Sunday, 24 May 2015

டாஸ்மார்க்கு ரசிகர்கள் - பழசு 2012

குடிப்பழக்கம் கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் தொற்றிக் கொண்டது. முதலில் முகர்ந்து பார்த்து போதையாகி பிறகு சில நாட்கள் கழித்து மூடி அளவுக்கு குடித்த பிறகு மட்டையாகிக் கொண்டிருந்தேன். 2002ம் ஆண்டு வரை அது தான் என் கெபாசிட்டியாக இருந்தது. அதுவும் எனக்கு ஒயின்சாப் சென்று சரக்கு வாங்க பயமாக இருக்கும்.

என் நண்பர்களை கடைக்கு சென்று வாங்க வைத்து திருவாரூர் SVT வேபிரிட்ஜ் அருகில் உள்ள காட்டில் தான் குடிப்போம். சென்னையாக இருந்தால் நான் இருந்த ஹாஸ்டலின் மேல்மாடியில் வாட்டர் டேங்கின் உள் அமர்ந்து குடிப்போம். ஒரு குவாட்டரை ஐந்து பேர் பங்கிட்டு குடிப்போம். குடித்து விட்டு அங்கேயே தூங்கி விட்டு தெளிந்த பிறகு தான் வீடு வந்து சேர்வோம்.

இது வரை உள்ளது என் கல்லூரி கால குடிப்பழக்கத்தின் சுயசொறிதல், இத்துடன் நிறுத்திக் கொண்டால் மானம் தப்பிக்கும். தற்போது நான் குடித்து விட்டு நடத்தும் கலாட்டாவை நம் பதிவுலக நண்பர்களே நன்று அறிவார்கள் என்று எண்ணுகிறேன்..

நான் அறிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களில் பலர் குடித்து விட்டால் அடிக்கும் லூட்டி பற்றி பகிர்ந்து கொள்ளவே இந்த தொடர்.

இத்தொடரின் முதலாமவர் சக்தி மாமா. என் அப்பாவின் அத்தை மகன். என் அப்பாவுக்கு மிக நெருங்கிய உறவினரான நண்பர். கும்பகோணத்தில் உள்ள ஒரு அய்யர் ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்க்கிறார். காலையில் ஹோட்டலில் 04.00 மணிக்கு பூஜை போட்டு கடையை திறந்து வைப்பவர் அவர் தான். மதியம் இரண்டு மணி வரை அவரது ஷிப்ட் இருக்கும்.

ஷிப்ட் முடிந்தவுடன் அங்கிருந்து கிளம்பி காரைக்கால் பக்கம் இருக்கும் அம்பகரத்தூர் சென்று சாமி கும்பிட்ட பிறகு சாராயம் வாங்கி குடித்து விட்டு கோயிலின் பிரகாரத்திலேயே மட்டையாகி விடுவார். பிறகு நள்ளிரவு தெளிந்தவுடன் எழுந்து கும்பகோணம் வந்து விடுவார். மறுநாள் வழக்கம் போல முதல் பூஜை அவர் தான். வயது 64 ஆகிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை. ஹோட்டலின் மாடியில் தான் தங்கியுள்ளார். எங்கள் வீடு தான் அவர் வீடு போல. வாரம் ஒரு முறை வீட்டிற்கு வருவார். வரும் போது அவரது பையில் என் அப்பாவுக்கென தனி குவார்ட்டர் இருக்கும்.

யாருக்கும் தெரியாமல் என் அப்பாவின் கையில் கொடுத்து விட்டு என் வீட்டையே அல்லோகலப்படுத்தி விடுவார். நான், என் தம்பி உட்பட வீட்டில் உள்ள அனைவருக்கும் தன் கையால் தான் பறிமாறுவார். வேண்டாம் என்றாலும் கேட்காமல் அளவுக்கு அதிகமாக சாப்பாட்டை வைத்து பொறுமையை சோதிப்பார். ஆனால் சிறு வயதில் இருந்தே என்னை தூக்கி வளர்த்தவர் என்பதால் எனக்கு அவர் என்ன செய்தாலும் கோவம் வராது. வீட்டில் உள்ளவர்களுக்கும் அப்படியே.

ஒரு முறை அளவுக்கு மிக அதிகமாக குடித்து விட்டு திருவாரூரில் உள்ள எங்கள் ஜெராக்ஸ் கடையின் முன்பு விழுந்து கிடந்தார். என் அப்பாவும் நானும் எவ்வளவோ முயற்சி செய்தும் எழுப்ப முடியவில்லை. என் அப்பா மிகுந்த கோபமடைந்து ரெண்டு வாளி தண்ணீரை கொட்டி எழுப்பி அடித்து விரட்டி விட்டார். அடடா பெரிய சண்டையாகி விட்டதே இனி மேல் வர மாட்டாரோ என்று நினைத்தால் இரண்டு நாள் கழித்து மாமாவும் அப்பாவும் புல் மப்பில் வீட்டிற்கு வந்தார்கள். சரிதான் இவர்களது நட்பை நாம் பிரிக்க நினைத்தாலும் அவர்களாக பிரிய மாட்டார்கள் என்று புரிந்து விட்டது.

ஒரு மாதத்திற்கு முன்பு கூட என் தம்பியின் திருமணத்திற்கு திருப்பதிக்கு அழைத்திருந்தோம். ஆனால் மேல் திருப்பதியில் சரக்கு கிடைக்காததால் வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்திருந்தோம். அது போலவே வண்டிகள் திருவாரூரிலிருந்து கிளம்பும் வரை மாமா வரவில்லை. ஆனால் மறுநாள் காலை திருமண நேரத்தன்று டான்னென்று மனிதர் ஆஜராகியிருந்தார்.

"நான் இல்லாமல் எப்படி கல்யாணம் நடக்கும்" என கேட்டு விட்டு மொத்த வேலைகளையும் முன்னின்று செய்தார். திருமணம் நல்லபடியாக முடிந்ததும் சத்தமில்லாமல் கீழ்திருப்பதிக்கு சென்று விட்டார். போய் நன்றாக சரக்கடித்து விட்டு நாங்கள் கீழ்திருப்பதியில் விட்டுச் சென்றிருந்த டெம்போ டிராவலரில் ஏறிப் படுத்திருந்தார்.

நாங்களெல்லாம் ஆளைக் காணோமே கல்யாணத்தில் சாப்பிடாமல் கூட சென்று விட்டாரே என்று மிகவும் வருத்தப்பட்டு கீழ்திருப்பதிக்கு வந்தால் மனிதர் வண்டியிலிருந்து எழுந்து வந்து எனக்கு கல்யாண சாப்பாடு இல்லையா என்று கேட்டாரே பார்க்கலாம். என் அப்பா அவரை அடித்த அடியில் மனிதர் எழுந்திருக்கவே மாட்டார் என்று நினைத்திருந்தோம். நான் மற்றும் சில உறவினர்கள் வேறு காரில் திருவாரூர் வந்து விட்டோம். வரும்வழியில் ஏற்கனவே வண்டியில் தனியாக சரக்கு வாங்கி வைத்திருந்து என் அப்பாவும் அவரும் குடித்து கும்மாளமிட்டு வந்ததை மறுநாள் அறிந்து தலையில் அடித்துக் கொண்டோம்.

இன்றும் சரி அவர் இல்லாமல் எங்கள் வீட்டில் விஷேசம் இல்லை. அந்த விஷேசத்தில் அவர் இல்லாமல் தொல்லை இல்லை.

ஆரூர் மூனா

No comments:

Post a comment