Sunday, 2 August 2015

குறைந்து வரும் காந்தியிசம் - பழசு பிப்ரவரி 2013

வினோதினியின் மரணம் ஒருதலை காதலின் குரூரம். இதற்கு காரணம் என்னவென்று கொஞ்சம் ஆலோசித்தோமென்றால் குறைந்து போன மனித நேயம் என்ற காரணம் புலப்படும். இன்று மனிதர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு மிகவும் குறைந்து போய் இருக்கிறது.


மற்றவர்களுக்காக ஒரு விஷயத்தை விட்டுக் கொடுப்பது மிகவும் குறைந்து இன்னும் சொல்லப் போனால் சுத்தமாக நின்று விட்டு இருக்கிறது. இதற்கு காரணங்களை ஆலோசிக்க பல வருடங்கள் முன்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது.

20 வருடங்களுக்கு முன்பு ஒருவர் உண்மையை சொல்ல சிரமப்பட்டதே இல்லை. ஆனால் இன்று பொய் அனைவருக்கும் மிகச்சரளமாக வருகிறது. உண்மையை சொல்லத்தான் சிரமப்படுகிறார்கள்.

வளர்ப்பு முறை மாறியிருப்பதைத் தான் இதற்கு குற்றமாக சொல்ல வேண்டும். குழந்தைகள் அதிகமிருந்த வீட்டில் ஒருவருக்கு ஒருவர் சகோதர பாசத்தில் விட்டுக் கொடுத்து வளர்ந்து வந்தனர். பெரியவர்கள் இருந்த வீட்டில் பொய் சொல்வது கண்டிக்கப்பட்டது. குற்றம் என மனதில் விதைக்கப்பட்டது.

இன்று விசுவாசங்கள் என்பதே காந்திக்கு அடுத்தபடியாக போட்டோவில் தொங்குகிறது. நட்புக்குள் துரோகங்கள் சகஜமாகி விட்டது. இந்த தலைமுறை வாலிபர்களுக்கு இதனை விளக்கிக்கூறி இவற்றிலிருந்து மீட்பது எப்போது.

எனக்கு மிக நெருங்கிய உறவினர் வீட்டில் நடந்த சம்பவங்களை நான் உதாரணமாக கூறுகிறேன், ஒப்பிட்டுப் பாருங்கள். எனக்கு சித்தப்பா முறை வரும் சொந்தக்காரர் அவர். அவர்கள் பரம்பரையின் நிர்வாகத்தில் ஒரு கோயில் இருக்கிறது. அவர்களின் தலைமுறையினர் தான் காலம் காலமாக கோயிலை நிர்வகித்து வந்தனர்.

சித்தப்பாவின் அப்பா மிகப்பெரிய ஜமீன்தாரராக இருந்து இறந்து போனார். அவரது மனைவி அந்த காலத்திலேயே திரையிடப்பட்ட மாட்டு வண்டியில் தான் வெளியில் செல்வார். எந்த நேரமும் நகைகள் அணிந்து தான் இருப்பார். ஆனால் காலங்கள் உருண்டோடின.

சித்தப்பாவுக்கு 4 சகோதரர்கள். தந்தை இறப்புக்கு பின்னர் சொத்துக்கள் பிரிக்கப்பட்டன. கோயிலை நிர்வகிக்கும் பிரச்சனையில் அனைவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பேச்சு வார்த்தை இல்லாமல் போனது. இந்நிலையில் அம்மாவை கவனிப்பது யார் என்ற போட்டியில் யாரும் கவனிக்காமல் விட்டனர்.

கடைசி காலத்தில் நடமாட முடியாமல் கவனிப்பாறின்றி வீட்டுக்குளே மலஜலம் கழித்து நாறிப் போய் இறந்தார். அம்மா வழியில் வந்த சொத்துக்களை பிரித்துக் கொண்ட சகோதரர்கள், அம்மாவை கவனிக்க வக்கின்றி தவிக்க விட்ட கொடுமையை என்னவென்று சொல்வது.

இவர்களின் குழந்தைகளுக்கும் திருமணமாகும். அவர்கள் கண்டிப்பாக இந்த சித்தப்பன்களை நடுத்தெருவில் தான் நிப்பாட்டுவார்கள். மனைவி குழந்தைகள் முக்கியம் என்று தெரிந்த ஆண்களுக்கு அம்மாவை கவனிக்க சற்று சிரமப்பட்டு இருந்தால் அவர்கள் இந்த அவல நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள்.

இத்தனைக்கும் சித்தி எனக்கு மிகநெருங்கிய சொந்தம். இன்று மாமியாரை தவிக்க விட்டாய், இதே போன்ற நிலை உனக்கு ஒரு நாள் வரும். அன்று என்னிடம் வந்து நிற்கக்கூடாது என்று சத்தம் போட்டு நான் அவரிடம் பேசுவதையே நிறுத்தி விட்டேன்.

இதே போல் ஒரு குடும்பம். அப்பா, அம்மா, இரு ஆண் குழந்தைகள். நன்றாகத்தான் வளர்ந்தார்கள். எல்லா சுகத்தையும் அப்பாவிடம் பெற்று வளர்ந்த தம்பி பையன் கல்லூரி படிப்பு படிப்பதற்காக கோவை சென்றான். அப்பா கடனில் இருந்த காரணத்தால் அண்ணன் காசில் படித்தான்.

அண்ணன் காசில் படித்தவன் இன்று நல்ல வேலை கிடைத்து நிறைய சம்பளம் வாங்குகிறான். அண்ணன் சொற்ப சம்பளத்தில் வெளியூரில் இருக்க அப்பா, அம்மாவை கவனித்து வரும் தம்பி, அப்பாவையும் அம்மாவையும் மதிப்பதே கிடையாது. அப்பாவை பலமுறை அடிக்கப் போய் தட்டிக் கேட்ட அண்ணனையும் முறைத்துக் கொண்டு பேசுவது கிடையாது.

இன்றைய பெரும் சோகம், அம்மா கடுமையான கால் மூட்டுவலியில் இருக்க மனைவிக்கு சமைத்து தரவில்லை என்பதற்காக சத்தம் போட்டு வேலைக்கு போய் இருக்கிறான். ஒரு வேலைக்காக என்னிடம் வந்தான், உன் குறைகளையெல்லாம் சரி செய்யாமல் என்னிடம் வராதே என்று விரட்டி விட்டேன்.

ஒரு காலத்தில் பள்ளியில் வாழ்வியல், சூழ்நிலையியல் என்றொரு பாடம் இருந்தது. நல்லொழுக்கம், நன்னடத்தை கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய பரபரப்பான காலத்தில் மதிப்பெண் முக்கியமில்லாத இந்த படிப்புகள் பள்ளியில் இருந்தே எடுக்கப்பட்டு விட்டன.

இன்றைய தலைமுறைக்கு வீட்டில் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டிய தாத்தா, பாட்டிகளோ முதியோர் இல்லத்திலும் பரம்பரை வீட்டில் தனிமையிலும் இருக்கின்றனர். பகிர்ந்து கொள்ள சகோதரர்கள் கிடையாது. பிறகு சுயநலம் இல்லாமல் வேறென்ன இருக்கும்.

இன்று முரட்டுத்தனம் தான் ஹீரோவுக்கு உரிய இலக்கணமாக மாறி விட்டது. ஒரே அடியில் வீழ்த்துவதே ஹீரோயிசம் என்று குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டு விட்டது. நல்லவனாக மட்டுமே வாழக் கற்றுக் கொடுத்த காந்தியிசம் நகைப்புக்குரிய ஒன்றாகி விட்டது.

எம்ஜிஆரின் பாத்திரப்படைப்பு பெரும்பாலும் நல்லவர்களாகவே காட்டப்பட்டு வந்தன. சிறுவர்களும், வாலிபர்களும் அதைப் போன்று வளரவே பெற்றோர்களால் ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் இன்று மசாலா சினிமா என்ற பெயரில் முரட்டுத்தனம் சிறுவர்களின் மனதில் விதைக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.

வினோதினியின் மரணத்தினால் குற்றமிழைத்தவனின் மிருகத்தனம் வெளியில் வந்து விட்டது. ஆனால் இன்றைய தலைமுறையினர் அனைவரிடமும் எந்நேரமும் வெளியில் வரக்கூடிய மிருகம் தூங்கிக் கொண்டு இருக்கிறது. இளைஞர்களே நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment