Friday, 7 August 2015

சண்டி வீரன் - சினிமா விமர்சனம்

இந்த படத்தின் படப்பிடிப்பு மன்னார்குடி அருகில் நிறைய கிராமங்களில் முக்கியமாக என் மச்சான் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருக்கும் மேலவாசல் கிராமத்தில் தான் நடந்தது. படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்தது கூட மன்னார்குடியில் உள்ள என் அத்தானின் லாட்ஜில் தான். அந்த சமயத்தில் இருந்தே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது.


வழக்கமாக சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று ஓவர் ஸ்டேயில் தங்கியிருந்து மாட்டும் வரை சம்பாதித்து பிரம்படி வாங்கி ஊருக்கு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர் மன்னார்குடி நகரை சுற்றியிருக்கும் கிராமங்களை சேர்ந்தோர். அதை அப்படியே அச்சு அசலாக நாயகனுக்கு பொருத்தியிருக்கிறார் இயக்குனர்.

ரெண்டு கிராமங்களுக்கு இடையே நீராதாரம் சம்பந்தமாக பல காலமாக பகை இருந்து வருகிறது. சொந்த ஊர்காரர்கள் உப்புத் தண்ணியை நிலத்தடி நீராக கொண்டிருக்கும் பக்கத்து ஊர்க்கார்களுக்கு நல்ல தண்ணியை தர மறுப்பதால் தட்டி கேட்கும் அதர்வாவின் அப்பா போஸ் வெங்கட் இறந்து போகிறார்.


வளர்ந்து ஆளான அதர்வா சிங்கப்பூர் சென்று ஓவர் ஸ்டேயில் மாட்டி ஊர் திரும்புகிறார். அந்த ஊர் மில்லுகாரர் லாலின் மகளான ஆனந்தியை லவ்வுகிறார். அதர்வா ஊர்க்காரர்கள் நீர் தர மறுப்பதால் உப்புத் தண்ணியையே குடித்து வரும் பக்கத்து ஊர்க்கார்கள் கிட்னி கல் வந்து நோய் முற்றி இறக்கிறார்கள். அதர்வா எப்படியும் தண்ணீரை பக்கத்து ஊருக்கு பெற்றுத் தர நினைக்கிறார்.

லால் மக்களிடையே வெறுப்புணர்வை வளர்த்து அதன் மூலம் அரசியல் செய்து பிழைத்து வருகிறார். உள்ளூர் மக்கள் அதனாலேயே தண்ணீர் தர மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 


அதர்வா ஆனந்தி காதல் லாலுக்கு தெரிய வர அதர்வாவை கொல்ல நினைக்கிறார். அதர்வா லாலை சமாளித்து ஆனந்தியை கைப்பிடித்தாரா, தண்ணீரை பக்கத்து ஊருக்கு  கொடுத்து உதவினாரா என்பதே சண்டி வீரன் படத்தின் கதை. 

அதர்வா துவக்க காட்சிகளில் நடிப்பிலும் எக்ஸ்பிரசனிலும் அன்னியப்பட்டு தெரிந்தாலும் நேரமாக நேரமாக கேரக்டருடன் அச்சு அசலாக பொருந்தி போகிறார். சண்டை காட்சிகளில் ஓவர் பில்ட் அப்பை காட்டாமல் இயல்பாக சண்டை போட்டிருப்பதால் இயல்பான நாயகனாகவே தெரிகிறார். 

ஆனந்தி இது சுமாரான அழகா, இல்லை அட்டு பீசா என்பது விளங்கவே இல்லை. ஒரு ஆங்கிளில் நல்ல லைட்டிங்கில் நன்றாக இருக்கிறார். அதே வேறொரு நேரம் ரொம்பக் கன்றாவியாக தெரிகிறார். 


படத்தில் சொல்லிக் கொள்ளும்படியான நகைச்சுவை நடிகர்கள் யாருமே இல்லை. நாயகன் நாயகி காதலே காமெடியாக சொல்லப்பட்டு இருக்கிறது. 

இது கிட்டத்தட்ட கம்பி மேல் நடக்கும் வில்லங்கமான கதை தான். இரு கிராமங்களுக்கு இடையே நடப்பது சாதி சண்டையாக தான் தெரிகிறது. ஆதிக்க சாதிக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் நடப்பது போல் தான் திரைக்கதையமைத்து இருக்கிறார்கள். 

சில இடங்களில் வசனங்களில் அடிகோடிட்டு காட்டவும் செய்கிறார்கள். நான் அந்த ஊர்க்காரன் என்பதால் தெளிவாக தெரிகிறது. பின்னர் எதிர்ப்பு வந்தால் என்ன செய்வது என்ற பயத்தில் டப்பிங்கில் வசனத்தை மாற்றியிருப்பதும் புரிகிறது. 

படத்தின் சாராம்சமான நீர் பங்கீடு நல்ல மேட்டர் தான் ஆனால் கதையில் சொருகப்பட்டு இருப்பது துருத்திக் கொண்டே இருக்கிறது. படத்தின் மெயின் கதையான அதர்வா ஆனந்தி காதல், அதற்கான எதிர்ப்பு என ஒரு லைனர் மட்டும் இருந்தால் களவாணி போல் படு இயல்பான மெல்லிய காமெடி போர்த்திய படமாக பெரிதாக எடுபட்டு இருக்கும். 

அதே போல் படு பயங்கரமான வில்லனாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் லால். க்ளைமாக்ஸில் தண்ணியடித்து விட்டு அழுது புலம்பி திருந்து கல்யாணம் செய்து வைப்பது அந்த வில்லனின் பில்ட்அப்பையே தவிடுபொடியாக்கி இருக்கிறது. இந்த மாதிரி க்ளைமாக்ஸ் வைப்பது என்று முடிவெடுத்தால் லால் கேரக்டரை துவக்கம் முதலே காமெடி கலந்து அமைத்திருக்கலாம்.

படம் பெரிதாக ஈர்க்கவில்லை, அதே போல் போரடிக்கவும் இல்லை. நேரம் கிடைத்தால் பாருங்கள்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment