Sunday, 24 May 2015

அரவான் - பழசு 2012

ம்காவல் கோட்டம் நாவல் புத்தகத் கண்காட்சியில் வாங்கி வந்து 15 நாட்கள் வீட்டை வீட்டு வெளியே போகாமல் (வெட்டிப்பயலுக்கு வெளியில என்ன வேலைன்னு கேக்கப்பிடாது) என் மனைவி என்னை புத்தகமே கதியாக கிடக்கிறாயே கடைக்கு கூட போக மாட்டேங்கிறீயே என்று கழுவி கழுவி ஊத்தினாலும் துடைச்சிப் போட்டு படிப்பதையே குறிக்கோளாக கொண்டு (மெடலை குத்துங்கப்பா) படித்து முடித்தேன். எந்த இடத்திலும் நாம் கவனம் சிதறினாலும் நாவலின் முக்கிய சம்பவங்கள் புரியாமல் போய்விடும். அதுபோல் நாம் படிக்கும் நாவல் சில இடங்களில் போரடித்தாலும் பாதியுடன் நிறுத்தி விடுவோம். ஆனால் எந்த இடத்திலும் போரடிக்காத நாவல் அது. இந்தப்படத்தின் டிரெய்லரைப் பார்த்ததும் இது நாவலில் எந்தப் பகுதி என்பதும் தெரிந்து விட்டது. எனவே கதையைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அது சிதைக்கப்படாமல் படமாக்கப்பட வேண்டும் என்று மட்டுமே யோசித்திருந்தேன்.

அது போல் வசந்தபாலன் படங்களுக்கும் எனக்கும் பலப்பல விஷயங்களில் ஒத்துப் போகும். வெயில் படம் ஒரு தோத்தவனின் கதை. யாரும் கவனிக்காத அந்தப் படம் வெளி வந்த காலம் நான் தோத்தவனாக இருந்தேன். கமாடிட்டி டிரேடிங் நிறுவனம் துவங்கி சொந்த முதலீடும் நண்பர்களின் முதலீடுமாக ரூ 75 லட்சங்களை இழந்திருந்தேன். அது வரை ஏழு வருடம் நான் வேறொரு துறையில் சம்பாதித்த பணம் அது. கிட்டத்தட்ட பிளாட், கார் உட்பட எல்லாம் இழந்திருந்தேன். திரையில் பசுபதியை நானாகவே பார்த்தேன்.

அந்த கட்டங்களிலிருந்து மீள எனக்கு 2 வருடங்களானது.

அடுத்ததாக அங்காடிதெரு படம். அது வரை சரவணா ஸ்டோர்ஸில் வேலை பார்க்கும் ஊழியர்களை மனிதர்களாக அனைவரையும் நினைக்க வைத்தப்படம். அதன் பிறகு நான் எப்பொழுது சரவணா ஸ்டோர்ஸ் போனாலும் இளம்வயது ஊழியர்களை சகோதரத்துவத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். இன்று வரை நான் பார்த்த மிகச்சில சிறந்த படங்களில் அங்காடித்தெருவும் ஒன்று. அந்த காதலும் என் வாழ்வில் நடந்து போலவே தான் இருந்தது. கண்டிப்பாக அரவான் படம் நாவலில் வந்த கதைப்படி வரும் என்று நினைத்திருந்தேன். சில விஷயங்களைத் தவிர கதைப்படியே படம் வந்துள்ளது.

வேம்பூர் கள்ளர் வம்சத்தை சேர்ந்த பசுபதி களவாடுவதில் வல்லவனாக இருக்கிறான். அவர்களது ஊர் பெயரை பயன்படுத்தி ஒத்தையாளாக ஒருவன் திருடுவதை அறிகிறான். அவனை சில நாட்களில் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவனது திறமையறிந்து அவனை தனது குழுவில் சேர்த்துக் கொள்கிறான். ஆனால் அவனது வாழ்வில் மர்மம் இருப்பதை அறிகிறான். ஆனால் அதனை அவனிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை. ஒரு ஜல்லிக்கட்டில் பசுபதியை காப்பாற்ற தான் யார் என்ற உண்மையை சொல்கிறான். அவன் யார், அவனது பிளாஷ்பேக் என்ன என்பதே கதை. கதையை இத்துடன் முடித்துக் கொள்வோம். முழுக் கதையை சொல்ல வலையுலகில் பலர் இருக்கின்றனர்.

படம் எப்படி என்பதை பற்றிப் பார்ப்போம். ஒரு விஷயத்தை டீடெய்லிங் என்று சொல்லுவார்கள். அதாவது படத்தின் துவக்கத்தில் கன்னம் வைத்து திருடும் போது கல்லை எடுத்ததும் ஒரு கம்பில் துணியை தலைப்பாகைப் போல் சுற்றி உள்ளே அனுப்புவது. இது நாவல் மற்றொரு பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது அந்த காலகட்டங்களில் கன்னம் வைத்து திருடும் போது கல்லை எடுத்ததும் ஒருவன் உள் நுழைந்து கொல்லைக்கதவை திறந்து விட அனைவரும் உள்ளே வந்து திருடி செல்வர். ஒரு முறை அது போல் கன்னம் வைக்க கல்லை நகர்த்த முயற்சிக்கும் போது உள்ளே சத்தம் கேட்டு வீட்டில் இருப்போர் விழித்து விடுகின்றனர். சரியாக முதல் நபர் தலையை உள்ளே நுழைக்கும் போது அரிவாளால் தலையை சீவி விடுகின்றனர். திருட வந்த மற்ற நபர்கள் முண்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒடி விடுகின்றனர். அன்று முதல் கன்னம் வைத்து திருடுபவர்கள் செத்தவனை வேண்டிக் கொண்டு முதலில் கம்பில் தலை போல் செய்து முதலில் விடுவர், உள்ளே யாராவது விழித்துக் கொண்டிருந்தால் கம்பு மீதே தாக்குவர். அப்படி யாரும தாக்கவில்லை என்றால் வீட்டில் அனைவரும் உறக்கத்தில் இருக்கின்றனர் என அர்த்தம். இது போல் படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. படத்தை கூர்ந்து கவனித்தால் மட்டுமே அனைத்தும் புரிய வரும். ஏன் அந்தப்புறத்தில் அரவாணிகளை மட்டும் தான் பணியாளாக வைப்பர் என்பதை கூட பார்த்து பார்த்து செய்திருக்கின்றனர்.

நானே திருவாரூர் நகர காவல் நிலையத்தில் குண்டாஸ் ஆக்ட்டின் படி கைது செய்யப்படும் நபருக்குரிய ஆவணங்களை எனது கம்ப்யூட்டர் சென்டரில் நிறைய டைப் செய்து கொடுத்திருக்கிறேன். அதில் கன்னம் வைத்து திருடுதல் என்ற வார்த்தை வரும். ஆளில்லா வீட்டில் திருடுதல் போல என்று தான் நினைத்து வந்தேன். இந்த படம் பார்த்த பிறகு தான் அது வீட்டில் சுவரில் ஓட்டைப் போட்டு திருடுதலே அது என்பது தெரிய வந்தது.ஆதி அந்த பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். சரியான அளவில் பெறப்பட்ட நடிப்பு. அதுபோல் பசுபதி, என்ன சொல்ல அவரைப்பற்றி. அனைவருக்கும் தெரியும் அவர் நல்ல நடிகர் என்று. தன்ஷிகா, அர்ச்சனா கவி, கரிகாலன், ஸவேதா மேனன், ஹேமாமாலினி, டி.கே.கலா உட்பட அனைவரும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்கள்.

பாடல் அனைத்தும் ஏற்கனவே கேட்டு கேட்டு பழகியதால் பார்க்கவும் அருமையாக இருக்கிறது.

கடைசியில் கதைப்படி வரும் தலையை கொய்தும் காட்சியை இயக்குனர் மாற்றியிருப்பார், யாராவது எதுக்குடா உயிர்ப்பலி போங்கடா போய் புள்ளக்குட்டிய படிக்க வைங்கடா என்று வசனம் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் படத்தின் முடிவு கதைப்படியே எடுக்கப்படுள்ளது.

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்க்கை முறைகள் இது நாள் வரை நமக்கு எழுத்து ஆவணமாக மட்டுமே இருந்து வந்துள்ளது. தைரியமாக சொல்லலாம் இந்தப்படம் ஒரு காணொளி ஆவணம் என்று. சற்றும் மிகைப்படுத்தப்படாமல் உடைகள், உரையாடல், காட்சிப்படுத்துதல் அனைத்தும் 18ம் நூற்றாண்டை நினைவுப்படுத்துகிறது. எனக்கு ஒரு பழக்கம் உண்டு ஒரு நாவலைப் படித்தால் அதனை காட்சியாக கற்பனை செய்வேன். இந்த நாவலைப் பற்றிய என் கற்பனைகள் படமாக வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியையே தந்துள்ளது.

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment