Sunday, 24 May 2015

மக்கள் இயக்குனர் சேரன் - பழசு 2012

ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை அதிகமாக கிண்டலடிக்கப்படும் திரையுலகினரில் இயக்குனர் சேரனும் ஒருவர். ஆனால் எனக்கு மட்டும் மனிதனின் வாழ்வியலை படம் பிடித்து காட்டும் சிறந்த இயக்குனராக படுகிறார். படங்களின் வியாபாரத்திற்காக காம்பரமைஸ் செய்து கொள்ளாத இயக்குனர் என்பதால் மேலும் உயர்ந்தவராக என் மனதில் படுகிறார்.

இயக்குனர் சேரன் அவர்களின் முதல் படமான பாரதி கண்ணம்மா நான் 12ம் வகுப்பு படிக்கும் போது வெளிவந்தது. அப்பொழுதும் எந்தப்படமானாலும் நண்பர்களுடன் முதல் நாளே செல்வது வழக்கமாக இருந்தது. ஒரு தினத்தில் எந்தப்படமும் கிடைக்காமல் எந்தவித எதிர்ப்பார்ப்புமில்லாமல் திருவாரூர் தைலம்மை திரையரங்கிற்கு சென்றேன். படம் துவங்கியதிலிருந்து காமெடியில் நம்மை அசத்திக் கொண்டிருந்த படம் நேரம் செல்லச் செல்ல அந்த காதலுக்குள் நம்மை இழுத்துச் சென்று பார்த்திபன் உடன்கட்டை ஏறும் காட்சியில் கதறி கதறி அழவும் வைத்து விட்டது. அதன் பிறகு அந்தப்படத்தை நான் ஐந்து முறைக்கு மேல் தியேட்டரில் பார்த்தேன். கண்டிப்பாக இந்த இயக்குனர் கவனிக்கப்பட வேண்டியவர் என்று முடிவு செய்தேன். அன்று முதல் சேரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனரானார்.

சேரனின் அடுத்த படமான பொற்காலம் வெளிவந்தபோது நான் பட்டயப்படிப்பிற்காக சென்னை வந்து விட்டேன். ஆனால் அது பொங்கலன்று வெளியானதால் திருவாரூரில் தான் பார்த்தேன். அந்த படமும் கலங்க வைத்து விட்டது. அழுது கொண்டே தான் பார்த்தேன். ஹீரோயிசம் இல்லாத மிக உண்மையாக உழைப்பவனும் ஒரு மாற்று திறனாளி பெண்ணின் அண்ணனுமாக முரளி நடித்திருந்த படம். மிக நேர்மையான இயக்குனராகவும், இந்த காலத்திலும் ஒவ்வொரு படத்திலும் ஒரு மெசேஜ் சொல்லும் இயக்குனராகவும் என் மனதில் உயர்ந்து நின்றார்.

அடுத்த படம் தேசியகீதம். அந்தப்படம் சங்கத்தில் பார்த்தேன். அந்தப் படம் பார்த்த போது நடந்த சுவாரஸ்யம் என்னவென்றால் நான் திருவாரூரிலிருந்து வந்தவன். அதிகமாக கட்சித்தலைவர்களை நேரில் பார்த்திராதவன். நான் படம் பார்க்க சங்கம் தியேட்டர் சென்ற அதே காட்சியை பார்க்க ஜி.கே.மூப்பனார் வந்திருந்தார். அவருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் வந்திருந்தனர். நான் அமர்ந்திருந்த நான்கு வரிசை முன்பாக அவர் அமர்ந்து பார்த்தார். தியேட்டர் முழுவதும் அவரது கட்சியினரே அமர்ந்திருந்தனர். படம் பார்த்ததே வித்தியாசமான அனுபவம். படமும் நக்கலும் நையாண்டியுமாக இன்றைய அரசியல்வாதிகளை கிண்டலடித்து எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சரியாக போகவில்லை.

அடுத்த படமாக வெற்றிக் கொடிகட்டு வந்தது. இது வரை வந்த சேரனின் படங்களில் நல்ல மெசேஜ் சொன்ன படம் இது தான். கொளத்தூர் குமரன் தியேட்டரில் பார்த்தேன். பிரச்சனைகளை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வையும் மிக எளிமையாக சொன்ன படம். பார்த்திபன் - முரளியின் இயல்பான நட்பு, மனோரமாவின் தாய்ப்பாசம், மீனாவின் தன்னம்பிக்கை என மனிதர்களின் பாசிடிவ் பக்கங்களை சொன்ன படம். சார்லியின் நடிப்பு மிகப்பிரமாதமாக இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று. 

சேரனின் அடுத்தப்படமாக பாண்டவர் பூமி வந்தது. மிக அருமையான படம். ஆனால் தோல்விப்படம். படத்தின் மையக்கருத்து இன்றைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு மிகவும் தேவை. அதாவது ஒரு கிராமத்திலிருந்து நகரத்திற்கு வேலை தேடி வருபவர்கள் அவர்களது உழைக்கும் காலம் முடிந்ததும் மீண்டும் சொந்த ஊரில் குடியேற வேண்டும். நகரம் அடுத்த தலைமுறைக்கு வேலை தர தயாராக வேண்டும். வேலை பார்த்த காலங்களில் சம்பாதித்த பணத்தை வைத்து கடைசி காலங்களில் விவசாயத்தை மீண்டும் தொடர வேண்டும். என்ன காரணமோ தெரியவில்லை, படம் ஓடவில்லை.

நான் இந்த படம் வந்த போதே முடிவு செய்து விட்டேன். என்னுடைய கடைசி காலம என்பது திருவாரூர் சுற்றியுள்ள ஏதோ ஒரு கிராமத்தில் விவசாயம் பார்த்து தான் கழியும் என்பதை. என்றைக்கு சென்னை போன்ற பெருநகரங்கள் இது போன்ற மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறதோ அப்பொழுது தான் கிராமங்களில் இருந்து புதிதாக பிழைப்புக்கு வருபவர்கள் சென்னையில் அவர்களது பணிக்காலம் வரை சென்னையில் கழிக்க முடியும். இல்லையென்றால் கூடிய விரைவில் சென்னையின் பரப்பளவு விரிந்து தெற்கே திண்டிவனம் வரையும் வடக்கே ஆந்திராவுக்குள்ளும் செல்லும் என்பது கண்கூடாக தெரிகிறது.

அடுத்தது தேசிய விருது பெற்ற படங்களான ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து. இவை பெரிய வெற்றி பெற்று அனைவராலும் அதிகளவில் விமர்சிக்கப்பட்டு விட்டதால் நாம் இதனை தவிர்த்து அடுத்த படமான மாயக்கண்ணாடிக்கு வருவோம். 2007ல் வெளி வந்தது. படத்தின் கருத்து சினிமாவுக்கோ, மற்ற தொழில்களுக்கோ முயற்சிக்கும் போது கையில் இருக்கும் வேலையை விடக்கூடாது என்பதும் எதைப் பற்றிய முழு அறிவு இல்லாமல் இறங்குவது ஆபத்து என்பதும் தான். ஆனால் அந்தப்படம் இப்பொழுது வெளிவந்த 3 ஐப் போல் எதிர் விளைவாகி படுதோல்வி அடைந்தது.

கடைசியாக இயக்கிய படமான பொக்கிஷம். 1970களில் நடந்த ஒரு காதல், அது சந்திக்கும் பிரச்சனைகள், அந்த காதலின் தோல்வி, கடைசி வரை காதலுக்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழும் கதாநாயகி, கண்முன்னே கொண்டு வந்த 1970 காலக்கட்டம் என எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் குறை என்னவென்றால் அது சேரனின் முற்றிய முகம் தான். வேறு நடிகர்கள் நடித்திருந்தால் படம் நன்றாக ஒடியிருக்கும் என்று நினைக்கிறேன். மிகவும் சிக்கலான விஷயம் இந்து முஸ்லீம் காதல், அதுவும் 1970களில் நாகூர் போன்ற சிற்றூரில் எப்படியிருக்கும் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டிய படம் இது. ஆனால் அதுவும் நன்றாக போகவில்லை.

எது எப்படியிருந்தாலும் கமர்சியல் என்ற பெயரில் மற்ற பெரிய இயக்குனர்களைப் போல் கவர்ச்சியை வலிந்து திணிக்காமல், 100 பேரை ஒரே அடியில் பறக்க வைக்கும் ஹீரோயிசத்தை வளர்க்காமல், நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் வைக்காமல் ஒவ்வொரு படத்திற்கு கண்டிப்பாக ஒரு மெசேஜ் வைத்து தான் படமெடுக்கும் சேரனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ஆரூர் மூனா

No comments:

Post a comment