Monday, 1 June 2015

அலெக்ஸ் பாண்டியன் - பழசு 2013

எப்பொழுதுமே எனக்கு வெள்ளிக்கிழமையானால் ஏதாவது வேலை வந்து சினிமாவுக்கு செல்வதை தாமதப்படுத்தி விடும். ஆனால் இன்று காலை காட்சிக்கு முன்பே வேலையை முடித்து விட்டு கிளம்பி விட்டேன். ஆனால் படம் 08.30 மணி காட்சியே பார்த்து விட்டு இப்பொழுது வரை எனக்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை என்றால் எவ்வளவு கடுப்பில் இருந்திருப்பேன் என்று பாருங்கள்.

ஆனாலும் நாளை பொங்கல் தினத்தை கொண்டாட திருவாரூர் செல்கிறேன் எனவே இன்னும் ஒரு வாரத்திற்கு பதிவு போட முடியாது என்பதனால் வேறு வழியின்றி மனசை தேற்றிக் கொண்டு பதிவிடுகிறேன்.

இந்த வெளங்காவெட்டி படத்தின் கதை என்னவென்றால் ஒரு மாநிலத்தின் முதல்வர் மகளான அனுஷ்காவை காசுக்காக கார்த்தி கடத்தி விடுகிறார். கடத்திய பிறகு அனுஷ்காவுக்கு கார்த்தி மட்டுமே ஆண்மகனாக தெரிய காதலித்து தொலைகிறார். எனவே கடத்த சொன்னவர்களிடம் இருந்து கார்த்தி அனுஷ்காவை காப்பாற்றி அவரது அப்பாவிடம் ஒப்படைத்து பிறகு கல்யாணத்தையும் முதல்இரவையும் ஒருசேர அரங்கேற்றுகிறார். அவ்வளவு தான் படத்தின் கதை.
எவ்வளவு தான் மொக்கைப் படமாக இருந்தாலும் நான் அவ்வளவு சீக்கிரம் கழுவி ஊத்த மாட்டேன். ஆனால் இந்த படத்தின் விமர்சனத்தில் சாணி ஊற்றி மொழுக வேண்டும் என்ற அளவுக்கு ஆத்திரம் வந்தது.

நேற்று தான் டிவிடியில் மலையாளத்தில் தட்டத்தின் மறயத்து படம் பார்த்தேன். நெகிழ்ந்து போனேன். இன்று இந்த படத்தை பார்த்ததும் குலைந்து போனேன். இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். ஒரளவுக்கு பல அபத்தங்களை வெளியேற்றி விட்டு சற்றே தலைநிமிர்ந்த தமிழ்சினிமாவை இரண்டு படி கீழிறக்கியிருக்கிறார்கள்.

ஒரு தயாரிப்பாளர் அதுவும் பணத்தை தண்ணீராக செலவழிக்கும் ஒருவர் கிடைத்து விட்டால் எப்படியெல்லாம் அருமையாக எடுத்து அசத்தலாம். இவர்கள் அவரது சொத்தில் பல கோடிகளை குறைப்பது என்று முடிவெடுத்து விட்டே களத்தில் இறங்கியிருப்பார்கள் போல.

இது வரை எந்த படத்திலும் சந்தானத்தின் காமெடி இந்தளவுக்கு கடுப்பேற்றியது இல்லை. சந்தானம் தனது பாணியை மாற்றிக் கொள்வது நல்லது. இல்லையென்றால் மீண்டும் விஜய்டிவிக்கு வந்து லொள்ளு சபா செய்ய வேண்டியது தான். காமெடிக்காக பயங்கரமாக உழைத்திருக்கறார் ஆனால் நமக்கு தான் சிரிப்பு வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.

சிறுத்தை படத்தின் டிரெய்லரை பார்த்த போது எனக்கு இந்த அளவுக்கு மசாலா படம் தெலுகிற்கு தான் சரிப்பட்டு வரும், தமிழில் ஊத்திக் கொள்ளும் என்றே நினைத்தேன். ஆனால் நினைத்ததற்கு மாறாக படம் காமெடியிலும் ஆக்சனிலும் அசத்தியிருந்தது.

அது போலவே இந்த படத்தின் டிரெய்லரை பார்த்த போதே மொக்கையாக தெரிந்தது. ஆனாலும் கார்த்தி படங்களை தேர்வு செய்யும் போது கவனமாக செய்வார். நாம் ஏற்கனவே சிறுத்தையில் ஏமாந்து இருக்கிறோம். அதுபோலவே இந்த படத்தையும் அசத்தி விடுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் டிரெய்லரை விட பயங்கர மொக்கையாக படம் வந்திருக்கிறது.

தியேட்டரில் உக்கார்ந்திருந்த அனைவரும் இடைவேளையின் போதே கடுப்பாகி திட்டிக் கொண்டு இருந்தார்கள். அதிலும் சிலர் படம் முடியும் முன்பே எழுந்து சென்று விட்டார்கள் என்றால் மேக்கிங்கில் எப்படி கொடுமைப்படுத்தி இருக்கார்கள் தனியாக விம் போட்டு விளக்கவா வேண்டும்.

அனுஷ்காவிற்கு கால்கள் மட்டுமே நடித்திருக்கிறது, அதுவும் வெள்ளை சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு தரையில் அமர்ந்திருக்கும் மனோபாலாவின் பனியனுக்குள் இருந்து கால்களாலேயே செல்போனை எடுப்பார் பாருங்கள். யாருய்யா ரம்பாவை பார்த்து தொடையழகி என்று சொன்னது. இந்த காட்சியை பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்.

படத்தில் தேவையில்லாத இடங்களில் எல்லாம் பாடல்கள். பி அண்ட் சி பக்கம் கேண்டீனில் இந்த சமயத்தில் எல்லாம் வியாபாரம் பிச்சிக்கும். இது சென்னை என்பதனால் பாடல்கள் காட்சிகளில் வெளியில் வந்து தம்மடிக்க முடியவில்லை.

ஒரு இயக்குனருக்கு பத்து வருடம் மட்டுமே எண்ணங்கள் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு என்னதான் முக்கினாலும் செல்ப் எடுக்காது. மிகச்சிலருக்கு மட்டுமே அது கூட பத்து வருடம் இருக்கும். சுராஜூக்கு அவரின் முதல் படமான மூவேந்தர் வந்து பதினைந்து வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. டிரெண்ட் மாறி விட்டது என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். அட்லீஸ்ட் உதவி இயக்குனர்களிடம் இருந்தாவது யோசனைகள் பெற்று சீன்கள் அமைத்து இருக்கலாம்.

படத்தின் பயங்கர கொடுமையான அபத்தங்களில் ஒன்று சந்தானத்தின் தங்கச்சிகளிடம் கார்த்தி கடலை போடும் காமெடி தான். எந்த வீட்ல சார் உங்களுக்கு வயசுக்கு வந்த பெண் பச்சக்குதிர தாண்ட குனிஞ்சி பின்பக்கத்த காட்டி நிக்கும். அதிலும் ஜென்டில்மேன் படத்தில் வருவது போல வில்லங்கமான விளையாட்டுகள் ஆடுவதும் அதற்கு கேவலமான பெயர்கள் வைத்திருப்பதும் தான். அந்த வசனத்தையெல்லாம் நான் சொன்னால் இருக்கும் ஒன்றிரண்டு பெண் வாசகர்கள் கூட பிஞ்ச செருப்பை என் வீட்டுக்கு பார்சல் அனுப்புவார்கள்.

ரயில் சேசிங் காட்சி இருக்கே அதன் அபத்தங்களை பட்டியலிட்டோம் என்றால் இன்னும் கொடுமையாக இருக்கும், எந்த ஊரு ரயிலுல ராசா கடைசி பெட்டியில வெஸ்டிபுள் கதவு இருக்கும். அதுவும் திறந்து வேற இருக்கும். நான் வேலை பார்க்கிறது வெஸ்டிபுள் கதவு பழுதுபார்க்கும் பணி தான். நிற்கும் வண்டியில் மற்றொருவர் தூக்கி விட்டாலொழிய நம்மால் வெஸ்டிபுள் பக்கம் ஏற முடியாது. இதில் அனுஷ்கா ஒடும் ரயிலில் வெஸ்டிபுள் பக்கமாக ஏறுகிறார். கொடுமைடா சாமி.

நண்பர்கள் படத்திலிருந்து அந்த காலில் கயிறு கட்டி தூங்கும் காட்சி, கன்னிராசி படத்திலிருந்து சிக்கன் சூப் காட்சி, ஜல்லிகட்டு படத்தில் இருந்து போட்டில் செல்லும் போது பெட்ரோல் தீருவது போன்ற காட்சி ஆகியவைகளை சுடும் அளவுக்கா உங்களுக்கு சிந்தனை பஞ்சம். என்னவோ போங்க சார்.

அலெக்ஸ் பாண்டியன் படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கு பதில் திருத்தணி படத்தின் டிவிடியை போட்டு பார்த்து விட்டு ஆறுதல் அடைந்து கொள்ளவும். திருத்தணியே சூப்பர் படம் என்றால் இந்த படத்தின் நிலையை அறிந்து கொள்ளவும்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment