Sunday, 2 August 2015

பிரபல இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி - பழசு பிப்ரவரி 2013

ஏற்கனவே பிரபல பதிவராவது எப்படி என்று பார்த்தோம் அல்லவா. அதன் அடுத்த கட்டம் இலக்கிய ஒளிவட்ட பதிவராவது. இதற்கு நாம் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும். சில பல வம்பு வழக்குகள் இருக்கும். அதில் சத்தமில்லாமல் சரண்டாகி சமாதானமாகி விடும்.


முதலில் கவிதைகள். பெரிய விஷயமெல்லாம் இல்லை. நாலு வார்த்தைகள் சேர்த்த மாதிரி டைப்படித்து ரெண்டு ரெண்டு வார்த்தைகளுக்கு ஒரு முறை எண்டர் அடித்தால் கவிதை வந்து விடும்.

அடுத்த கட்டமாக எதுகை மோனை பொருத்தமான இரண்டு வார்த்தைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு அம்மா சும்மா. சோறு போட்டு ஊட்டி விட்டாள் அம்மா, அவளுக்கு முன்னால் எல்லாரும் சும்மா. எப்பூடி. அவ்வளவு தான். இதை வைத்து சில மாதங்கள் ஒட்ட வேண்டும்.

நம்மைப் போல கவிதை என்ற பெயரில் சில பேர் கொலையா கொன்டுகிட்டு இருப்பாங்க. அவங்க பதிவுக்கு போய் கவிதை புரியவில்லை என்றாலும் அருமை சூப்பர் என்று பின்னூட்டமிட்டு ஓட்டையும் போட்டு விட்டு வர வேண்டும். அப்பொழுது தான் அந்த இலக்கியவாதி பதிவரும் உங்களுக்கு ஓட்டு போடுவார்.

கவிதைகளை போட்டு புரட்டி எடுத்து ஒரு வழி ஆக்கிய பின்னர். பின்நவீனத்துவம் என்ற பகுதிக்கு வர வேண்டும். எனக்கு கூட இப்ப வரை பின்நவீனத்துவத்துக்கு அர்த்தம் தெரியாது. ஆனால் எந்த பதிவிலும் அந்த வார்த்தை வருகிற மாதிரி பார்த்துக் கொள்கிறேன் அல்லவா, அது தான் பின்நவீனத்துவம்.

பெரிய கவிஞர் ஆகிவிட்டோம் என்று முடிவெடுத்த பின்னால் எழுதிய எல்லா மொக்கைக் கவிதைகளையும் எடுத்து புத்தகமாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கவிதை புத்தக வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும்.

விழாவுக்கு பதிவர்களை அழைக்கும் போது கொஞ்சம் மிரட்டும் தொனியில் பேச வேண்டும். அதாவது விழாவுக்கு வர வேண்டும் அல்லது புத்தகத்தை படித்து விட்டு மதிப்புரை எழுதித்தர வேண்டும் என்று சொன்னால் எல்லாப்பதிவரும் தானாக வந்து விடுவார்கள்.

வந்தவர்களையும் சும்மாவிடக்கூடாது. புத்தகத்தை இலவசமாக கொடுக்கும் போது முதல் பக்கத்தில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும். கூடவே போட்டோவும் எடுத்து பதிவில் போட்டு அசத்த வேண்டும். இப்படி கவிதையை கொலையாக் கொன்ட பிறகு அடுத்தக் கட்டத்திற்கு தாவ வேண்டும்.

ஷகீலா, சிலுக்கு இவர்களைப் பற்றி கட்டுரைகள் எழுத வேண்டும். சும்மா ஹிட்ஸ் பிச்சிக்கிக்கும். நாம் மட்டும் தான் எழுத உரிமை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் இது போல் எழுதினால் ஆபாச பதிவர் என்ற பட்டம் கொடுத்து சிரிக்க வேண்டும்.

வார்த்தைகளை புதிதாக போட்டு அசத்த வேண்டும். ஆகச்சிறந்த, அவதானிப்பு, படுதிராபை போன்ற வார்த்தைகளை எல்லாப்பதிவிலும் இடம் பெறும்படி செய்ய வேண்டும். இன்னும் சிவப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களில் உள்ள வார்த்தைகளை எடுத்து கையாள பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை நமது பதிவில் பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி சொல்லி வந்த நாம், இனி யாரையும் மதிக்கக்கூடாது. யாருக்கும் பின்னூட்டமும் இடக்கூடாது. நம்மளை எந்த பதிவர் கேள்வி கேட்டாலும் போடா வாடா என்று அழைத்துதான் பதிலளிக்க வேண்டும்.

புத்தங்கள் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஒரு அட்டுத் தொடர் எழுத வேண்டும். இனிப்புத் தண்ணி என்ற பெயரில் எழுத ஆரம்பிக்க வேண்டும். தொடரின் ஒவ்வொரு பகுதியும் நெஞ்சை நக்க வேண்டும். பிறகு ஏதாவது ஒரு இளிச்சவாய ஸ்பான்சரைப் பிடித்து பாதி காசு நாம் போட்டு ஒரு புத்தகத்தை வெளியிட்ட பின்பு அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை நம் பதிவின் வலது மூலையில் இடம் பெறும் படி லேஅவுட் அமைத்துக் கொள்ள வேண்டும்.

பதிவர் சந்திப்புக்கு அடிக்கடி வரக்கூடாது. வந்தாலும் எந்த வேலையும் இழுத்துப் போட்டு செய்யக்கூடாது. கலந்து கொண்ட பதிவர்களையும் இளக்காரமாக பார்க்க வேண்டும். பதிவர் சந்திப்புக்கு வரும் போது சரக்கடித்து தான் வர வேண்டும். அடிக்கடி ஹா ஹா என சத்தம் போட்டு சிரிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் எல்லார் கவனத்தையும் நம் பக்கம் ஈர்க்கும்படி செய்து அசத்தி விடலாம்.

ஒரு இலக்கிய அமைப்பை பிடித்து அதன் அமைப்பாளர்களிடம் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்து அவர்கள் கொடுக்கும் ஒரு விருதை வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதனை நம் வலைப்பக்கத்தில் வழக்கம்போல மாட்டிக் கொள்ள வேண்டும்.

இனி பதிவுகளில் எழுதுவதை குறைத்துக் கொண்டு ப்ளஸ்ஸில் அதிகம் இடுகைகளை இட வேண்டும். அதுவும் புதிதாக எழுதத் தொடங்கியவர்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்க வேண்டும். அவர்களை குண்டான் வாயன், அண்டா வாயன் என்று அழைத்து பரிகாசம் செய்ய வேண்டும்.

முக்கியமாக முன் முகம் நாயின் பின்பக்கம் போல இருக்கு என்று அசிங்கமாக பேசி எதிராளியின் வாயைப்பிடுங்கி அவர்கள் நிதானம் தவறி கெட்ட வார்த்தைகளை விட்டதும் நம்முடைய பின்னூட்டங்களை சத்தம் போடாமல் டெலிட் செய்து விட வேண்டும். அவ்வளவு தான். இனி வரும் எல்லாக் காலங்களிலும் நாம் தான் இலக்கியப் பதிவர்.
ஆரூர் மூனா

No comments:

Post a Comment