Sunday, 2 August 2015

பரதேசி - பழசு 2013

பாலா படங்களுக்கு என்று ஒரு பார்முலா இருக்கும். படத்தில் மிக முக்கியமான ஒருவர் இறந்து விடுவார். அதனால் கோவப்படும் மற்றொருவர் வில்லனை மிருகவதை சட்டத்தில் கைது செய்யலாம் என்று சொல்லும் அளவுக்கு அடித்து நொறுக்கி படத்தை முடித்து வைப்பார்.அவன் இவன் படம் பார்த்த போது பக் என்று இருந்தது, பாலா டொக்கு ஆயிட்ட மாதிரி இருந்தது.


ஆனால் என்னுடைய எல்லா நெகட்டிவ் எண்ணத்தையும் அடித்து நொறுக்கி மீண்டும் தான் ஒரு சிங்கம் என்பதை சந்தேகமில்லாமல் நிரூபித்து இருக்கிறார். மீண்டும் தைரியமாக சொல்வேன் நான் பாலாவின் ரசிகன் என்பதை.

பொதுவாக தமிழ்ப்படத்தின் இலக்கணம் என்ன? நல்லவனை கெட்டவன் கொடுமை செய்வான். கெட்டவனை வீழ்த்தி நல்லவன் நீதியை நிலைநாட்டுவான். பார்ப்பவனுக்கும் அப்பொழுது தான் ஒரு படம் பார்த்த திருப்தி இருக்கும். அந்த இலக்கணத்தை வீழ்த்தி இருக்கிறார் பாலா.

சந்தேகமில்லாமல் இது ஒரு ஆவணப்படம் தான். நூறு வருடங்களுக்கு முன்பு தமிழகம் குறிப்பாக தென் தமிழகம் எப்படி இருக்கும் என இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த குடிசையில் பனைஓலை வேய்ந்திருப்பதில் கூட நேர்த்தி இருக்கிறது. இந்த கோயில் திருமண சடங்குகள், சாப்பாட்டு பந்தி என எல்லாமே நம்மை சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்திற்கு அழைத்து செல்கிறது.

படத்தின் கதையை தைரியமாக வெளியில் சொல்லலாம், இது சஸ்பென்ஸ் படமல்ல, தமிழனின் ஆவணப்படம்.

சாலூர் என்ற கிராமத்தில் படம் துவங்குகிறது. ஒட்டுபொறுக்கி என்று ஊரார்களால் அழைக்கப்படும் அதர்வா வெள்ளந்தியான பையன். ஊரில் வருமானமில்லாமல் தண்டோரா அதற்கு கூலியான அரிசி பிச்சை எடுத்து அதில் தன் பாட்டியுடன் வாழ்பவன். அவனை விரட்டி விரட்டி காதலிக்கும் அங்கம்மாவாக வேதிகா. ஒரு தனிமையில் சலனப்பட்டு ஒன்று சேர்கிறார்கள்.

அந்த ஊர்ப்பக்கம் வந்த கங்காணி ஒருவன் சாலூர் மக்களை எஸ்டேட் கூலி வேலைக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து செல்கிறான்.வேதிகாவை திருமணம் செய்ய பணம் வேண்டி அதர்வாவும் பயணிக்கிறார். 48 நாட்களுக்கு மேல் நடந்தே எஸ்டேட்டை அடைகிறார்கள்.

அங்கு சென்ற பின்பு தான் அது கொத்தடிமை வேலை என்று தெரிகிறது. அங்கு கைக்குழந்தையுடன் இருக்கும் தன்ஷிகாவை சந்திக்கிறான். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் ஏதாவது காரணம் சொல்லி கூலியாட்களை வெளியில் அனுப்ப மறுக்கிறான் கங்காணி.

