Tuesday, 26 May 2015

நீ தானே என் பொன் வசந்தம் - பழசு 2012

நாம படம் பார்க்கனும்னு நினைச்சி கிளம்பினாலே அது வரலாறாகி விடுகிறது. நான் என்ன தான் செய்யும் என்று புரியவில்லை. இன்று வேலை சீக்கிரம் முடிந்து என் செக்சனில் காத்திருந்தேன். என்னுடன் படம் பார்க்க வருகிறேன் என்று சொல்லியிருந்த என் நண்பன் அசோக் வரவேயில்லை.

நானும் காத்திருந்து காத்திருந்து மணி 11.50 ஆகி விட்டது. சரி இன்றைய முதல் காட்சியை தவற விட்டு விட்டேன் என்று முடிவு செய்து பரபரப்புடன் நான் இருக்கை கொள்ளாமல் காத்திருக்கையில் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போன் வந்தது.

நண்பர் நக்ஸ் போன் செய்து "எங்க இருக்க, எங்கிருந்தாலும் உடனடியாக உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு வரவும், நானும் நீயும் உண்ணாவிரதத்தை கட் அடித்து விட்டு சத்யம் திரையரங்கில் சிவாஜி 3D போகலாம். வலைமனையில் படத்தை பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார்கள். மத்த நண்பர்கள் அனைவரும் வேலையில் இருக்கிறார்கள். நீ தான் வெட்டி" என்று கூப்பிட்டார், அடப்பாவிகளா இது வேறயா என்று நினைத்துக் கொண்டு சத்யம் வெப்சைட்டை ஒப்பன் செய்து பார்த்தால் படம் ஹவுஸ்புல் என்று போட்டிருந்தது.

நல்லவேளை தப்பித்தேன் என்று நக்ஸூக்கு போன் செய்து விவரத்தை சொன்னால் அவரோ இரவுகாட்சி பார்த்து விட்டு பஸ்ஸில் போக வேண்டியிருக்குமோ என்று பினாத்த அய்யய்யோ எனக்கு கிரகம் ராத்திரி வரை விடாது என்று பயந்த நான் வேலையிருப்பதை சொல்லி ஒரு வாராக தப்பித்தேன்.
12.15 மணிக்கு அசோக் வந்து "சாரிண்ணே வேலை முடிய லேட்டாகி விட்டது" என்று சொல்ல "சரி உன்னை வீட்டில் விட்டு விட்டு நான் கிளம்புகிறேன்" என்று சொல்லி இருவரும் கிளம்பினேன். அவனது வீட்டு வாசலில் நிற்கும் போது சும்மா போனில் நெட்டை எடுத்துப் பார்த்து பார்த்தால் ராக்கி திரையரங்கில் கும்கியும், நீதானே என் பொன் வசந்தமும் ஒரு மணிகாட்சி இருக்கிறது என்று போட்டிருந்தது.

உடனடியாக அசோக்குக்கு போன் செய்து வெளியே வரச்சொல்லி இருவரும் ராக்கிக்கு விரைந்தோம். கூட்டம் அள்ளியது. அவனிடம் கும்கிக்கு டிக்கெட் எடுக்கச் சொல்லி விட்டு வண்டியை நான் பார்க்கிங்கில் விட்டேன். டிக்கெட் வாங்கி வந்த அவன் கும்கி டிக்கெட் கிடைக்கவில்லை என்று சொல்லி நீதானே என் பொன் வசந்தத்திற்கு வாங்கியதாக சொன்னான்.

உள்ளே நுழைந்தால் படத்தின் முதல் பாட்டு ஓடிக் கொண்டு இருந்தது. அடித்துப்பிடித்து இருக்கையை ஒருவாராக கண்டுபிடித்து அமர்ந்தேன். இனி ஓவர் டூ பிக்சர்.

படத்தின் கதை என்ன? பெரிய சிக்கலான கதையெல்லாம் கிடையாது. மிகச்சிறு வயதிலிருந்து நண்பர்களாக இருக்கும் கதாநாயகனும் கதாநாயகியும் பதிண்பருவத்தில் காதலிக்கிறார்கள். அதன் பிறகு சீசனுக்கு ஒரு முறை ஈகோவினால் சண்டை போட்டு பிரிகிறார்கள். பிறகு கடைசியில் சேர்கிறார்கள். அவ்வளவு தான் கதை.
முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். படம் மிகமெதுவாக செல்கிறது. ஆனால் எனக்கு பிடித்திருந்தது. படத்திற்கு வந்திருந்த பெரும்பாலான கல்லூரி மாணவர்களுக்கு பிடிக்கவில்லை. பொலம்பிக் கொண்டே இருந்து கடைசியில் படம் முடியும் முன்பே வெளியேறினார்கள்.

ஜீவா படத்தில் மிக அருமையாக நடித்திருக்கிறார். பலபடங்களில் ரொம்ப லோக்கலாக நடித்து நம் பக்கத்து வீட்டுப் பையன் போல் இருக்கும் இவர் இந்தப் படத்தில் சற்று மேலான இடத்தில் படு டீசண்ட்டாக நடித்துள்ளார்.அழகாக இருக்கிறார். பள்ளிக்கால உடைகள் தான் சற்று ஒட்டவில்லை. மற்றப்படி படம் அவருக்கான களம் தான் புகுந்து விளையாடி இருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலமே ஹீரோயின் சமந்தா தான். எனக்கு அவரை மாஸ்கோவின் காவிரியில் பிடித்திருந்தது. ப்ரெஷ்ஷான ஆப்பிள் போல் இருந்தார். அவருக்காகவே அந்த மொக்கப்படத்தை இரண்டு முறை பார்த்தேன். அதன் பிறகு தெலுகுக்கு சென்ற பின் சற்று தொய்வடைந்ததால் எனக்கு பிடிக்காமல் போனது. இந்தப் படத்தில் கூட அவரின் முதல் காட்சியில் எனக்கு பெரிய ஈர்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் நேரம் செல்லச்செல்ல அழகாக என் மனதில் வந்து அமர்ந்து விட்டார்.

