Sunday, 2 August 2015

காதலர் தினம் - பழசு பிப்ரவரி 2013

இன்றைய காலக்கட்டங்களில் சிறுவயது பசங்களுக்கு கூட காதலர் தினம் என்றால் என்னவென்று தெரிகிறது. இன்றைய தொலைக்காட்சிகளும், இந்துத்வா அமைப்புகளும் பிரபலப்படுத்தி விட்டன.


ஆனால் நம்புங்கள் எனக்கு 18வயது வரை காதலர் தினம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. முதல் முதலாக 1998 பிப்ரவரி 14 அன்று தான் அப்படி ஒன்று இருப்பதே தெரிய வந்தது. அதன் பிறகு சென்ற ஆண்டு வரை நானும் என் நண்பர்களும் இந்த காதலர் தினத்தில் படாத பாடு பட்டு இருக்கிறோம்.

1998ம் ஆண்டு காதலர் தினத்தின் போது நடைபெற்ற சம்பவங்களை பகிர்ந்தாலே ஒரு பதிவு வரும் அவ்வளவு கூத்துக்கள் அன்றைய தினத்தில் நடந்தது. என் வகுப்பில் 25 ஆண்கள், 18 பெண்கள் படித்தோம். மொத்த கல்லூரியில் 600 பேருக்கு மேல் படித்தோம்.

அந்த ஆண்டு ஏகப்பட்ட இணைகளுக்கு ஈர்ப்பு மட்டுமே இருந்தது. அதனை காதலாக மாற்ற முயற்சித்தது பிப்ரவரி 14 அன்று. ஆனால் பெரும்பாலானோருக்கு கிடைத்தது பல்பு மட்டுமே. அன்றைக்கு குடிகாரனாவர்கள் ஏராளமானோர். அவற்றில் சில பெண்களும் அடக்கம் என்பது தான் ஜீரணிக்க முடியாத கொடுமை.

ஆனந்த் என்ற நண்பன் ஒருவன் ஜெயஸ்ரீ என்ற பெண்ணை அதுவரை மனசுக்குள் காதலித்து வந்தான். ஆனால் அவன் ஒரு கஞ்சன். கையேந்தி பவனில் தின்ன தோசைக்கு காசு கொடுக்கக்கூட யோசிப்பவன். அவன் அன்று காதலை ஜெயஸ்ரீயிடம் சொல்ல முடிவெடுத்து 10 ரூவாய்க்கு கிரீட்டிங் கார்டு வாங்கி வந்தான்.

அதனை கொடுக்கும் போது இங்கிலீஷில் கவிதை சொல்ல முடிவெடுத்தோம். எங்களில் யாருக்கும் இங்கிலீஷில் கவிதை தெரியாததால் பக்கத்து செக்ஷனில் இருந்த ராபர்ட்டிடம் ஒரு கவிதை கடன் வாங்கி அவனுக்கு கொடுத்தோம், அவனும் செய்முறை லேப்பின் பின்புறத்தில் நின்று ஒரு மணிநேரம் மனப்பாடம் செய்து வந்தான்.

வகுப்பு முடியும் போது வாழ்த்து அட்டையை கொண்டு போய் ஜெயஸ்ரீயிடம் கொடுத்து ஆங்கிலத்தில் கவிதை சொல்லி ஐ லவ்யூ என்றான். அதற்கு ஜெயஸ்ரீ "ஆனந்த், நான் உனக்கு சரிப்பட மாட்டேன். உன்னால் என்னை பைக்கில் ஏற்றிக் கொண்டு வெளியில் அழைத்து செல்ல முடியுமா, வாரம் இரண்டு முறை தியேட்டருக்கு அழைத்து செல்ல முடியுமா, தினமும் பிட்ஸா கடைக்கு அழைத்து சென்று வாங்கித் தர முடியுமா" என்று கேட்டதும் அங்கேயே கார்ட்டை கிழித்துப் போட்டு வந்து விட்டான்.

எங்களிடம் வந்து "மாப்ள அது காஸ்ட்லி காருடா என்னால் மெயிண்ட்டெயின் செய்ய முடியாது" என்று கூறி விட்டு ஒயின்ஷாப்புக்கு சென்று குடிக்க ஆரம்பித்தவன் தான். இப்பல்லாம் ஆப் கட்டிங் அடித்தால் தான் பையனுக்கு போதையே ஏறுகிறது.

அதே நாளில் நானும் ஒரு பெண்ணுக்கு கடிதம் கொடுக்க முற்பட்டு மற்ற நண்பர்களின் தோல்விகளை பார்த்து பயந்து போய் அதனை அங்கேயே கிழித்து எறிந்தது எல்லாம் என் வரலாற்றில் வரும். இதே நிலை தான் ஏழுமலை, மணிவண்ணன் மற்றும் கார்த்திக்குக்கும்.

ஆனால் அதே நாளில் காதலை சொல்லி ஜெயித்தவர்களும் உண்டு. சத்தியமூர்த்தி பரிமளாவிடம் சம்மதம் வாங்கினான். தணிகைவேல் கவிதாவிடம் சம்மதம் வாங்கினான். இன்னும் பல காதல்களும் ஜெயித்தது உண்டு. ஆனால் அவை பிறகு தோல்வியடைந்து விட்டதால் அவர்களின் பெயர்கள் வேண்டாம். மேற்கூறிய இரண்டு இணைகளும் பின்னர் திருமணம் செய்து கொண்டு இன்று வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதன் பிறகு ஒவ்வொரு காதலர் தினத்திலும் அந்த சீசனில் நம்முடன் நெருங்கிய நட்பில் இருக்கும் பெண்ணிடம் காதலை சொல்ல முயற்சித்து தயக்கத்தின் காரணமாக பின் வாங்கியதே வழக்கமாக ஆகிவிட்டது.

பத்து வருடத்திற்கு பிறகு வந்த தலைமுறையில் மிகப் பெரும்பாலானோருக்கு காதல் என்பதே சாத்வீகம் என்பதைத் தாண்டி ப்ரோஜகத்திற்கு தான் என்று ஆகி விட்டது.

மூன்று வருடத்திற்கு முன்பு 19 வயதான என் மாமா பையன் ஜானு(ஜானகிராமன்) ஒரு பெண்ணை பார்த்து கரெக்ட் செய்து காதலர் தினத்தன்று கில்மா செய்து விடலாம் என்று திருச்சி பக்கத்தில் உள்ள முக்கொம்புக்கு கொண்டு போய் செடிகளுக்கு மறைவில் மிகத்தீவிரமான ஆராய்ச்சியில் இருக்க அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பினர் இருவரையும் அதே கோலத்தில் எழுப்பி நையப்புடைத்து தாலி கட்டச் சொல்லி மிரட்டியிருக்கின்றனர்.

அவர்கள் அசந்த நேரத்தில் பையன் விட்டால் போதுமென்று அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஒடி வந்து இருக்கிறான். மறுநாள் அவனை தேடி வந்த பெண் முகத்தில் காறித் துப்பி விட்டு சென்றாள். அவனோ ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக் கொண்டு அடுத்த பெண்ணிற்கு குறி வைத்தான்.

கடுப்பாகிப் போன நாங்கள் அன்று இரவு அவனை சரக்கடிக்க வா என்று நைசாக பேசி கூட்டிக் கொண்டு போய் நையப்புடைத்தோம். அன்றிலிருந்து நானோ என் தம்பிகளோ இருந்தால் அந்த பக்கமே இன்று வரை வர மாட்டான்.

இவ்வளவு அனுபவத்திற்கு பின்பும் தைரியமாக ஒரு பெண்ணை காதலித்து கரம் பிடித்து விட்டேன். இப்பொழுது கூட ரசித்து ரசித்து காதலர் தின வாழ்த்து அட்டைகள், பரிசுகள் வாங்கிக் கொடுத்து அசத்திக் கொண்டு இருக்கிறேன் என் மனைவிக்கு.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment