்கும். இதில் பழுதானவைகளை கணக்கெடுப்பார். செக்சனில் உட்பிரிவுகள் உள்ளன. ரோலிங் ஷட்டரை மட்டும் பழுது நீக்கும் பிரிவில்  5 பேர் உள்ளனர். அவர்கள் அந்த பணிகளை மேற்கொள்வார்கள்.

ரப்பர், பிளேட் பழுதானால் கழட்டி புதியதை மாட்ட 6 பேர் கொண்ட குழு உள்ளது. எல்பி ஷீட்டை மாற்ற இருவர் கொண்ட குழு, ப்ரேம், பிராக்கெட் போன்றவற்றை வெல்டிங் செய்ய ஐவர் குழு, பழுதான துரு பிடித்த பகுதிகளை நீக்க கேஸ் கட்டிங் பிரிவில் 5 பேர், காலையில் பணிகளை முடித்து விடுவர்.

எல்லா வேலைகளும் முடிந்தவுடன் ரயில்பெட்டிகள் TLW (Train Lightening Workshop) கொண்டு செல்லப்பட்டு இன்ஸ்பெக்சன் மாலை நேரத்தில் செய்யப்படும். அந்த சமயம் சொல்லப்படும் திடீர் குறைபாடுகளை களைய நால்வர் கொண்ட எமர்ஜென்ஸி குழு, இவர்கள் செகண்ட் ஷிப்ட்டில் வருவார்கள். டியுட்டி நேரம் இவர்களுக்கு மட்டும் தனி. நான் இப்போ இந்த குழுவில் தான் இருக்கிறேன்.

இன்ஸ்பெக்சன் முடிந்தவுடன் ரயில்பெட்டி பேஸின் பிரிட்ஜ் யார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ரெயில்களில் இணைக்கப்படும்.

சர்வீஸ் சமயங்களில் சீட்டுகள் எல்லாமே கழற்றப்பட்டு புதிய Foam, சீட் கவர் மாற்றப்படும். ப்ளோர்கள் ரெக்சின் பழுதடைந்திருந்தால் மாற்றப்படும். டாய்லட் பேசின்கள் மாற்றப்படும்.

எலட்ரிக்கல் பிரிவில் எல்லா டியுப்லைட்கள், பல்புகள் மாற்றப்படும். பேன்கள் கழற்றி செல்லப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்படும். பிட் கிடைத்த பேன்கள் திரும்ப பயன்படுத்தப்படும்.

LBR ஷாப்பில் வேலைகள் முடிந்தவுடன் பெயிண்ட் ஷாப்புக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டு முழுவதும் பெயிண்ட் செய்யப்படும். வேலைகள் முடிந்தவுடன் பிட்லைன் கொண்டு வரப்பட்டு உயர, ஸ்பிரிங் சஸ்பென்சன் சோதிக்கப்பட்டு TLW ஷாப்புக்கு கொண்டு வரப்பட்டு FIT வழங்கப்பட்டு ரயில்பெட்டிகள் வெளியில் அனுப்பப்படுகின்றன.

ஆரூர் மூனா

Monday, 6 April 2015

கொம்பன் படம் பார்த்த கதை

கொம்பன் படம் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்ததுமே அவசரப்பட்டு 2ம் தேதிக்கு புக் செய்து விட்டேன். எப்படியும் பார்த்து விடலாம் என்று இருக்கும் போது 1ம் தேதியே ரிலீஸ் என்று 31ம் தேதி அறிவித்தார்கள். பிறகு 2ம்தேதி டிக்கெட்டை கான்சல் செய்து விட்டு 1ம் தேதிக்கு புக் செய்தேன்.


31ம் தேதி இரவு மெட்ராஸ் பவன் சிவாக்கு போன் செய்து தடை பிரச்சனை முடிந்து விட்டதா போகலாமா என்று கேட்டால் சிரித்துக் கொண்டே இல்லை, இல்லை என சொன்னார். காலைக்காட்சி படம் ரிலீஸ் கிடையாது. மாலை தான் காட்சி இருக்கிறது. அதுவும் தடை இல்லை என கோர்ட்டு அறிவித்தால் தான் காட்சி என சொன்னார்.

1ம் தேதி நிலவரம் புரியாமல் உக்கார்ந்திருக்க ஏஜிஎஸ்ஸில் இருந்து மெசேஜ் வந்தது. உங்கள் டிக்கெட் கன்பார்ம் என. குழம்பிப் போய் மேல் விவரங்கள் அறிய தியேட்டருக்கு கிளம்பினேன்.


கவுண்ட்டரில் கேட்டால் மாலை தான் காட்சி என சொல்லி, அந்த காட்சிக்கான டிக்கெட்டை மாற்றிக் கொடுத்து அனுப்பினார்கள். வேலைக்கு சென்று விட்டு அவசர அவசரமாக தியேட்டருக்கு போனால் வண்டியை நிறுத்தவே அரைமணிநேரமானது. உள்ளே நுழைந்தால் அரங்கு நிறைந்திருந்தது. 

இத்தனைக்கும் எங்கள் ஏரியாவில் பத்து காட்சிகளுக்கு மேல் போய்க் கொண்டு இருந்தது. சமீபகாலமாக முதல் காட்சியில் பத்து பதினைந்து பேர்களுடன் படம் பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு இது வித்தியாசமாகவே பட்டது.

படம் தொடங்கும் முன்பே தெரிந்து விட்டது, தயாரிப்பாளர் போட்ட காசை விட இரண்டு மடங்கு அதிகம் பணம் எடுத்து விடுவார் என. எல்லாவற்றிற்கும் காரணமான கிருஷ்ணசாமிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். கண்டிப்பாக படம் தொடங்குவதற்கு முன்பு நன்றி கார்டில் கிருஷ்ணசாமி பெயரைப் போட்டிருக்க வேண்டும்.


சிறு பட்ஜெட் படங்கள் எல்லாம் நல்ல கலெக்சன் பெற்று வெற்றிப் பெற தலைப்புகளில் சாதிப் பெயரை சேர்த்து கொண்டால் போதும் என உண்மை இதனால் புலப்பட்டு இருக்கிறது.

அதிக விலை சொல்வதால் நான் படத்தின் இடைவேளையில் எதுவும் வாங்கி சாப்பிடுவதில்லை. வேலை முடிந்து அப்படியே படம் பார்க்க போய் விட்டதால் உள்ளே சென்ற கொஞ்ச நேரத்தில் பசித்தது. கவுண்ட்டரில் போய்ப் பார்த்தேன். எல்லாம் எப்பவும் சாப்பிடும் அயிட்டமாக இருந்தது. 

இதுவரை சாப்பிடாத அயிட்டமாக இருந்தது. கேரமல் பாப்கார்ன் தான். 120 ரூவாய்ன்னு போட்டிருந்தது. அதையும் கூட எனக்கு பிடித்த கோல்ட் காபியும் வாங்கி அரங்கில் அமர்ந்து கொறிக்க ஆரம்பித்தேன். 

ரெண்டுக்குமான காம்பினேசன் கன்றாவியாக இருந்தது. பாப்கார்ன் இனிப்பாக இருந்ததால் காபியின் இனிப்பு எடுபடவே இல்லை. யோசித்துப் பார்த்தேன் ரெண்டும் 200 ரூவாய். சாப்ட்டே ஆகனும்னு முடிவு செய்து பாப்கார்னை வைத்து விட்டு முதலில் கோல்டு காபி ஒரே கல்ப்பில் அடித்தேன். பிறகு கேரமல் பாப்கார்னை சாப்பிட்டு பசியை ஓரங்கட்டி படத்தில் கவனத்தை செலுத்தினேன். 

படம் முடிந்து விமர்சனம் எழுதனுமே என்ற ஆர்வத்தில் அவசர அவசரமாக வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். என் வீட்டின் அருகே இருக்கும் நண்பன் போலிப் பன்னிக்குட்டி வெங்கடேஷின் டெய்லர் கடையில் நண்பர்கள் குழுவினர், அப்படியே ஒரு செக் போஸ்ட்டைப் போட்டு நிறுத்தினார்கள்.

மறுநாள் மகாவீர் ஜெயந்தி, கடை கிடையாது. அதனால் மகாதியானத்தை போட்ரலாம் என்று நண்பன் வெங்கடேஷ் சொன்னான். அதுவரை நார்மலாக இருந்த நான் நடுக்கத்திற்கு ஆளானேன். வலது கை கிடுகிடுவென ஆடியது. 

விமர்சனமா, மகாதியானமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் ஓடியது. கடைசியில் மகாதியானமே ஜெயித்தது. சரவென கடைக்குள் நுழைந்தோம். தியானம் தொடஙகியது. அதன் பின் நடந்ததெல்லாம் இந்த கட்டுரைக்கு வேண்டாம்.

பிறகு வீட்டுக்கு வந்து மகாதியானத்தை மீறி இருக்கும் நினைவுகளை வைத்து ஒரு விமர்சனத்தை ஒப்பேற்றினேன்.

ஆரூர் மூனா

Thursday, 2 April 2015

நண்பேன்டா - சினிமா விமர்சனம்

80களில் நகைச்சுவை தோரணங்களை தொகுத்து எஸ்.வி.சேகர் நாயகனாக நடித்து வந்த படங்கள் ஆவதெல்லாம் பெண்ணாலே, சகாதேவன் மகாதேவன், மனைவி ஒரு மந்திரி. இவற்றுக்கும் நண்பேன்டா படத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை. நண்பேன்டா எஸ்.வி.சேகர் படங்களின் வெர்ஷன் 2.0


பெரிய அப்பாடக்கர் கதையெல்லாம் ஒன்றுமில்லை. தஞ்சாவூரில் வெட்டியாக சுத்திக் கொண்டு இருக்கும் உதயநிதி திருச்சியில் இருக்கும் சந்தானத்தை பார்க்க வருகிறார். அங்கு நயன்தாராவை பார்த்து காதல் கொள்கிறார். அவருக்காகவே திருச்சியில் தங்கி லவ் டார்ச்சர் கொடுக்கிறார். 

நயன்தாராவுக்கும் உதயநிதி மீது காதல் வருகிறது. ஆனாலும் மோதல் வந்து காதலை தள்ளிப் போடுகிறது. பின்பு சேர்ந்தார்களா என்பதை படமாக சொல்லியிருக்கிறார்கள்.

கையில் காசு இருக்கு என்பதற்காக இந்த அடாசு கதைக்கு நயன்தாரா, சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ் என கோடியில் சம்பளம் வாங்குபவர்களை அமர்த்தியிருக்கிறார்கள்.


ஆனாலும் இந்த துணுக்கு தோரணங்கள் அங்கங்கே ரசிக்கவும் செய்கின்றன. நான் சில இடங்களில் நல்லாவே சிரித்தேன். எனக்கு முன்சீட்டில் இருந்த குடும்பம் மொத்த படத்தையும் கலகலவென சிரித்து ரசித்து பார்த்தனர். அதில் எல்லாம் ஒரு குறையும் இல்லை.

உதயநிதி தமிழ்சினிமாவின் முன்னணி நாயகனாக வேண்டும் என முடிவெடுத்து விட்டால் இந்த மாதிரி இனி நடிக்கவே கூடாது. இனியும் தொடர்ந்தால் ஜெய் இடம் கூட கிடைக்காது.

நல்லாத்தான் சிரிச்சேன். இப்ப வந்து யோசிச்சிப் பார்த்தா ஒரு காட்சி கூட சொல்கிற மாதிரி நினைவில் இல்லை. எல்லாம் வார்த்தை விளையாட்டு காமெடி தான்.


நயன்தாரா சில காட்சிகளில் தன் அழகால் ரசிக்க வைக்கிறார். ஆனால் பல இடங்களில் வயசாகிடுச்சோ என்று தோணவும் வைக்கிறார்.

ஷெரீன், துள்ளுவதோ இளமை வந்த போது எப்படிப்பட்ட பிகர். எவ்வளவு இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தார். இப்ப நல்லா கொழு கொழுன்னு ஆண்ட்டியாகி விட்டார். எல்லாம் காலம் செய்த கோலமடி.

கௌரவ வேடத்தில் வரும் தமன்னா கூட கொஞ்ச நாள் கழிச்சி பார்ப்பதால் இதே போல் தான் தெரிகிறார்.

சித்ரா லட்சுமணன் சந்தானத்தை வைத்து காமெடியில் விளையாட களம் இருந்தும் அந்த இடத்தை காமாசோமாவென்று கடந்து செல்கிறார்கள். 

இருவரும் பிரிவதற்கான காரணம் இருப்பதிலேயே அல்பத்திலும் அல்பம். நாயை உதைத்து அது செத்துப் போனதால் ஜெயிலுக்கு போனதாக நயன்தாரா சொல்ல அதற்காக உதயநிதி சிரிக்க நயன்தாரா கோச்சிக்கிட்டு போறாராம். காதல்ல பிரிவு வந்துடுதாம். அடப் போங்கடா.

கருணாகரன் இந்த படத்தில் டம்மிப் பீஸாக வந்து செல்கிறார். இருக்கும் இடத்தில் இருந்தால் தான் அவருக்கு மரியாதை. சந்தானத்தின் கூட காமெடி செய்ய வந்தால் இப்படித்தான் காணாமல் போக வேண்டியிருக்கும்.

இவ்வளவு சிக்கலையும் தாண்டி படம் பார்க்கும்படியாக, ரசிக்கும் படியாக, சிரிக்கும்படியாக இருக்க ஒரே காரணம் சந்தானம். இவர் மட்டும் இல்லையென்றால் படம் காலி தான்.

டைமிங் கவுண்ட்டர் எடுத்து கொடுப்பதாகட்டும், ஹோட்டலுக்கு ரூம் போட வந்தவன் குடும்பஸ்தனா, தள்ளிக்கிட்டு வந்தவனா என சோதனை செய்வதாகட்டும், ஷெரீன் கூட ரொமான்ஸ் செய்வதாகட்டும், தமன்னா வச்ச மிச்சத் தண்ணியை மடக்கென குடித்து க்ளாப்ஸ் அள்ளுவதாகட்டும் மனுசன் பட்டைய கிளப்பியிருக்கிறார்.

சரியான கோடைக்காலம் வெளியில வெயில் தாள முடியலை, கொஞ்ச நேரம் ஏசியில் இருக்கனும், அதே நேரத்தில் சிரிச்சிக்கிட்டும் இருக்கனும் என்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் நண்பேன்டா.

ஆரூர் மூனா

Wednesday, 1 April 2015

கொம்பன் - திரை விமர்சனம்

உண்மையிலேயே படம் சுமார் தான். அதை கண்ட கருமாந்திரங்கள் ஆட்சேபித்ததால் அதில் என்ன தான் இருக்கும் என நினைத்து போகப் போகிறவர்களால் படம் கண்டிப்பா ஹிட் தான். இல்லை, இல்லை சூப்பர் ஹிட்.


சாதாரண கதை தான்.

கொம்பன் ஒரு கிராமத்தின் நாயகன். ஊரே கொண்டாடுகிறது. ஒருத்தியின் காதலால் வீரத்தின் வேகம் தடைபடுகிறது. முந்தைய பகையால் மற்றவர்கள் நாயகனை வீழ்த்த நினைக்க வீழ்ந்தானா என்பதே கதை.

நாயகன் கார்த்தி. பழையபடி கம்பீரமாக நிற்கிறார். அவரின் பலமே கதையை தேர்வு செய்வது தான். இடையில் சரிவு ஏற்பட்டாலும் திரும்ப எழுந்து நிற்கிறார். வெல்டன் கார்த்தி.

என்ன கம்பீரம், என்ன ஆக்ரமிப்பு. இந்த மாதிரி கதை தான் கார்த்திக்கு தேவை. இன்னும் இரண்டு படங்கள் நடியுங்கள் இந்த மாதிரி.

எவ்வளவு கம்பீரமான நடிகன் ராஜ்கிரண். எல்லாத்தையும் பொத்தி வைத்து கதைக்கு ஏற்றாற் போல் நடித்து அசத்தியிருக்கிறார். நினைத்தால் 100 பேரை அடிக்கும் நிலையில் பொறுமையை கடைபிடித்து அசத்துகிறார்.

நாயகியாக லட்சுமி. ஆக்சன் நாயகனை தன் காதலால் வீழ்த்துகிறார். எல்லோரும் இப்படி ஒரு மனைவி வேண்டும் என வேண்டுவோம்.

கோவை சரளா, தம்பி ராமைய்யா, கருணாஸ், வேல. ராமமூர்த்தி, என எல்லோரும் சரியான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

ஒரு ஆக்சன் படத்தின் பலமே காட்சிகளின் கட்டமைப்பு தான். சரியான முறையில் வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கிறது. அது தான் படத்தை நிமிர்த்தி நிற்க வைக்கிறது.

இதில் என்ன மயிறுக்குடா சாதி வருது. சின்னகவுண்டர்ல நடிச்சா அவன் கவுண்டர். முதல் மரியாதையில் நடிச்சா அவன் தேவர். ஒன்பது ரூபாய் நோட்டுல நடிச்சா அவன் வன்னியர். யாரும் யாரையும் கீழ்ப்படுத்த முடியாது. என்னங்கடா உங்க அரசியல். போய் புடுங்குங்கடா.

விமர்சனம்ங்கிற பேர்ல உங்களை மொக்கை போட விரும்பல. பிகாஸ் ஐயம் இன் மப்பு. படத்தை பாருங்க. சரியான எண்டர்டெயின்மெயிண்ட் மூவி. பிடிக்காதுன்னு ஒருத்தன் சொல்ல முடியாது.

படத்தின் காட்சியமைப்புகளை நாளை விவரமாக படம் பார்த்த கதை பதிவில் விளக்குகிறேன்.

சரியான விமர்சனம் நாளை பாருங்கள், கொம்பன் படம் பார்த்த கதையில்.

ஆரூர் மூனா