படத்தின் கலகலப்பான பகுதிக்கு சொந்தக்காரர் சந்தானம் மட்டுமே. அவரும் அந்த குண்டு பெண்ணும் செய்யும் அபத்த காதல் கலாட்டாக்கள் திரையரங்கில் பலத்த சிரிப்பொலியை உண்டாக்குகின்றன. இன்னும் மறக்க முடியாத அவரின் வசனம் "எந்தப் பெண்ணை பார்த்தாலும் எனக்கும் தான் மச்சி அழகாயிருக்கிற மாதிரியே தோணுது, Because I am studying only in Boys Hr Sec School". எனக்கு அப்படியே பொருந்துகிறது. நானும் சென்னை வந்த நாட்களில் இப்படித்தான் சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்.

எனக்கு படத்தில் மிகவும் பிடித்திருந்ததே ஒரு பெண்ணுடைய காதலின் டீட்டெயிலிங் தான். எனக்கு மிகப் புதிதாக இருந்தது. பெண்ணுக்கு ஒரு காதல் தோல்விப் பாடலும் உண்டு. பெண் உணர்ச்சி வசப்படும் தருணங்கள் கூட இயல்பாகவே இருந்தது. அதை விரிவாக சொல்லலாம் தான். ஆனால் அதில் என் குட்டு கூட வெளிப்பட்டு விடக்கூடிய அபாயம் இருப்பதால் அப்படியே மேம்போக்காக கடந்து செல்கிறேன்.

இடைவேளைக்கு முன் வரும் காட்சி அப்படியே 15 நிமிடங்களுக்கு மேலாக எந்த கட்டிங்கும் இல்லாமல் இருந்தது வியக்க வைக்கும் காட்சி. கிளைமாக்ஸ் காட்சியில் இருவருக்கும் இருக்கும் அந்த நெருக்கம் எந்த நிமிடமும் உடைந்து விடக்கூடிய மெல்லிய ஈகோவுடனே பயணித்து நாம் அவர்கள் அதை உடைத்து விடுவார்கள் என்று ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்து ஹீரோயின திரும்பிச் செல்லும் கடைசி தருணம் வரை டென்சனை மெயிண்ட்டெயின் செய்த விதம் சூப்பர்.

எல்லாத்தையும் சொல்லிவிட்டு இசையை சொல்லாமல் போனால் எப்படி, அதுவும் நம்ம இளையராஜாவின் இசை. படத்திற்கு பொருத்தமான இடத்தில் பொருத்தமான டியுனில் இருக்கிறது. இளையராஜா மட்டும் இல்லாவிட்டால் படம் சுமாரான படமாகவே இருந்திருக்கக் கூடும். அனைத்து பாடல்களும் சூப்பர், சூப்பர், சூப்பரோ சூப்பர்.

இடைவேளைக்கு முன் ஒரு காட்சி வரும் அந்தக் காட்சியில் நீங்கள் யார் பக்கமும் நிற்க முடியாது. இருவர் செய்வதும் சரியாகத்தான் இருப்பது போலவே தோணும். ஜீவா நடுத்தர குடும்பத்து பையன், அதுவரை பொறுப்பில்லாமல் இருந்தவன் தன் குடும்பத்தின் வசதிக்காக நன்றாக படித்து பெரிய வேலைக்கு சென்று குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றி விட்டு தன் காதலை தொடரலாம் என்று நினைக்கிறான்.

அதற்காக ஐஐஎம் கல்லூரியில் படிக்க வெளியூர் செல்ல நினைக்கிறான். சமந்தா ஜீவாவை காதலித்து அவருக்காகவே மேற்கொண்டு படிக்காமல் அவருடன் வாழ்வதையே தன் லட்சியம் என வாதிடுகிறாள். இந்த வாக்குவாதம் முழுவதும் எந்த எடிட்டிங்கும் இல்லாமல் 15 நிமிடங்களுக்கு மேல் வருகிறது. சூப்பர்ப் சீன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

நீ தானே என் பொன் வசந்தம் - கண்டிப்பாக பார்க்கக்கூடிய படம் தான். பார்த்து மகிழுங்கள்.

கடைசியில் படம் முடிந்து வெளி வந்ததும் நண்பன் அசோக் சொன்னான் "அண்ணா ரொம்ப சாரி, நான் நீதானே என் பொன் வசந்தம் பார்க்கனும்னு நினைச்சேன். உங்கக்கிட்ட சொன்னா திட்டுவீங்க. நீங்க கும்கிக்கு டிக்கெட் எடுத்து வர சொன்னீர்கள். நான் இந்தப்படத்திற்கு டிக்கெட் எடுத்து விட்டு உங்களிடம் பொய் சொன்னேன்" என்று சொன்னான். இந்த மாதிரி பயலுகள நான் என்ன தான் செய்யிறது.


ஆரூர் மூனா

No comments:

Post a comment