Sunday, 9 August 2015

தொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள் - பழசு ஏப்ரல் 2013

கடந்த வியாழன் அன்று வேலைக்கு செல்லும் நேரத்திற்கு வழக்கம் போல் கிளம்பிச் சென்றேன். நான் வேலைக்குச் சேர்ந்து முதல் தொழிற்சங்க தேர்தல் அல்லவா. அதனால் விவரம் சற்று குறைவாகவே தெரிந்திருந்தது.


லோகோ ஸ்டேசன் தாண்டியதும் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் வாசலில் ஒரு யூனியன் ஆளை மற்றொரு யூனியனை சேர்ந்தவர்கள் வெளுத்துக் கொண்டு இருந்தனர். ரத்தம் சொட்டச் சொட்ட அவர் எழுந்து ஓடினார். காவலுக்கு வந்தவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். லேசாக கலக்க ஆரம்பித்தது.

வழியெங்கும் காவல்துறையினரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் நிறைந்திருந்தனர். தொழிற்சாலை உள்ளே நுழையும் முன்னே ஒரு யூனியனைச் சேர்ந்தவர்கள் என்ன ஏது என்று கேட்காமல் அவர்கள் சின்னமிட்ட பூத் சிலிப் கொடுத்து விட்டு என் சட்டையில் அவர்கள் பேட்ஜை குத்தி விட்டு சென்றனர்.

தனியா இருந்தா வம்பு தான் வரும், நமக்கு பலமே நமது செக்சன் ஆட்கள் உடன் இருப்பது தான் என்று முடிவு செய்து எங்கும் நின்று வாக்களிக்கும் பகுதிகளை கவனிக்காமல் வண்டியை நேரே என் செக்சனுக்கு விட்டேன். உள்ளே ஒரு யூனியனின் சார்பாக பட்டுவாடா நடந்து கொண்டு இருந்தது.

என் அருகிலும் வந்தார்கள், உன்னைப் போன்ற அப்ரெண்டிஸ்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது எங்கள் யூனியன் தான் எங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று காதில் கிசுகிசுத்து விட்டு கவரை கையில் திணித்து சென்றார்கள். அன்றைய உ.பா செலவுக்கு பணம் கிடைத்ததால் என் செக்சன் மக்கள் குதூகூலத்துடன் இருந்தார்கள்.

உள்ளே நுழைந்து பார்த்தால் உள்ளே உ.பா ஆறாய் ஓடிக் கொண்டு இருந்தது. பிறகென்ன கும்பலுடன் கோயிந்தா தான். அந்த நாள் வரை வேலைக்கு செல்லும் ஒர்க்சீட்டை எழுதிக் கொடுக்கும் டேபிள் கச்சேரி மேளாவாகி இருந்தது.

வாக்குப்பதிவு நடக்கும் இடம் கூட்டத்தால் அல்லோகலப்பட்டுக் கொண்டு இருந்தது. கூட்டம் குறையும் வரை அங்கு செல்ல வேண்டாம் என்றும் நாங்கள் ஆதரிக்கும் யூனியனைத் தவிர மற்றவர்கள் பட்டுவாடா செய்வதால் போய்க்கேட்டால் சண்டை தான் வரும் என்றும் தாமதமாக செல்வது என்று முடிவு செய்து அதுவரை தாக சாந்தியில் இறங்கினோம்.

ஒரு யூனியன் பட்டுவாடா செய்தது அறிந்ததும் மற்றொரு யூனியனும் பட்டுவாடா செய்ய ஆரம்பித்தனர். அவர்களின் ரகசிய கோரிக்கை என்னவென்றால் நாங்கள் தான் மெஜாரிட்டியினர், எங்களை ஆதரித்தால் சில கோரிக்கைகளை குறிப்பிட்டு செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து சென்றனர்.

பட்டுவாடாவை மொத்தமாக சேகரித்து மீண்டும் உ.பா வாங்க நானும் கங்காவும் சென்றோம். அதற்குள் செக்சனுக்கு பிரியாணி, அசைவ சாப்பாடு வகையறாக்கள் வந்து சேர்ந்தது.

கச்சேரி களை கட்ட ஆரம்பித்தது. அதற்குள் ஜாதி வகுப்பை பிரதானப்படுத்தி இயங்கும் யூனியன் ஆட்கள் பட்டுவாடா விவரம் அறிந்ததும் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர்களிடம் நாம் இந்த வகுப்பை சேர்ந்தவர்கள் நமது ஓட்டு நம்ம யூனியனுக்கு தான் வர வேண்டும்.

காசு வாங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கேட்டார்கள். ஏற்கனவே இவர்கள் மற்றொரு யூனியனிடம் 10 லட்சம் வாங்கிக் கொண்டு ஓட்டை பிரிப்பதாக வந்த செய்தியால் கடுப்பில் இருந்தார்கள் தொழிலாளிகள். முதல் அடி சாம்பார் பொட்டலத்தில் ஆரம்பித்தது. யூனியன் தலைவனுக்கு பின்னால் இருந்து என் செக்சன் ஆள் சாம்பார் பொட்டலத்தை வீசி எறிந்தான். பிறகென்ன அவர்கள் ஆள் அம்பு படையுடன் வந்து சேர மினிவார் ஆரம்பித்தது.

ஆர்பிஎப்கள் வந்து கூட்டத்தை விலக்கி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அன்று வரை பெரிய மனிதன் தோரணையில் வெள்ளை சட்டை அணிந்து பந்தாவாக வந்த தலைவன் சாம்பார் அபிஷேகம் பெற்று அசிங்கப் பட்டு போனார்.

இன்னும் எக்கச்சக்கமாக ஏத்திக் கொண்டு ஆட்டம், பாட்டம் கச்சேரி என நேரம் சென்று கொண்டிருந்தது. மற்ற செக்சன் ஆட்களை ஓட்டுப் போடும் படி பணித்துக் கொண்டு இருந்த யூனியன் ஆட்கள் எங்கள் செக்சன் பக்கமே வர பயந்து கொண்டு இருந்தனர்.

மதியம் பிரியாணி தின்று விட்டு ஆட்கள் அப்படியே நித்திரையில் சாய ஆரம்பித்தார்கள். நாலு மணிக்கு போதை தணிந்ததும் மொத்த கும்பலும் ஓட்டுப் போட சென்றோம். எல்லா யூனியன் ஆட்களும் முறைத்துக் கொண்டு இருந்தார்கள். செய்த கலாட்டா அப்படியாச்சே.

ஓட்டுப் போட்டு முடிந்ததும் பதவிசாக வெளியே வந்து கலைந்தோம். வெளியே வந்த பிறகு எங்களுக்கு வேண்டிய ஆட்களிடம் இருந்து தகவல் வந்தது. நாங்கள் செய்த கலாட்டாவினால் அந்த குறிப்பிட்ட யூனியன் ஆட்கள் எங்களை வம்பில் மாட்டி விட காத்திருக்கிறார்கள் என்று.

வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி நடக்கிறது. அன்று தான் கச்சேரி இருக்கிறது. எங்கள் செக்சனின் பெரும்பாலான ஆட்கள் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருக்கும் யூனியன் வெற்றி பெற்றால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை அந்த யூனியன் தோற்றால் பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.

நாங்கள் ஆதரித்த யூனியன் எது, வாக்குப்பதிவு விவரங்கள் போன்றவற்றை 2ம் தேதி தெரிவிக்கிறேன்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment