Sunday, 2 August 2015

கூட்டுக் குடும்பங்கள் - பழசு பிப்ரவரி 2013

சிறுவயதில் இருந்தே கூட்டுக் குடும்பங்கள் மேல் எனக்கு தீராக் காதல் உண்டு. எதையும் பகிர்ந்து வாழும் வாழ்க்கை என்றுமே சொர்க்கம் தான். ஆனால் எனக்கு தேவையின் காரணமாக அவ்வாறு சிறுவயதில் இருந்தே வீட்டுடன் இருக்க முடியாமல் போய் விட்டது தான் பெரும் வருத்தம்.


இன்று கூட பசுமையாக என் நினைவில் நிற்பது என் தாத்தா வீட்டு வாழ்க்கை தான். அம்மாவின் தாய் வீடு நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனூர் என்ற கிராமத்தில் உள்ளது. அந்த ஊரில் உள்ள அனைவருமே எங்கள் சொந்தக்காரர்கள் தான். என் அப்பாவை திருமணம் செய்து கொண்டு திருவாரூர் வந்து விட்ட பிறகும் கூட அம்மாவிற்கு ஆதனூரில் தான் சனி, ஞாயிறு கழியுமாம்.

என் அம்மாவுடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு பேர். நான் பள்ளியில் படிக்கும் போது ஆண்டு விடுமுறை முழுவதும் ஆதனூரில் தான் கழியும். தாத்தாவிற்கு பிறந்த ஏழு பேர், அவர்களின் துணைகள், வாரிசுகள் என அனைவரும் கோடை விடுமுறைக்கு ஆதனூர் வந்து விடுவர்.

தாத்தா முழு நேர விவசாயி. காலையில் எழுந்து நீராகாரம் குடித்து விட்டு வயலுக்கு சென்று வேலையை துவக்கி வைத்து விட்டு வேப்பங்குச்சியில் பல் துலக்கிக் கொண்டே வீட்டுக்கு வருவார். வந்ததும் பழைய சோத்துடன் முதல்நாள் வைத்த குழம்பை சுண்டக்காய்ச்சியது, நெருப்பில் சுட்டு கருவாடு அல்லது உப்புக்கண்டம் வைத்து திருப்தியாக சாப்பிட்டு விட்டு மீண்டும் வயலுக்கு போய் விடுவார்.

நாங்கள் பேரப்பிள்ளைகள் அனைவரும் அது போலவே அதிகாலையில் அவருடன் எழுந்து வயலுக்கு சென்று விட்டு வயக்காட்டிலேயே காலைக்கடன்களை முடித்து விட்டு தும்பி பிடித்து விளையாடிக் கொண்டு, கொடுக்காப்புளிக்கா எடுத்து தின்று கொண்டு விளையாடிக் கொண்டு இருப்போம்.

தாத்தா போகலாம் என்று சத்தம் போட்டதும் அவருடனே வீட்டுக்கு வரும் வழியில் வேப்பங்குச்சியில் பல்துலக்கிக் கொண்டு வருவோம். அது கசப்பா இருக்கும், முடியாதுன்னு சொன்னா தாத்தா திட்டுவாரேன்னு சும்மா குச்சியை கடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து பாட்டியிடம் கொஞ்சம் பேஸ்ட் வாங்கி பல் துலக்கினால் தான் நமக்கு சரிப்பட்டு வரும்.

மாமாக்கள் நால்வரில் மூவர் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தனர். ஒருவர் மட்டும் சென்னையில் புள்ளியியல் துறையில் ஆய்வாளராக இருந்தார். என்னதான் இருந்தாலும் வீட்டில் தாத்தாவுக்கு அடங்கிய பிள்ளைகளாகத்தான் இருந்தார்கள். வீட்டில் என்ன சாப்பாடு என்று முடிவு செய்வது முதல் யார் எத்தனை நாட்கள் வீட்டில் இருப்பது என்பது வரை தாத்தா முடிவு தான்.

காலை சாப்பாடு முடிந்ததும் பேரப்பிள்ளைகளான நாங்கள் அனைவரும் தோப்புக்கு விளையாட சென்று விடுவோம். பயங்கர பசியுடன் தான் வீட்டிற்கு வருவோம். மதியம் சாப்பாட்டில் பெரும்பாலும் அசைவம் தான். தாத்தாவின் பேவரைட் கறிக்கோலா உருண்டை குழம்பும் ஆட்டுக்கறி வறுவலும் தான்.

ஒருவேளை இந்த குடும்பம் சாப்பிட ஒரு ஆட்டையே அடிக்க வேண்டியிருக்கும். வீட்டில் கோழி, ஆடு, கின்னிக் கோழி, புறா, வான்கோழி எல்லாமே வளர்ப்பதால் கடையில் வாங்க மாட்டார்கள்.

சாப்பிட்டதும் வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்காக போர்செட்டுக்கு சென்று விடுவோம். ஒவ்வொருத்தருக்கும் எண்ணெய் தேய்த்து ஊறியதும் சீயக்காய் தேய்த்து குளிக்க வைத்து கறையேற்றி விடுவார்கள்.

சாயந்திரம் ஆனதும் தாத்தா குளிக்கப்போகும் போது வீட்டில் உள்ள மாடுகளையும் குளத்திற்கு ஒட்டிச் செல்வார். நாங்களும் ஆளுக்கொரு மாட்டை கொண்டு தேவர்குளத்திற்கு செல்வோம். அதில் எனது பேவரைட் ராமாயி என்ற எருமைமாடு தான்.

குளத்தில் எருமையின் மேல் படுத்துக் கொள்ள கரெக்ட்டாக நான் மூழ்கும் வரை உள்ள அளவுக்கு நீரில் நிற்கும். இருட்டும் வரை குளத்தில் விளையாடிவிட்டு வீட்டிற்கு சென்று அனைவரும் வீட்டின் வெளியில் உள்ள புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்போம்.

இரவு உணவை முடித்துக் கொண்டு வெளியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு நெடுநேரம் பேசியிருந்து பிறகு உறங்கிவிடுவோம். இது எனக்கு வருடத்திற்கு இரண்டு மாதம் தவறாமல் நடக்கும். கோடை விடுமுறை முடிந்ததும் திருவாரூர் வந்து விடுவேன். பத்துநாட்களுக்கு மனம் அந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலேயே லயித்துக் கிடக்கும்.

அன்றே முடிவு செய்தேன். நான் மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தை அமைத்து என் தம்பி, ஒன்று விட்ட சகோதரர்கள், அவர்களின் குடும்பங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து தான் வாழ வேண்டுமென. ஆனால் மேற்சொன்ன குடும்பமே ஒரு சாவின் காரணமாக அடித்துக் கொண்டு பிரிந்து யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல் திசைக்கொருவராக இருப்பது எனக்கு ஜீரணக்க முடியாத சோகம்.

தெலுகில் பத்து வருடங்களுக்கு முன் முராரி என்றொரு படம் வந்தது. இன்று வரை அந்தப் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் நான் இத்தனை முறை விரும்பி பார்த்ததற்கு காரணம் அந்த படத்தில் வரும் இரண்டு அருமையான கூட்டுக் குடும்பங்கள் தான்.

தமிழில் எனக்கு இந்த உணர்வை தந்தது வருஷம் 16. சமீபத்தில் சீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு தெலுகு படம் பார்த்தேன். உணர்ச்சிக் குவியலான அந்த படத்தினை இடைவேளைக்கு பிறகு அழுது கொண்டே தான் படம் பார்த்தேன்.

இன்று வரை எனக்கு என் கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆசை மனதில் பசுமையாக காத்திருக்கிறது. இத்தனை பெரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கையை என் மனதில் வித்திட்ட தாத்தா நான்கு நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.  மறுபடியும் கூட்டுக்குடும்ப எண்ணம் என் மனதில் துளிர்விட்டு இருக்கிறது. என்றாவது ஒருநாள் என் தம்பிகள் இது புரிந்து ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
ஆரூர் மூனா

No comments:

Post a Comment