Sunday, 24 May 2015

காதல் கவிஞனான நான் மீண்டும் கவிஞனாகிறேன் - பழசு 2012

திடீரென்று இன்று காலையில் இருந்து என் மனதில் ஒர் ஆசை அரித்துக் கொண்டே இருக்கிறது. நீ கவிஞனாகி விடு என்று. நமக்கு எழுதுறதே தகிடதிமிதோம் போடும் இதுல கவித வேறயா என்று உள்ளுணர்வு ஆப்படிக்கிறது.

நான் பெரிய கவிஞனென்று பெரம்பூர் பட்மேட்டில் உள்ள நண்பர்கள் எல்லாம் ஒரு காலத்தில் நம்பிக் கொண்டிருந்தார்கள். நான் அப்ரெண்டிஸ் படிக்கும் போது தங்கியிருந்த அறையை சுற்றியிருந்த ஏரியா நண்பர்கள் அவர்கள். அனைவருக்கும் அந்த சமயத்தில் ஒரு தலைக்காதல் இருந்தது.

முதன் முதலாக வெங்கடேஷ் என்ற ஒரு நண்பன் அவன் காதலித்த பெண்ணிடம் கொடுப்பதற்காக ஒரு காதல் கடிதம் வேண்டுமென்றும் அது கவிதையாக இருக்க வேண்டும் என்றும் என்னிடம் கூறினான். ஒசியில் குடி கிடைக்குமே என்பதற்காக அவனிடம் "ராத்திரியில் சரக்கு வாங்கிக் கொண்டு வா நான் எழுதித் தருகிறேன்" என்று கூறினேன். சத்தியமாக அதுவரை நான் ஒரு வரி கூட கவிதை எழுதியது கிடையாது.

அன்று இரவு மொட்டை மாடியில் ஜமா ஆரம்பித்தது. நான் ஒரு நோட்டு பேனாவுடன் வந்து விட சரக்கு சைட்டிஷ் ஆகியவற்றுடன் வெங்கடேஷ் வந்து சேர்ந்தான். அந்த நிமிடம் வரை எனக்கும் ஒரு கவிதை வரி கூட தெரியாது. ஆனால் அவனிடம் அதனை சொன்னால் மறுநாளிலிருந்து சரக்கு ஓசியில் கிடைக்காதே என்பதற்காக வைரமுத்து ரேஞ்சுக்கு பில்ட்அப் கொடுத்து எழுத ஆரம்பித்தேன்.

"அன்பே மரியா! சொன்னது சரியா!"

முதல் வரி வந்து விழுந்தது. அவனிடம் படித்துக் காட்ட ஆகா சூப்பர் சூப்பர் என்று சரக்கை கிளாஸில் ஊற்றி எடுத்து நீட்டினான். அதன் பிறகு என்ன எழுதினேன் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

மறுநாள் சாயந்திரம் நான் வகுப்பு முடிந்து வரும்போது பெரம்பூர் லோகோ ஸ்டேஷன் அருகில் நண்பர்கள் சூழ்ந்து கொண்டார்கள். என்னடா ஏதோ வில்லங்கமாகி விட்டதோ என்று நான் பதற அருகில் வந்தவர்கள் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். முதல் நாள் இரவு நான் எழுதிய கவிதையை வெங்கடேஷ் அவன் காதலியிடம் எடுத்து சென்று கொடுக்க காதல் ஓகே ஆகியிருக்கிறது. அன்றிரவு பயங்கர பார்ட்டியாகி மறுநாள் நான் வகுப்பு லீவு எடுக்கும் அளவுக்கு ஆகி விட்டது.

நான் பெரிய காதல் கவிஞன் என்று நானே நம்பி விட்டேன். பட்மேடு பகுதி நண்பர்களிடம் என் கவிதை திறமை பரவி வாரம் இருமுறை பார்ட்டியால் லீவு எடுக்கும் அளவுக்கு என் நிலைமை ஆகிவிட்டது. சில சமயம் எவ்வளவு தான் யோசித்தாலும் ஒரு வரி கூட வராது. பிறகென்ன நைசாக ரூமுக்குள் சென்று பழைய வாரமலரில் இருக்கும் கவிதையை சுட்டு எழுதிக் கொடுத்து கவிஞன் என்ற இமேஜ்ஜை காப்பாற்றிக் கொண்டிருந்தேன்.

இந்நிலையில் 1999ம் ஆண்டு காதலர் தினம் வந்தது. சோமன் என்ற மெக்கானிக் நண்பன் அவனது ஒருதலையாக காதலிக்கும் பெண்ணிற்கு காதலர் தினத்தையொட்டி ஒரு கவிதை கொடுக்க வேண்டும் எழுதிக் கொடு என்றான்.

இரவு நெப்போலியனை சுவாசித்துக் கொண்டே கவிதையை எழுதினேன்.

இந்த நன்னாளில் - உனக்கு நான்
என்ன தருவது?
வண்ண மலரை எடுத்தேன்
வாடி விட்டது!
இமயத்தின் பனிக்கட்டி எடுத்தேன்
கரைந்து விட்டது!
வெண்ணிலாவை எடுத்தேன்
காலையில் மறைந்து விட்டது!
கிழக்கில் தோன்றும் சூரியனை எடுத்தேன்
அவை - உன்னை சுட்டு விடும்!
எனவே என் இதயத்தை தருவேன்
ஏற்றுக் கொள்வாயா?

எழுதி அவனிடம் கொடுத்து விட்டு தூங்கி விட்டு மறுநாள் வழக்கம் போல் நான் வகுப்புக்கு சென்று விட்டேன். லஞ்ச் டைமில் ஒரு 20 பேர் பயிற்சி மையத்தின் வாசலில் நின்று என் பெயரை சொல்லி விசாரித்துக் கொண்டிருக்க சாப்பிட்டு விட்டு வந்த நான் மாட்டிக் கொண்டேன். அலேக்காக பைக்கில் நடுவில் உட்கார வைத்து ஏரியாவுக்குள் பைக் பறக்கிறது.

பட்மேடு 17வது தெருவில் சோமன் வீட்டு அருகே பஞ்சாயத்து நடக்கிறது. என்ன நடந்தது என்றால் காலையில் சோமன் சென்று அந்தப் பெண்ணிடம் பேப்பரை நீட்ட அந்தப்பெண் கவிதையை படித்து விட்டு தன் அப்பாவிடம் சொல்லி விட்டது. அவர்கள் குடும்பமாக வந்து சோமன் வீட்டில் பிரச்சனை துவக்க இந்த படுபாவி நான் தான் எழுதிக் கொடுத்தேன் என்றும் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறி விட்டான்.

பிறகென்ன நெடுநேரம் நடந்த பஞ்சாயத்தின் அடிப்படையில் நான் யாருக்கும் காதல் கவிதையோ கடிதமோ எழுதித்தரக் கூடாது என்று பெரிசுகளால் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் பிறகு ஒழுங்காக படிப்பை மட்டும் கவனத்தில் கொண்டு ஏரியாவில் சுற்றிக் கொண்டிருந்தேன்.

இன்று என்ன கொடுமை என்றால் சோமனுக்கும் அவன் கடிதம் கொடுத்த பெண்ணுக்கும் பிற்பாடு காதல் வந்து இன்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கையை கொண்டாடி வருகிறார்கள். ஆனால் பெரிய கவிஞனாகியிருக்க வேண்டிய நான் எனக்கே சொந்தமாக ஒரு கடிதம் எழுத யோசிக்கும் அளவுக்கு நிலைமை ஆகி விட்டது.

என்ன நடந்தாலும் பரவாயில்லை இன்றிலிருந்து கவிதையா எழுதித் தள்ளப்போகிறேன். படிக்க வேண்டிய தலையெழுத்து உங்களது.

முதல் கவிதையின் முதல் வரி

"அன்பே அகிலா! இன்னும் கிடைக்குமா டகீலா!"

நான் கவிஞன்டா
ஆரூர் மூனா

No comments:

Post a comment