Sunday, 24 May 2015

தடையற தாக்க - உருமி - பழசு 2012

ஒரு படம் உண்மையிலேயே வெற்றிப்படம் என்பதை எப்படித் தெரிந்துக் கொள்வது. வார நாட்களில் திரையரங்கு பாதியாவது நிறைந்திருந்தால் வெற்றிப்படம் தான் ஆனால் நேற்று ராக்கி தியேட்டரில் தடையறத்தாக்க படம் ஹவுஸ்புல். படம் உண்மையிலேயே சூப்பர் ஹிட் தான். நேற்று தான் படத்தை பார்க்க முடிந்தது. அருமையான படம். படத்தில் காமெடி காட்சிகள் இல்லையென்றாலும் அது ஒரு குறையாகத் தெரியவில்லை.

சிறுவயதில் சென்னைக்கு ஒடிவந்து சிறுசிறு வேலைகளை பார்த்து சொந்தமாக இரண்டு கார்களை வைத்து டிராவல்ஸ்சை நடத்தி வரும் ஹீரோ. ஹீரோயினை காதலித்து அவரது வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறான். அந்த சமயத்தில் தன் தோழிக்கு உதவப் போக அதனால் உள்ளூர் ரவுடிகளிடம் உரசல் ஏற்படுகிறது. இந்நிலையில் பெரிய ரவுடி அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட கொலைப்பழி ஹீரோ மீது விழுகிறது. அவருக்கும் அவரது தொழிலுக்கும், அவரது காதலிக்கும் ஆபத்து என்ற நிலையில் என்ன முடிவு எடுக்கிறான் என்பதே கதை.

அருண் விஜய்க்கு இது தான் வந்த படங்களிலேயே தரமான ஹிட் படம் இது தான். ஈக்காட்டுத்தாங்கலில் அருண்விஜய் வீட்டிற்கு அருகில் தான் பேச்சிலர் ரூமில் குடியிருந்தேன். அதனால் அவரை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு உண்டு. அந்த வீடு எதுவென்றால் ஆறு படத்தில் வில்லன் ஆசிஷ் வித்தியார்த்தியின் வீடாக வருமே அதுதான்.

நாங்கள் ரோட்டில் கிரிக்கெட் விளையாடும் போது எங்களுடன் வந்து ஒரு சில பந்துகள் விளையாடி விட்டு செல்வார். அந்த சமயத்திலேயே இவருக்கு ஒரு ஹிட் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருப்பதுண்டு. இந்தப்படம் அந்தக்குறையை நீக்கி விட்டது. இடது கைப்பழக்கம் இயல்பாக இல்லையென்றாலும் அதெல்லாம் ஒரு குறையே இல்லை.

அருண்விஜய்யின் நண்பர்களின் விதவிதமான மெட்ராஸ் பாஷை இயல்பாக இருக்கிறது. அவர்கள் வரும் அந்த இரண்டு சீன்கள் காமெடி நன்றாக உள்ளது. மம்தா சில காட்சிகளில் நன்றாக உள்ளார். வில்லன்கள் அவர்களின் கொடூர சித்ரவதை அப்பப்பா பயங்கரம். படத்தில் இரண்டே பாடல்கள், இரண்டும் அருமை.

தடையறத் தாக்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

--------------------------------------------------------

சென்ற வாரம் மனைவியின் நச்சரிப்பால் உருமி பார்க்க நேர்ந்தது. படம் நிகழ்கால உண்மையை அடித்து சொல்கிறது. மூதாதையர்கள் எவ்வளவு தான் நேர்மையான குணாதிசயத்துடன் இருந்தாலும் அவர்கள் வம்சாவளிக்கும் அதே அளவு நேர்மை இருக்க வேண்டிய அவசியமில்லை.

நகரத்தில் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் பிரித்வியும் பிரபுதேவாவும் சொந்த ஊரில் உள்ள நிலத்தை அயல்நாட்டு நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்து ஊருக்கு வருகின்றனர். அங்கு வந்ததும் காட்டுவாசிகளிடம் சிக்கிக் கொண்டு தங்கள் மூதாதையர்களின் கதை என்னவென்பதை அறிகின்றனர்.

வாஸ்கோடகாமா முதல்முறை இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் மதிப்பு மிக்க கருமிளகை வாங்கிச் செல்கிறார். செல்லும் போது சில வீரர்களை இந்தியாவில் விட்டு செல்கிறார். அவர்கள் அடிமைப் படுத்தும் குணம் இந்தியர்களிடம் கோவத்தை உண்டாக்க அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.

முதல் முறை வந்ததும் இந்தியர்களிடம் வெறும் கத்தியும் வாளுமே ஆயுதம் என்பதை அறிந்த வாஸ்கோடகாமா அடுத்த முறை பீரங்கி மற்றும் துப்பாக்கிகளுடன் வந்து இந்தியாவில் சில பகுதிகளை சிறைப்பிடிக்கிறார். அவரை எதிர்த்து போர் செய்ய முயன்று தோற்று செத்துப் போகின்றனர் பிரித்வி மற்றும் பிரபுதேவாவின் மூதாதையர்களான மற்றுமொரு பிரித்வியும் பிரபுதேவாவும்.

பிளாஷ்பேக் அறிந்த பிரித்வி என்ன செய்கிறார் என்பதே கதை.

படத்தின் கருவைத் தவிர எனக்கு படத்தில் பெரிய ஈர்ப்பு இல்லை. படத்திலேயே பிரமாதமான கதாப்பாத்திரம் ஜெனிலியாவுக்குத்தான். மிரட்டுகிறார். கவர்ச்சியில்லாமலேயே என்னை வசீகரிக்கிறார். ஜொள்ளு விட வைக்க நித்யா மேனன் இருக்கிறார். படத்தில் ஏன் இருக்கிறோம் என்று தெரியாமலேயே பல ஸ்டார்கள் உள்ளனர்.

படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் ஜெகதிஸ்ரீ குமார் அசத்தியுள்ளார். பெண்மை கலந்த தன்மையுடன் ராஜாவின் மகனை வசீகரப்படுத்தி ராஜாவுக்கு எதிராக செயல்பட வைப்பதில் அசத்துகிறார்.

பிரித்வி இந்தப்படத்திற்காகவே உடம்பை ஏற்றியிருப்பார் என நினைக்கிறேன். இரும்பு போல் முறுக்கேற்றி வைத்துள்ளார். பிரபுதேவா நித்யாவை கவர செய்யும் காட்சிகளில் சில மட்டுமே புன்முறுவலை வரவைக்கின்றன. மற்றவையெல்லாம் ஹூம்.

ரொம்ப போரடித்தால் மட்டுமே பார்க்கலாம்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment