Sunday, 24 May 2015

காதலில் சொதப்புவது எப்படி - பழசு 2012


எப்பொழுதும் முதல் நாள் முதல் காட்சி பார்த்தே விமர்சனம் எழுதி பழக்கபட்ட நான் இந்த வாரம் சில நாட்கள் கழித்தே சினிமாவுக்கு செல்ல முடிந்தது. காதலில் சொதப்புவது எப்படி பார்க்க நீண்ட நாட்களுக்கு பிறகு அபிராமிக்கு சென்றேன். ஒரு காலக்கட்டத்தில் அபிராமி தான் எங்களுக்கு சொர்க்கபுரி. ஐசிஎப்பில் நான் படிக்கும் பொழுது சைக்கிளில் வந்து விடுவோம். முதல் முதலாக நான் அபிராமியில் பார்த்த படம் அஜித்தின் ராசி. கடைசியாக பார்த்த படம் ஆனந்தம். அந்த மூன்று ஆண்டுகளும் வாரம் நான்கு முறை நான் கண்டிப்பாக அபிராமியில் தான் இருப்பேன். அதற்கு பிறகு நான் வேலை கிடைத்து அசோக் நகர் பக்கம் குடி வந்து விட்டதால் அந்த இடத்தை உதயம் காம்ப்ளக்ஸ் பிடித்து விட்டது.

அப்பொழுது அபிராமி தியேட்டரின் முன்பு மிகப்பெரிய காலியிடம் இருக்கும். இப்பொழுது பார்த்தால் கண்ணாபின்னாவென்று கட்டிடங்கள் எழுப்பி அசத்தியிருக்கின்றனர். என் மனைவியும் என்னுடன் வந்திருந்ததால் முதலில் டிக்கெட் எடுத்து விட்டு பிறகு சாப்பிட்டு விட்டு படத்திற்கு செல்லலாம் என்று டிக்கெட் கவுண்ட்டருக்கு சென்றேன். டிக்கெட் விலை 200, 180 அதற்கப்புறம் தான் 120 என்றனர். என்னடா சத்யம் எஸ்கேப்பிலேயே அதிகபட்ச விலை 120 தான். இங்கோ இவ்வளவு கேட்கின்றனரே என்று சந்தேகத்துடன் கேட்டேன். 200 மசாஜ் சேர் டிக்கெட், 180 ரீக்களைனர் சீட் டிக்கெட் என்றனர். இரண்டு 200 ரூபாய் டிக்கெட் எடுத்து விட்டு மீண்டும் தரைத்தளத்திற்கு சென்றேன்.

அங்கிருந்த டேபிளில் அமர்ந்தவுடன் 10 பேர் நம்மை சூழ்ந்து கொண்டு என்ன சாப்பிடுவது என்று யோசிக்கக் கூட விடாமல் மெனு கார்டை காட்டி தொல்லை செய்தனர். ஒரு வழியாக சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டும் முடித்து விட்டோம். படம் துவங்கி விட்டது. சாப்பிடும் போது தொல்லை செய்தவன் பில்லை கொடுக்க வரவில்லை. அப்புறம் சத்தம் போட்டு பில்லை செட்டில் செய்து விட்டு தியேட்டரின் உள் நுழைவதற்குள் படம் துவங்கி விட்டது. அபிராமியில் படம் பார்க்க செல்வோருக்கு ஒரு ஆலோசனை. தயவு செய்து அங்கு சாப்பிடுவது என்று முடிவு செய்தால் ஒரு மணிநேரம் முன்பாக சென்று விடுங்கள். இல்லையென்றால் நீங்கள் படத்தின் துவக்கத்தை மிஸ் செய்து விடுவீர்கள்.

--------------------------

படத்தின் கதை என்ன?
ஏற்கனவே படம் பார்த்த பதிவர்கள் அனைவரும் சொல்லி விட்டனரே அதனால் நான் என்னத்தை சொல்ல. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோ மோதலே கதை. இதில் நிறைய விஷயங்கள் எனக்கும் என் மனைவிக்கும் ஒத்துப் போகிறது. அதனால் நன்கு ரசித்தோம். பிறகு நண்பர்களிடம் படம் பற்றி பகிர்ந்து கொண்டேன். பிறகு தான் தெரிந்தது. அவர்களும் அதே போல் தான் ரசித்தார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் படத்தின் சம்பவங்கள் பெரும்பாலான காதலர்கள் மற்றும் திருமணமானவர்களுக்கு ஒத்து போவதால் தான் என்று நினைக்கிறேன்.

படத்தின் பெரும்பலமே கதாபாத்திரத்தேர்வு தான். சித்தார்த், அமலா பால் கச்சிதமாக பொருந்துகின்றனர். பெண்களிடம் மாட்டி அல்லோலப்படும் வெகுஜன பிரதிநிதியாக அனைவரின் மனதிலும் ஒட்டிக் கொள்கிறார். நைஸ் அமலாபால் அவரது ஹேர்ஸ்டைல், டிரெசிங் நன்றாக இருந்தது. சுரேஷ், ரவி ராகவேந்திரர் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். படத்தில் சித்தார்த்தின் நண்பர்களாக வரும் இருவர் வரும் காட்சியிலும் சிரிப்பு வந்து விடுகிறது.

ரண்டக்க ரண்டக்க என்று சித்தார்த் நினைத்துக் கொண்டு இருக்க அரைமணிநேரமாக என்ன யோசித்தாய் என்று அமலா பால் கேட்டு சண்டை வரும் இடம் அசத்தல், நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டுள்ளேன்.

யோசித்துப் பார்த்தால் படத்தின் ஹைலைட் படம் முழுவதுமே தான். முழுவதும் சொன்னால் இது வரை பார்க்காமல் இருப்பவர்களுக்கு சஸ்பென்ஸ் தேவை என்பதால் விமர்சனத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நேரில் கண்டுகளியுங்கள். உங்கள் கதாபாத்திரம் தான் படத்தில் நாயகனாகவோ நாயகியாகவோ உள்ளது என்பதை அறிவீர்கள்.

ஆரூர் மூனா

No comments:

Post a comment