Sunday, 24 May 2015

பஞ்சேந்திரியா - கோயம்பேட்டில் நடக்கும் பார்க்கிங் டிக்கெட் மோசடி - பழசு 2012

சில நாட்களுக்கு முன் காலையில் வேலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தேன். அம்பத்தூரிலிருந்து எஸ்டேட், பாடி வழியாக லூகாஸ் செல்லும் சாலை காலையிலும் மாலையிலும் எப்படி டிராபிக்கில் மாட்டி விழிபிதுங்கும் என்று சொல்ல தேவையில்லை. ஒரு முறை மாட்டியவர்களுக்கே நன்கு தெரியும்.

எஸ்டேட் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள சிக்னலில் நிற்கும் போது ஒரு ஆண்ட்டி ஸ்கூட்டியில் சர்ரென்று வந்து நின்றது. சிக்னல் விழுந்த அடுத்த வினாடி ஸ்கூட்டி பறந்தது. அந்த வினாடி எனக்குள் இருந்த ஆணாதிக்க மனப்பான்மை துடித்தெழுந்தது. எப்படி ஒரு பெண்மணி நம்மை முந்திச் செல்லலாம் என்று.

நானும் பைக்கை எடுத்துக் கொண்டு பின்னாடி விரைந்தேன். பிரிட்டானியா வரை துரத்தி சென்றேன். ம் ஹூம். வண்டியை நெருங்கக் கூட முடியவில்லை. பிரிட்டானியா பஸ் ஸ்டாப்பில் ஏற்பட்ட டிராபிக்கில் ஸ்கூட்டி நின்றது. நானும் நின்றேன். ஒரு நிமிடம் தான் கிடைத்த கேப்புக்குள் ஸ்கூட்டி சர் சர்ரென்று நுழைந்து போய்க் கொண்டே இருந்தது.

நானும் விடாமல் பின்னாடி துரத்தி சென்றேன். நான் லூகாஸ்ஸில் நேரே செல்ல வேண்டும். ஆனால் ஸ்கூட்டி வலப்புறம் அண்ணாநகர் நோக்கி திரும்பியது. நான் எப்படியாவது அவரை முந்திச் செல்ல வேண்டும் என்று எண்ணி நான் சாலையிலிருந்து பிரியும் இடம் வரை நெருங்க முடியாததால் ஸ்கூட்டியை முந்திச் சென்ற பின்பே மீண்டும் வேலைக்கு செல்வது என்று முடிவு செய்து வலப்புறம் வண்டியை திருப்பினேன்.

கொஞ்ச தூரத்திற்கு டிராபிக் இல்லாததால் வேகமாக சென்று ஸ்கூட்டியை அண்ணா நகர் 6வது மெயின் ரோட்டில் முந்தினேன். ஸ்கூட்டியில் வந்த ஆண்ட்டியை வென்று விட்ட திருப்தி. பிறகு அங்கிருந்து திருமங்கலம் சாலை வழியாக சென்று நாதமுனியில் திரும்பி வழக்கமான சாலையை அடைந்து வேலைக்கு சென்றேன்.

அன்று முழுவதும் திமிருடன் தான் திரிந்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு நான் செய்தது தப்போ என்று மனம் சிந்திக்க ஆரம்பித்தது. பிறகு தான் என்ன ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்தோம் என்று புரிந்தது. அதன் பிறகு இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். பாடியில் மற்றுமொரு ஆண்ட்டி ஸ்கூட்டியில் என்னை முந்தி சென்றது. அடுத்த வினாடி எனக்குள் இருந்த ஆணாதிக்க மனப்பான்மை துடித்தெழுந்தது. என் வண்டியை முடுக்கினேன். அய்யோ யாராவது சொல்லுங்களேன், நான் நல்லவனா? கெட்டவனா?

-------------------------------

தமிழகத்தை நெருங்குகிறது தண்ணீர் பஞ்சம்


-----------------------------------------

பொதுமக்கள் அரசு அலுவலகத்திற்கு ஏதாவது வேலையாக சென்றால் ஊழியர்கள் அலட்சியப்படுத்துவது தாமதப்படுத்துவது தமிழகமெங்கும் சகஜமாக நடப்பதொன்றாக ஆகிவிட்டது. நமக்கும் பழகிப் போய் அது போல் அவர்கள் செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்றாகி விட்டது.

இந்த மாதம் என் சம்பளத்தில் D.A விடுபட்டு போய்விட்டது. அதனை சரிசெய்து பணத்தை வாங்க வேண்டுமென்றால் அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸீல் உள்ள வேஜஸ் செக்சனுக்கு சென்று அதற்கென்று உள்ள அதிகாரியைப் பார்த்து தான் செய்ய வேண்டும். சென்ற வாரம் வியாழக்கிழமை சென்றால் அந்த அதிகாரி லீவு என்றும் அடுத்த வாரம் வாருங்கள் என்றும் சொன்னார்கள்.

ஒருவர் வரவில்லையென்றால் அத்துடன் அந்த பணிகள் நின்று விடுமா என்று கடுப்படித்துக் கொண்டே வந்தேன். ஆனால் பதில் தான் கிடைக்கவி்ல்லை. நேற்று காலை 11 மணிக்கு மீண்டும் சென்றேன். அந்த அதிகாரி அதுவரை வேலைக்கு வரவில்லை.

நான் சென்று அரைமணிநேரம் கழித்து தான் வேலைக்கு வந்தார். வந்தவுடன் கேட்டால் இப்பத்தானே வந்திருக்கிறேன் என்று கடுப்படித்தார். பிறகு அரைமணி நேரம் கழித்து மீண்டும் சென்று என் சம்பளத்தில் ஏற்பட்டுள்ள பிழையை சொன்னேன். சம்பள பில்லை வாங்கிப் பார்த்தவர் அப்படி உக்காரு கூப்பிடுறேன் என்றார்.

மணி 12.30 ஆகியது. என்னை அழைத்து கம்ப்யூட்டர் ஆன் ஆகவில்லை. மெக்கானிக் வரவேண்டும். நீ போயிட்டு லஞ்ச் டைமுக்கு அப்பறம் வா என்று சொன்னார். நாள் தள்ளிக் கொண்டு போகிறதே என்று கடுப்பாகி நான் உட்கார்ந்து முடித்து கொண்டு தான் போவேன் என்றேன். பிறகு முனகிக் கொண்டே கம்ப்யூட்டரை ஆன் செய்து செய்து கொடுத்தார்.

அடப்பாவி்ங்களா நானும் ரயில்வே ஊழியன், அவனும் ரயில்வே ஊழியன். என்னைப் போல் தான் சம்பளம் வாங்குகிறான். ஆனால் இந்த HR மற்றும் அக்கவுண்டஸ் ஊழியர்கள் மட்டும் எந்த ஏரியாவில் வேலை செய்தாலும் இப்படித்தான் இருப்பார்கள் போல. இவனுங்களை திருத்தவே முடியாதா?

---------------------------------

ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் பதிவர்கள்


-----------------------------------------

இன்று என் அப்பா அவசர வேலையாக சென்னை வந்திருந்தார். வந்தவர் அவரது வேலைக்காக வெளியில் சென்று விட்டு மதியம் போன் செய்து வேலை முடிந்து விட்டது. எனக்கு இன்றிரவு திருவாரூர் செல்வதற்கு டிக்கெட் எடுத்து விடு என்றார். கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்திற்கு சென்றேன்.

நுழைவாயிலில் ஒருவர் அதிகாரமாக நிப்பாட்டி 5ரூபாய் கொடு என்று சீட்டு கொடுத்தார். எப்பொழுதுமே கேள்வி கேட்காமல் காசை எடுத்து கொடுக்கும் நான் இன்று யதார்த்தமாக சீட்டைப் பார்த்தேன். அதில் எந்த இடத்திலும் இரு சக்கர வாகனத்திற்கு என்று அச்சிடப்படவில்லை. கார்களுக்கு மட்டும் என்று போட்டிருந்தது.

அவரிடம் இது பற்றி கேட்டேன். அவர் இது தான் டிக்கெட்டு காசை எடு என்றார். ஐயா நான் பணம் கொடுக்க தயங்கவில்லை. பைக்கிற்குரிய சீட்டை கொடுத்து விட்டு காசை பெற்றுக் கொள்ளுங்கள் என்றேன். சிறிது நேரம் என்னை முறைத்துப் பார்த்தவர் சத்தம் போடாமல் சென்றார். அப்பொழுது தான் புரிந்தது. இத்தனை ஆண்டுகளாக பல நூறு முறை அவர்களிடம் நான் காசை கொடுத்து ஏமாந்திருக்கிறேன் என்று.

இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன். யாரும் கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனத்தில் செல்ல நுழைவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. யாராவது உங்களிடம் கேட்டால் டிக்கெட்டை கேளுங்கள். அதில் இருசக்கர வாகனத்திற்குரிய சீட்டு என்று அச்சிடப்பட்டு இருக்காது.

அதனை அவர்களிடம் கூறினால் நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டாயிரம் பைக்குகள் உள்ளே சென்று திரும்புகின்றன. ஒரு பைக்கிற்கு 5ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட தினம் பத்தாயிரம் வீதம் மாதம் மூன்று லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள். உஷார்.

ஆரூர் மூனா

No comments:

Post a comment