ஊரில் அங்கம்மா கர்ப்பமாக இருப்பதை கடிதம் மூலம் அறியும் அதர்வா அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கிறார். அவரைப்பிடிக்கும் கங்காணி அவரது பின்னங்கால் நரம்பை அறுத்து விடுகிறான்.

சில வருங்களுக்கு பிறகு அந்த பகுதியில் தொற்று வியாதி பரவி ஏராளமான மக்கள் இறக்கிறார். தன்ஷிகாவும் இறக்க அவரது மகளை தன்னுடன் வைத்துக் கொண்டு காப்பாற்றுகிறார்.

மேலும் பல வருடங்கள் கழிந்த பின்பு அதர்வாவைத் தேடி வேதிகாவும் கொத்தடிமையாக அந்த எஸ்டேட்டுக்கு வருகிறார். படம் முடிகிறது.

முதல் காட்சியில் வாயை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சற்று குழப்பத் தமிழில் நியாயமாரே என்று கத்தும் போது நான் பயந்தேன். படம் முழுக்கவே இப்படித்தான் வாயை வைத்துக் கொண்டு பேசுவாரோ என்று. ஆனால் அதன் பிறகு அடிப்பொளி ஆக்கியிருக்கிறார் அதர்வா.

அப்பாவியாக சாப்பாட்டு பந்தியில் தனக்கு மட்டும் சாப்பாடு வைக்காத போது மருகி அழும் போதும், திருமணம் செய்யக் கூடாது என நடக்கும் பஞ்சாயத்தில் வேதிகாவுடன் கண்களால் பேசிக் கொண்டே வெட்கப்படும் போதும், க்ளைமாக்ஸ் காட்சியில் குன்றின் உச்சியில் நின்று கதறும் போதும் நல்ல நடிகராக மிளிர்கிறார்.

வேதிகாவா இது முனி படத்தில் பார்த்த போது வசனம் கூட சரியாக ப்ராம்ட் செய்யத் தெரியாமல் இருந்தார். இந்த படத்தில் அசத்தியிருக்கிறார். முகபாவனைகள் எனக்கு பிடித்திருந்தது.

தன்ஷிகா கதாபாத்திரம் இடைவேளைக்கு பின்பு தான் வருகிறது. ஆனாலும் படத்தின் சிறந்த நடிப்பில் முதல் வரிசையில் வருகிறார். அவருக்கு இயல்பாகவே சற்று முரட்டு குதிரை தோற்றம். அதற்கேற்ற கதாபாத்திரம் அமைந்ததால் இயல்பாகவே நடித்திருக்கிறார்.

கங்காணியாக வரும் ஜெர்ரி வில்லன் பாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறார்.

கிறிஸ்துவ மதம் எப்படி அப்பாவி மக்களிடம் பரவியது என்பது தெரியும் போது நம் மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று எனக்குள் கோவம் பரவியது தான் அந்த காட்சிக்கான வெற்றி.

பாடல்கள் இதற்கு முன்பு கேட்டதேயில்லை, இப்போது படத்துடன் பார்க்கும் போது நன்றாக இருந்தது. கதையோட்டத்துடன் கூடிய மாண்டேஜ் பாடல்கள் கேட்க அருமையாக இருந்தது.

மக்களே தவற விடக்கூடாத படம் இது. தன் மீதான விமர்சனங்களையெல்லாம் உதறித் தள்ளி விட்டு தான் டொக்கு ஆகவில்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படங்களுக்காக வரிசையில் இந்த படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

இந்த படத்திற்கான வெற்றியே படம் முடிந்ததும் பார்வையாளர்களிடம் இருந்த மெளனம் தான். என்னால் இன்னும் சில நாட்களுக்கு படத்தை விட்டு வெளியில் வர முடியாது.

படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் தேநீர் அருந்தும் போது நம் முன்னோர்கள் இந்த தேயிலை தோட்டத்திற்காக சிந்திய ரத்தங்கள் நினைவுக்கு வரும்.

பாலா பாலா தான்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment