Sunday, 24 May 2015

பரோட்டா மாமாவும் புட் பிளாசாவும்... - பழசு 2012

சாதனையாளர்கள் என்றால் நாட்டின் பொருளாதரத்தை அசைத்துப் பார்த்தவர்கள், மிகப்பெரிய பணக்காரர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மட்டுமில்லை, எடுத்துக் கொண்ட தொழிலை சாதாரண நிலையிலிருந்து உயரத்திற்கு கொண்டு சென்று அதன் தாக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் "இருந்தும் இல்லாமல் இரு" என்ற கொள்கைக்கு ஏற்ப வாழ்பவர்களும் தான்.அந்த வழியில் மன்னார்குடி என்ற சிறு நகரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பரோட்டா மாமா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் அவரின் பெயர் சதீஸ், என்னுடைய அத்தைப் பையன். இவரைப் பற்றி ஏகப்பட்ட வில்லங்க விஷயங்களை போட்டு வாரிய பதிவுகளை மன்னார்குடியில் நிறைய பேர் படித்து அவரிடமே அந்த பதிவுகளைப் பற்றி கிண்டலடித்து விட்டனர். அவர் என் நல்ல விஷயங்களை எழுத மாட்டியா என்று அலுத்துக் கொண்டதால் அவருடைய நிறை பக்கத்தை இன்று பார்க்கப் போகிறோம். ஆனால் இந்த ஒரு பதிவு மட்டுமே நிறை பக்கத்தை கொண்டிருக்கும் மற்றபடி அவரது ரகசியங்கள் அடங்கிய பதிவுகள் இன்னும் பல வர இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சதீஸின் சிறு வயதிலேயே அவருடயை அம்மா ரத்தப்புற்று நோயில் இறந்து விட்டதால் அவருக்கு 21 வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டனர். பிரதிஷா என்ற பெண் குழந்தையும் பிறந்து விட்டது. DHMCT (Diploma in Hotel Management & Catering Technology) முடித்த அவர் வேலைக்காக துபாய்க்கு சென்று சில மாதங்களிலேயே குடும்பத்தை பிரிந்திருக்க முடியாமல் திரும்பி வந்து விட்டார்.

இங்கு வந்து மன்னார்குடி பேருந்து நிலையத்தின் எதிரில் 5 பார்ட்னர்களுடன் சேர்ந்து புட் பிளாசா என்ற உணவகத்தை துவக்கினார். சில மாதங்களில் மற்ற பார்ட்னர்களின் பங்கினை அவர்களுக்கு கொடுத்து விட்டு தானே முழு ஓனரானார். அன்றிலிருந்து இன்று அவரை அயராது உழைக்கிறார். உணவகம் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் இருப்பதால் நன்றாக போகிறது.

அடுத்ததாக TATA ACE வண்டி ஒன்று வங்கிக்கடனில் வாங்கினார். அதனை ஒழுங்காக ஒட்டி முழு கடனையும் அடைத்து விட்டதால் அதே வங்கியில் மீண்டும் லோன் எடுத்து Tavera Chevrolet வண்டி ஒன்றும் எடுத்து டிராவல்ஸ் ஒன்றை துவக்கி அதனையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கிராம கவுன்சிலருக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் துவண்டு விடாமல் களப்பணி செய்து மக்களிடையே நல்லப் பெயரை பெற்று 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றிப்பெற்று ஊராட்சி மன்ற துணைத்தலைவரானார்.

இன்றும் தான் பெரிய ஆள் என்ற நினைப்பில்லாமல் ஹோட்டலில் மாஸ்டர் வரவில்லையென்றால் ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் எல்லாம் அவர் தான் போடுகிறார். டிரைவர் வரவில்லையென்றால் பல நாட்கள் கண் விழித்து வண்டி ஒட்டுகிறார். இன்று வரை பத்து பைசா கையூட்டு வாங்காமல் ஊராட்சி மக்களுக்கு என்ன தேவையென்றாலும் முன் நின்று செய்கிறார்.

கண்டிப்பாக இன்னும் சில வருடங்களில் மன்னார்குடியில் நல்ல தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் வருவார் என்பதில் சந்தேகமில்லை. என் மச்சான் என்பதால் பல முறை அவரை கலாய்த்து பதிவுகள் போட்டுள்ளேன். அதற்காக கோவப்பட்டதும் இல்லை. சிரித்துக் கொண்டே ஏன்டா நான் தான் கிடைத்தேனா என்று சொல்லிச் செல்வார்.

உயரம் என்பது பத்தாவது மாடியில் மட்டும் இல்லை, முதல் செங்கலில் இருந்தே அது துவங்குகிறது என்பதை அவரைப் போல் நாமும் புரிந்துக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

டிஸ்கி 1 : சதீஸ் அவர்களே இந்த ஒரு பதிவு மட்டும் உங்களைப் பற்றி ஒழுங்காக வரும் என்பதையும் மீண்டும் தாங்கள் கலாய்க்கப்படுவீர்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(இது நாய் நக்ஸ் இல்லீங்க)
டிஸ்கி 2(சென்னைப் பதிவர்களுக்கு மட்டும்) : நம்ம நாய் நக்ஸ் நக்கீரன் அவர்கள் வரும் வெள்ளியன்று சென்னை வருவதாக இருக்கிறார். சென்னையில் உள்ள பதிவர்கள் எல்லோரும் வியாழன் இரவே எதாவது பஸ் பிடித்து ஆந்திரா அல்லது கேரளா பக்கம் சென்று விடுமாறோ அல்லது வெள்ளி மட்டும் தங்களது அலைபேசியை அணைத்து வைத்து விடுமாறோ கேட்டுக் கொள்ளப்படுகிறது. இல்லையென்றால் நடக்கும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. தெரியாத்தனமாக நான் மாட்டிக் கொண்டேன். மேற்கொண்டு கேபிள் அண்ணனும் மாட்டிக் கொண்டதாக கேள்விப்பட்டேன். மற்றவர்களாவது தப்பிக்கட்டுமே என்று தான் இதனை வெளி்ப்படையாக அறிவிக்கிறேன். ஹி ஹி ஹி.

ஆரூர் மூனா

No comments:

Post a comment