Sunday, 2 August 2015

தொல்லைக்காட்சி - பழசு மார்ச் 2013

சென்னைக்கு மிக மிக அருகில்
வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிகழ்ச்சி தான். எவ்வளவு அருமையான நிகழ்ச்சி. சென்னைக்கு மிக மிக அருகில் மேல்மருவத்தூரில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் ஒரு மணிநேர பயணத்தில் ஆடு கிடைக்கு போட்ட இடத்திற்கு பின்னால் வருவது ஓம்சக்தி நகர்.


சென்னையில் வசிக்கும் நாம் அங்கு சென்று இடம் வாங்கினால் தான் மிகச்சில வருடங்களில் அதாவது குறைந்து 50 வருடத்திற்குள் சென்னையின் மாநகர எல்லைக்குள் ஓம்சக்தி நகர் வரும். இது நமக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு. 6000 ரூபாய் சம்பாதித்து போதாமல் சிரமப்படும் ஒருவன் இந்த ஏரியாவில் பிளாட் வாங்கினால் சீக்கிரமாகவே கோடீஸ்வன் ஆகி விடலாம்.

எனவே சென்னை வாழ் மக்களே அல்லது சென்னையில் குடியேற வேண்டும் நினைக்கும் மக்களே நீங்களும் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்த்து சென்னைக்கு மிக மிக அருகில் இடம் வாங்கி முன்னேறுங்கள்.

என்னைக் கவர்ந்த விளம்பரம்

முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா

ஜாக்கி ஷெராப் தோன்றும் இந்த விளம்பரத்தின் சிறப்பம்சமே இந்த மாத்திரை எதற்கு பயன்படும் என்று தெளிவாக விளக்காமல் குழப்பியடிப்பது தான். இந்த விளம்பரத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு குதிரை கிளர்ந்தெழும். ஆனால் முடிவில் பள்ளிக்கு செல்லும் மாணவி கூட கேட்டு வாங்கும் போது தான் மண்டை சொறியத் தொடங்கும்.

ஏண்டா ஒரு விளம்பரம் போடுறீங்க. அதனை கொஞ்சம் விளக்கமாக போட்டால் என்னைப் போன்ற தத்திகளுக்கு விளக்கமாக புரியுமல்லவா. சின்ன வயதில் நான் பார்த்த கோஹினூர் விளம்பரத்தில் ஏதுவென்றே குறிப்பிடாமல் இருப்பார்கள். அது புரியாமல் நான் புதிதாக கல்யாணமான என் மாமாவிடம் கேட்டு கும்மாங்குத்து வாங்கியதெல்லாம் பெரும்கதை.

உள்ளத்தை கொள்ளைக் கொண்டாய்

பாலிமர் டிவியில் வந்து கொண்டிருக்கும் ஒரு டப்பிங் நாடகம் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டாய். அவ்வப்போது சேனலை மாற்றிக் கொண்டு இருக்கும் போது இந்த நாடகம் வந்தால் அப்படியே நின்று விடுவேன். என்ன ஒரு நாடகம்.

கதாநாயகன் என்னைப் போல் ஒருவன். அவனும் என்னைப் போல் 100+ கிலோ இருப்பான். அதுவே நான் இந்த நாடகத்தில் ஒன்றிப் போக ஒரு காரணம். ஆனாலும் ஓரு வருத்தம் உண்டென்றால் அவன் சிகப்பு, நான் கருப்பு.

ஆனாலும் அந்த உடம்பை வைத்துக் கொண்டுள்ள ஹீரோவுக்கு லட்டு மாதிரி ஒரு ஆண்ட்டி ஹீரோயின். மச்சக்காரன்யா அவன். ரொமான்ஸ் என்ன, டூயட் என்ன. அவ்வப்போது நடக்கும் நாத்தனார் சண்டை தான் நாடகத்தின் ஹைலைட். இன்னும் எத்தனை நாடகங்களில் இவர் ஹீரோவாக நடித்தாலும் நான் பார்ப்பேன் என்பதை நான் ரசிக்கும் பதிவர் வாஞ்சூர் மேல் ஆணையிட்டு கூறுகிறேன்.

எனக்கு தெரிந்து தமிழகத்தில் இந்த நாடகத்தை பார்க்கும் 8 பேரில் நானும் ஒருவன் என்று நினைக்கும் போது புல்லரிக்கிறது.

சிட்டுக் குருவி லேகிய விளம்பரம்

கேப்டன் டிவியில் தினந்தோறும் நள்ளிரவு வரும் ஒரு விளம்பரத்தை நான் மிகவும் ரசித்துப் பார்க்கிறேன். என்ன ஒரு விளம்பரம் அது. ஐம்பது வயதை கடந்த ஒரு பெரிசு இரவு அசைக்கக்கூட முடியாமல் படுத்து கிடக்கிறார். அவரது அருகில் வந்து ஏக்கத்துடன் பார்க்கும் அவரின் இணை ஏக்கப் பெருமூச்சு விடுகிறது.

உடனே வானத்தில் இருந்து ஒரு ஒளி வந்து டெபிளின் மேல் விழுகிறது. ஓரு டப்பா கேப்சூல் அது. அதனை எடுத்து பெரிசு விழுங்கியதும் ஓரு குதிரை அவருக்குள் எழுகிறது. பயங்கரமாக அசைத்துப் பார்க்கிறார். இருவருக்கும் ஓருமணிநேரம் கிரவுண்ட்டை ஓடியது போல் வேர்த்து இருக்கிறது. பார்க்கவே புல்லரிக்கச் செய்யும் விளம்பரம். என்ன ஒன்று யாருக்கும் தெரியாமல் எல்லோரும் தூங்கிய பின்பு தான் பார்க்க முடிகிறது.

பார்த்த படம் - நாயகன்

நீங்கள் நினைப்பது போல் அந்த நாயகன் இல்லை. இது இந்த நாயகன். புரியவில்லை, நம்ம வீரத்தளபதி நிலா நிலா ஓடிவா என்று துள்ளிக் குதித்து ஓரு நடனம் ஆடியிருப்பாரே அந்த படம் தான்.


வீரத்தளபதிக்கு நிஜக்குரல் கொஞ்சம் தொங்கலாக இருக்கும் என்பதால் வீரமான ஒருவனை வைத்து குரல் கொடுக்க வைத்து கதாபாத்திரத்தை காப்பாற்றி இருக்கிறார்கள். படத்தின் பலம், பலவீனம், சூப்பர், டூப்பர் எல்லாமே வீரத்தளபதி தான்.

ஒரு முறை முயற்சித்து பார்ப்போம் என்று இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்து தலைதெறிக்க ஓடி வந்தவர்களுள் நானும் ஒருவன். ஆனால் இந்த படத்தை இன்று டிவியில் பார்க்கும் போது தான் ஒரு அமர காவியத்தை தவற விட்டது புரிந்தது.
--------------------------------------

போதும்னு நினைக்கிறேன், இதுக்கு மேல தொடர்ந்தால் மடிப்பாக்கம் பக்கத்திலிருந்து கல் வந்து விழ வாய்ப்பிருப்பதால் நான் கழண்டுக்கிறேன்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment