Thursday, 24 September 2015

லைப் ஆப் ஜோசுட்டி - ஜீது ஜோசப் - சினிமா விமர்சனம்

ஒரு இயக்குனரின் படம் ஹிட் ஆனால் அடுத்த படத்திற்கு என ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே, அது தான் அடுத்த படத்தின் வசூலுக்கு முதலீடு. அதுவே இந்தியாவில் உள்ள 5 மொழிகளில் அதிரிபுதிரி ஹிட் அடித்திருந்தால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கும் அல்லவா. அந்த எதிர்பார்ப்போடு தான் அரங்கிற்கு போனேன். 


த்ரிஷ்யம் படத்தின் மூலம் அகில இந்தியாவிலும் பிரபலமான ஜீது ஜோசப்பின் அடுத்த படம் தான் லைப் ஆப் ஜோசுட்டி. ஒரு மனிதனின் 8 வயதில் இருந்து 38 வயது வரை நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் படம்.

படத்தின் மிகப்பெரும் குறை மெதுவாக நகரும் திரைக்கதை. த்ரிஷ்யம் மாதிரி பரபரப்பான படத்தை தந்தவரிடம் இருந்து இப்படிப்பட்ட படமா என்று யோசிக்க வைக்கிறது.  ஆனால் படம் மோசமெல்லாம் கிடையாது. ரசிக்கும் படி தான் இருக்கிறது. 

கேரளாவில் உள்ள கட்டப்பனை என்ற மலைகிராமத்தில் இரண்டு வீடுகள் மட்டும் அடுத்தடுத்து இருக்கிறது. ஒரு வீட்டில் திலீப், அடுத்த வீட்டில் ரச்சனா. சிறுவயதில் இருந்தே இருவரும் ஒன்றாக வளருகின்றனர். பருவ வயதில் காதல் கொள்கின்றனர். திலீப் நாலாவது வரை மட்டுமே படித்தவர் என்பதாலும், ரச்சனா வீடு வசதியானது என்பதாலும் காதலுக்கு எதிர்ப்பு வருகிறது. 


ரச்சனாவின் அப்பா வேறொருவருக்கு ரச்சனாவை மணமுடிக்க நினைக்கிறார். பொண்ணு பார்க்க வருபவர்களையெல்லாம் தன் நண்பர்கள் உதவியுடன் எதாவது பொய் சொல்லி திருமணத்தை நிறுத்திக் கொண்டே வருகிறார் திலீப். ஒரு நாள் உண்மை தெரிந்து ரச்சனாவின் அப்பா திருமணத்தை நடத்தி விடுகிறார்.

திருமணமாகிப் போன ரச்சனா திலீப்பின் மேலுள்ள கோவத்தால் அவரை வெறுப்பேத்த வருடத்திற்கு ஒரு பிள்ளையாக பெற்றுப் போடுகிறார். 

திலீப்புக்கு இரண்டு தங்கச்சிகள், ஒருத்தரை  சூரஜ்க்கு திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார்கள். வரதட்சணை பாக்கியிருப்பதால் அதுவும் பிரச்சனையில் இருக்கிறது. இரண்டாவது தங்கச்சிக்கு திருமணம் செய்ய பணம் தேவைப் படுகிறது. வீடு கடனில் இருந்து ஜப்தியாகும் நிலை. எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க டைவர்ஸியான ஜோதியை திருமணம் செய்து குடும்பத்தின் பிரச்சனைகளை தீர்த்து ஜோதியுடன் நியுசிலாந்துக்கு குடும்பம் நடத்த செல்கிறார் திலீப். 

அங்கு போனதும் தான் தெரிகிறது. ஜோதிக்கு ஒரு தோல்வியடைந்த காதல் இருக்கிறது என்று. அதனால் திலீப்புடன் சேர்ந்து வாழ அவகாசம் கேட்கிறார் ஜோதி. 

ஒரு நாள் அந்த பழைய காதலனுடன் ஜோதியை படுக்கையில் பார்க்கும் திலீப் ஜோதியை பிரிகிறார். அதுவரை சம்பாதிக்கனும் என்ற எண்ணமே இல்லாத திலீப் அதன் பிறகு ஒரு தொழில் ஆரம்பிக்க முயற்சிக்கிறார்.

நாலாவது மட்டுமே படித்த திலீப் நியுசிலாந்தில் முன்னேறினாரா, இந்தியா திரும்பினாரா, இந்தியாவில் உள்ள அவரது குடும்பம் என்னவானது என்பது தான் படத்தின் கதை.


எனக்கு இந்த படத்தின் மீது ஆர்வம் ஏற்படவும், இந்த படம் பிடிக்கவும் ஒரு காரணம் இருக்கிறது. அது என் கொள்கை ரீதியுடன் சம்பந்தப்பட்டது. எந்த ஒரு பிரச்சனையிலும் தன் நிலையில் இருந்து பார்க்காமல் எதிரியின் பாயிண்ட் ஆப் வியுவில் இருந்து பார்த்தால் சச்சரவும், சண்டையும் வராது என்று சொல்லியே திலீப்பை வளர்க்கிறார் அவரது அப்பா. இது தான் என்று தெரியாமல் நான் அப்படியே இருந்து இருக்கிறேன். அது தான் என்னை படத்தினுள் இழுத்தது.

படம் துவங்கியதிலிருந்து திலீப்பின் பின்னால் இரண்டு தேவதைகள் வருகிறார்கள். ஒருவர் நல்ல தேவதை, மற்றவர் துர்தேவதை. நல்லவனான திலீப் கெட்டவனாக மாற சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் துர்தேவதை சந்தோஷிக்க அதனை தவிர்த்து நல்லவனாகவே இருக்கும் திலீப்பை ஆசீர்வதித்தே வருகிறார் நல்ல தேவதை. வித்தியாசமான சிந்தனை.

முதல் பாதி மிகுந்த ரகளையாக இருக்கிறது. நண்பர்களுடன் அடிக்கும் கும்மாளமும் ரச்சனாவுடனான காதலும், ரச்சனாவே பெட்டியுடன் வந்து வா வீட்டை விட்டு ஓடிப் போகலாம் என்று கூப்பிடும் போது கூட உன் அப்பாவின் இடத்தில் இருந்து சிந்தித்துப் பார் என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பிகிறார் திலீப். 

அதனால் திலீப் மீது வெறுப்படையும் ரச்சனா அவரை பழி தீர்ப்பதற்காகவே வருடாவருடம் பிரவிப்பதற்காக தாய் வீட்டுக்கு வருவதும், க்ளைமாக்ஸில் பத்து வருடம் கழித்து திலீப் வீடு திரும்பிய அன்றும் கூட பிரசவத்துக்காக ரச்சனா வருவதும் அடிப்பொளி காமெடி.

கொஞ்ச நேரமே வரும் சூரஜ் வெஞ்சாரமூடு கிடைத்த வாய்ப்பில் சிக்சர் அடிக்கிறார். திலீப்பின் பால்ய வயது நண்பராக வருபவர் செம பெர்பார்மன்ஸ், பின்னி எடுக்கிறார். ரச்சனாவின் கல்யாணத்தன்னைக்கு ரச்சனா கல்யாணத்திற்கு சம்மதம் என சர்ச்சில் சொல்வதை கேட்டு ஒடும் திலீப் தற்கொலை தான் செய்து கொள்ளப் போகிறாரோ என்று அவருடன் பயந்து ஓடும் காட்சியில் தியேட்டர் வெடிச் சிரிப்பு சிரிக்கிறது.

இரண்டாம் பாதி தான் சற்று சவசவவென்று நகர்கிறது. இன்னும் சொல்லப் போனால் நகரவே மாட்டேன் என்கிறது. கல்யாணம் செய்த ஜோதி ஏமாற்றி விட திடீரென அமையும் அக்ஷா பட்டுடனான காதல் சுவாரஸ்யம் தான்.

ஆனால் நாலாங்கிளாஸ் படித்த திலீப், நியூசிலாந்தில் உணவகம் ஆரம்பிப்பதும் அதை நியூசிலாந்திலேயே சிறந்த உணவகமாக மாற்றுவது எல்லாம் சினிமாவில் மட்டும் முடிந்த ஒன்று.

எனக்கு என் அப்பாவுக்குமான கெமிஸ்ட்ரி எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது என்னை திட்டாவிட்டால் அவருக்கு உறக்கம் வராது. அதே போல் ஒரு முறையாவது அவரிடம் திட்டு வாங்கி விட வேண்டும் என்பது என் கோட்டா. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது புரியாது. இன்று கூட கோவம் வந்தால் என்னை அடிக்க வருவார். நாம இருப்பதோ எருமை மாட்டிற்கு நிகராக, எங்கப்பா அதையெல்லாம் யோசிக்காமல் கையை ஓங்குவார். ஆனாலும் நான் கம்முன்னு இருப்பேன்.

அதே போல் ஒரு கெமிஸ்ட்ரி திலீப்புக்கும் அவரது தந்தைக்கும் ஒடுகிறது. பார்க்கும் போதே அவ்வளவு நெகிழ்வாக இருக்கிறது. திருமணம் முடிந்து குடும்பம், ஊர், நட்புகள் எல்லாவற்றையும் பிரிந்து நியூசிலாந்து போகும் திலீப்பிடம் அவரது அப்பா செயற்கையாக சிரித்து பேசும் காட்சியில் என்னையறியாமல் கண்ணீர் வழிந்தது. 

க்ளைமாக்ஸில் தனியாக அமர்ந்து இருக்கும் திலீப்பிடம் டீமேக்கர் விற்க வந்து இல்லாள் ஆகும் கௌரவத் தோற்றத்தில் வந்து போகிறார் நயன்தாரா.

வேறு வேலையே இல்லையென்றால், நிதானமாக ஒரு படத்தை பார்க்க தயார் என்றால் மட்டும் அரங்கம் பக்கம் செல்லுங்கள். இல்லையென்றால் இன்னும் நான்கு மாதத்தில் சூர்யா டிவியில் பார்த்துக் கொள்ளலாம்.

ஆரூர் மூனா

Thursday, 17 September 2015

மாயா - சினிமா விமர்சனம்

இன்னைக்கு எந்த படம் போவது என்ற குழப்பத்திலேயே இருந்தேன். முன்னர் முடிவு பண்ணி வச்சிருந்தது ரஜினி முருகனுக்கு தான். ஆனால் படம் கடைசி நிமிடத்தில் வாபசானதால் த்ரிஷா இல்லைனா நயன்தாரா தான் சாய்ஸாக இருந்தது இல்லைனா 49ஓ. ஆனால் மாயா ஆப்சன்லயே இல்லை. ஆனால் பாருங்கள். பார்க்க நேர்ந்தது மாயா தான். 


ஏன் மாயா சாய்ஸில் வைக்கவில்லை என ரொம்பவே வருத்தப்படுகிறேன். செம படம். மெரட்டு மெரட்டுன்னு மெரட்டி விட்டார்கள். 

படம் நான் லீனியரில் சொல்லப்படுகிறது. நயன்தாரா கணவனை விட்டு பிரிந்து கைக்குழந்தையுடன் சிரமப்பட்டு சினிமாவில் நடிகையாக முயற்சிக்கிறார். மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறார். 

பெருமாள் ஒரு திகில் படத்தை இயக்கி விட்டு அதனை விற்க முடியாமல் ஒரு பரிசுப் போட்டியை வைக்கிறார். அந்த படத்தை தனியாக யாராவது பார்த்து விட்டால் அவர்களுக்கு ரூ 5 லட்சம் பரிசு என. 


பத்திரிக்கை அலுவலகத்தில் ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கிறார் ஆரி. மாயா என்னும் பேய் பற்றிய விவரங்கள் ஒரு பத்திரிக்கையாளர் மூலம் தெரிய வருகிறது. அந்த ஊரின் புறநகரில் உள்ள மாயவனம் என்ற காட்டில் 24 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்து போன மாயா என்னும் மனநோயாளி இருப்பதும் அந்த மாயா புதைக்கப்பட்ட இடத்தில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் புதைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது. 

அந்த காட்டிற்கு சென்ற ஆரியின் நண்பன் மறுநாள் இரவு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். 


பணக்கஷ்டத்தின் காரணமாக அந்த பேய்ப்படத்தை தனியாக பார்க்க வருகிறார் நயன்தாரா. நயன்தாராவுக்கு முன் அந்த படத்தை பார்க்க வந்த ஒரு வினியோகஸ்தர் அரங்கிலேயே பேயினால் கொல்லப்படுகிறார். 

நயன்தாராவுக்கு என்ன ஆனது. ஆரிக்கும் நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு. அந்த வைர மோதிரம் என்ன ஆனது. பேய்க்கும் நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு இன்னும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறது மாயா திரைப்படம்.

திகில் படம்னா கொடூர மேக்கப் போட்டு ரத்தம் ஒழுக மிரட்டுவது, நாலு பேரை ரண கொடூரமாக கொல்வது என்றெல்லாம் இல்லாமல் இருட்டை வைத்தே மிரட்டி இருக்கிறார்கள். 

இது பேய்ப்படம் இல்லை, அம்மா சென்ட்டிமெண்ட் படம். பேய் வெர்ஷன். 

ஆரிக்கு அடுத்த வெற்றிப் படம். இயல்பாக நடித்துள்ளார். மாடியில் இருந்து ஒரு மனநோயாளி குதிக்க இருக்கும் சமயம் பதைபதைத்து மாடியில் ஏறி ஒரு நிமிடம் தான் தடுமாறி மாடியி விழ இருக்கும் சமயம் தேர்ந்த நடிகன் என்பதை நிரூபித்து இருக்கிறார். 

படத்தின் முதல் பாதியில் குறைந்த காட்சியில் நயன்தாரா வருவதால் இவருக்கான ஸ்கோப் குறைவோ என்று நினைத்தேன். இரண்டாம் பாதியில் நடிப்பில் பின்னி இருக்கிறார் நடிப்பு ராட்சசி. அந்த குழந்தையுடன் கலங்கி படுக்கையில் இருக்கும் போது நம்மையும் கலங்க வைக்கிறார். 

ஆரியுடன் என்ன உறவு என தெரிய வரும் போது அட போட வைக்கிறார். 

ரோபோ சங்கருக்கு ஒரு சின்ன கதாபாத்திரம், திடீரென நயன்தாராவை சுட்டு விட்டு தப்பியோடும் போது ஸ்ட்ரெக்சரில் உள்ள பாடியை சுட்டு விட்டு துணியை விலக்கி பார்த்து அது தன் உருவம் தான் என தெரிந்ததும் அதிர்ந்து போகும் போது கைதட்டலை பெறுகிறார். 

கண்டிப்பாக ஒளிப்பதிவு கூடுதல் கவனத்தை பெறுகிறது. நயன்தாராவுக்கு ஒரு டோன், ஆரி வரும் காட்சிகளுக்கு ஒரு டோன் கொடுத்து இரண்டையும் மேட்ச் பண்ணும் போது பலே சொல்ல வைக்கிறார். 

க்ளைமாக்ஸில் நயன்தாரா ஒரு சக்கர நாற்காலியில் திரும்பி அமர்ந்திருக்கும் போது ஷுட்டிங் நடக்கும். பின்னால் இருந்து கேமரா ஜும் ஆகி வந்து கடைசியாக நிற்கும் உதவி இயக்குனரின் தோளில் ஒரு கை விழும், திரும்பிப் பார்த்தால் அது நயன்தாரா. அந்த நிமிடம்  எனக்குள் பயஉணர்ச்சி பீறிட்டு கிளம்பி தலையில் ஜிவ் என சுரந்தது. 

அது தான் இந்த படத்தின் வெற்றி. சொல்வதற்கும் பகிர்ந்து கொள்ளவும் நிறையவே இருக்கிறது. ஆனால் ஓப்பனாக சொல்லி விட்டால் அது பார்க்கும் போது படத்தின்  சுவாரஸ்யத்தை குறைக்கும். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். கண்டிப்பாக அரங்கில் போய் படத்தை பார்த்து பயந்து வாருங்கள்.

இந்த ஆண்டின் இன்னுமொரு சிறந்த பேய்ப்படம். பார்த்து பயப்படுங்கள். 

ஆரூர் மூனா

Friday, 11 September 2015

யட்சன் - சினிமா விமர்சனம்

இந்த கதை தொடராக ஆனந்தவிகடனில் வந்த போதே என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. அதை படமாக பார்க்க நேரும் போது இன்னும் மோசமானது தான் காலத்தின் கட்டாயம். இந்த படத்தை பார்ப்பதற்கு எப்படி எனக்கு தைரியம் வந்தது என்பதே பெரிய ஆச்சரியம் தான்.


எல்லா சிறந்த இயக்குனர்களுக்கும் அவுட் டேட் அல்லது எக்ஸ்பைரி டேட் என்று ஒன்று வரும். ஆளானப்பட்ட பாரதிராஜா, பாக்யராஜ் கூட இரு தசம வருடங்களுக்கு முன்பு காலாவதியானார்கள். இது அடுத்த ஜெனரேசனுக்கான நேரம். அது விஷ்ணுவர்த்தனுக்கும் நிகழத் தொடங்கியிருக்கிறது. 

அவர் தன்னைப் புதுப்பிக்காவிட்டால் சிரமம் தான். க்ளைமாக்ஸ் சண்டையும் அதில் திருப்பமாக போலீசோ அல்லது ஹீரோவின் ஆட்களோ என்ட்ரி கொடுப்பது எல்லாம் 90களிலேயே வழக்கொழிந்து போய் விட்டது, இன்னும் அதை வைத்து எடுத்துக் கொண்டிருந்தால் வேறு என்ன தான் சொல்வது.

தூத்துக்குடியில் ஒரு கொலையை செய்து விட்டு சென்னைக்கு வருகிறார் ஆர்யா. இங்கு ஒரு கொலை செய்யும் பிளான் அவருக்கு வழங்கப்படுகிறது. அதே போல் சினிமாவில் நாயகனாகும் ஆசையில் சென்னைக்கு வருகிறார் கிருஷ்ணா. 


நாயகனாக அவதாரம் எடுக்கும் நாள் அன்று நடந்த அதிரிபுதிரி திருப்பத்தின் காரணமாக ஆர்யா நாயகனாக கிருஷ்ணா கொலைகாரன் பட்டம் சுமக்கிறார். இறுதியில் என்ன நிகழ்கிறது என்பதே யட்சன் படத்தின் கதை.

படத்தின் நாயகர்களில் ஒருவராக ஆர்யா. அசால்ட்டாக நடிப்பது ஓகே. ஆனால் அளவுக்கு அதிகமாக அசால்ட்டாக இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது. இதைத்தான் நாங்க அறிந்தும் அறியாமலும் படத்திலேயே பாத்துட்டோமே இன்னுமா அப்படியே இருக்கிறது போங்க பாஸ். 

இன்னொரு நாயகன் கிருஷ்ணா. நடிக்கிறது எல்லாம் இருக்கட்டும் பாஸ். நீங்க எப்பதான் ஆடியன்ஸுக்கு புரியிற மாதிரி பேசப் போறீங்க. டயலாக் டெலிவரி சுத்த மோசம். மூக்கால பேசுற மாதிரி இருக்கு. அவர் பேசும் பாதி வசனங்கள் புரியவேயில்லை. உங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் சிரமம் தான்.


படத்தின் முக்கிய நாயகியாக தீபா சன்னிதி. படத்தின் கதையே இவரைச் சுற்றி தான் நிகழ்கிறது. ஒரளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். எனக்குள் ஒருவன் படம் நான் பார்க்கவில்லை. அதனால் என்னைப் பொறுத்த வரைக்கும் அவரது முதல் படம் இது தான். 

பத்திரிக்கைகளில் எல்லாம் ஆகா ஓகோ என்று புகழ்ந்ததால் சிறப்பான அழகி என்றே நினைத்தேன். ஆனால் ம். . . ஒன்னும் சொல்றதுக்கில்லை. அவரது மூக்கு அவசரத்துல செஞ்ச பிள்ளையார் சிலைக்கு வைச்ச மாதிரி இருக்கு.

சுவாதி இன்னொரு நாயகி. நக்கலும் துணிச்சலுமாக ரகளை செய்யும் போதெல்லாம் ரசிக்க வைக்கிறார். அழகம் பெருமாளிடம் கிருஷ்ணாவுக்காக மல்லுகட்டும் இடத்திலும் தம்பிராமையாவின் அடியாளை அடித்து கத்தியை புடுங்கும் போதும் செம கலாட்டா தான்.


இன்னும் படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, பைவ் ஸ்டார் கிருஷ்ணா என நிறைய பேர் காமெடிக்கு என்று இருக்கிறார்கள். அதற்கேற்றாற் போல் நிறைய இடங்களில் நகைச்சுவை வைத்து இருக்கிறார்கள். ஆனால் கொடுமை பாருங்கள் நாம் சில இடங்களில் மட்டும் தான் சிரிக்கிறோம்.

படத்தின் ஆகச்சிறந்த தலையாய குறை படம் ஒரு க்ரிஸ்பி இல்லாமல் அலைபாய்வது தான். ஆர்யா கதை, உடனே கிருஷ்ணா கதை என்று அல்லாடுவதால் நம்மால் படத்தினுள் கவனம் செலுத்த முடியவில்லை. 

எப்படா இன்டர்வெல் வரும் என்று கடிகாரத்தை பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இன்டர்வெல்லுக்கு அப்புறம் எதுனா சிறப்பா இருக்குமோ என்று பார்த்தால், அப்புறம் தான் தெரிகிறது. முதல்பாதி தான் கொஞ்சமாவது பார்க்கிற மாதிரி இருக்கு. ரெண்டாவது பாதி அய்யய்யோ யம்மா, அந்தக் கொடுமையை என் வாயால எப்படி நான் சொல்வேன். 

ஏன் அய்யா, இன்னும் சவசவன்னு பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். தமிழ் சினிமா கதையை விசுவலா சொல்ல ஆரம்பித்து வசனங்களை குறைக்க ஆரம்பித்து பல வருடமாச்சி. ஆனாலும் உங்கள மாதிரி சிலபேர் தான் இன்னும் விடாம பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். ஏன் டயலாக் ரைட்டருக்கு ஏதும் பேமண்ட் பிரச்சனையா.

பாடல்கள் ஒன்னும் பெரிதாக எடுபடவில்லை. பட்டியல் படத்துல நம்ம காட்டுல அப்படின்னு ஒரு பாட்டு வருமே அதே ஸ்டைல்ல, அதே கலர் டோன்ல ஒரு பாட்டு படமாக்கியிருக்காங்க. ஆனா கேக்க தான் முடியலை. அதுக்கு நாங்க அந்த பாட்டையே இன்னொருக்கா பாத்து ரசிச்சிருக்கலாம். பத்மப்பிரியாவை அந்த பாட்டுல உரிச்சி, ரசிச்சி யப்பா. . . சாரி சாரி இது யட்சன் படத்து விமர்சனம்ல. அதைப் பற்றி பிறகு பேசுவோம்.

அஜித்தை பார்க்கனும்னா நாங்க அவர் நடிச்ச படத்தையே பாத்துக்குறோம். எதுக்கு அய்யா அளவுக்கு அதிகமான அஜித் புராணம். அஜித்தின் அடுத்த படத்துக்கு சான்ஸ் வேணும்னா நேரடியா கேட்டு வாங்கிக்கலாம்ல. எதுக்கு காசு கொடுத்து பாக்க வர்றவன இம்ச பண்ணிக்கிட்டு.

காமெடி நிறைய இடங்களில் எடுபடவேயில்லை. வாய் விட்டு சிரிக்கிற மாதிரி ஒரு காமெடி கூட இல்லை. சில இடங்களில் புன்முறுவல் மட்டும் தான் பூக்க வைக்கிறார். அதுவும் ஆர்ஜே பாலாஜியின் மொக்கை கவுண்ட்டருக்கு மட்டும் தான் அது நிகழ்கிறது.

படத்தில் நாயகிக்கு அடுத்தவனுக்கு என்ன நிகழப் போகிறது என்று ஆரூடம் சொல்கிறார். அது தான் அவருக்கு பிரச்சனையாகி இந்த படத்தின் மையக்கருவாக இருக்கிறது. அது போல் நான் ஆரூடம் சொல்கிறேன். இந்த படம் ஞாயிறைத் தாண்டாது. அதன் பிறகும் தியேட்டரில் ஓடுவது தியேட்டர்காரன் செய்த புண்ணியம். மற்ற சுமாரான படங்களுக்காகவாவது அடுத்த வெள்ளிக்கிழமை வரை வாய்ப்பு இருக்கும். இந்த படத்துக்கு அதுவும் கிடையாது. ஏன்னா வியாழக் கிழமையே படங்கள் வெளியாகின்றன.

ஆரூர் மூனா

Friday, 4 September 2015

தேவை இடஒதுக்கீடு பற்றிய புரிதல்

இந்த கட்டுரைக்கு நல்ல துவக்கம், சுவாரஸ்ய முடிவு, உவமை போன்றவை இருக்காது. மனதில் தோன்றியதை ராவாக எழுதியிருக்கிறேன்.

நம் நண்பர்களில் சிலருக்கு ஏன் பலருக்கும் கூட இடஒதுக்கீடு சம்பந்தமாக புரிதல் இல்லாமல் இருக்கிறது. தனக்கு சீட் கிடைக்கவில்லை என்பதற்காகவே இந்த பிரச்சனையில் சமூகம் சார்ந்து சிந்திக்காமல் தன்னை சார்ந்தே சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.


நிறைய பேருக்கு இடஓதுக்கீடு சம்பந்தமாக நிறைய வருத்தங்கள் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிக இட ஓதுக்கீடு கிடைக்கிறது. குறைந்த மதிப்பெண்கள் எடுத்த தாழ்த்தப்பட்டவர்கள் நமக்கு கிடைக்க வேண்டிய இடத்தை பிடித்துக் கொள்கிறார்கள் என்ற ஆதங்கம் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர்சாதி பிரிவினரிடம் இருக்கிறது.

இந்த பிரச்சனையை அப்படி பார்க்க கூடாது. மனிதன் என்பவனை பிராணிக்கு சமமாக மதித்த அதற்கும் கீழாக நடத்திய மற்றவர்களிடம் இருந்து அந்த தாழ்த்தப்பட்டவர்கள் விடுபட்டு மற்றவர்களுக்கு சமமாக வளர்ந்து வரும் நேரம் இது. வளர்ச்சியடைந்த நிலையை எட்டியவர்கள் வெகு சொற்ப சதவீதத்தினரே.

நீங்கள், உங்களுடன் படித்த சக நண்பர்கள், உங்கள் வீட்டுக்கு வரும் போது அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் வெளியில் நின்று பேசியாக வேண்டும். உங்கள் வீட்டுக்கு உள்ளே வரமுடியாது என்ற நிலை இப்பவும் தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கிறது. இந்த நிலை மாற அவர்கள் வேலை வாய்ப்பிலும் வசதியிலும் மாற வேண்டும். அதற்கு இந்த இட ஓதுக்கீடு அவசியமாகிறது.

நீங்கள் விரும்பிய படிப்பை படிக்க முடியாவிட்டால் அதற்கு காரணம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு தான் என்று எண்ணாதீர்கள். உங்களுக்கென்று ஒரு மதிப்பெண் வரம்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை எட்டாததால் தான் உங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

எனக்கு தெரிந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஐடிஐ படித்து விட்டு சுமாரான வேலையில் இருந்தார். அந்த சமயம் அவர்கள் குடும்பம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சாட்டியக்குடி என்ற கிராமத்தில் இருந்தது. மற்ற சாதிக்காரர்கள் வீட்டுக்கு உள்ளே அவர்கள் போக முடியாது. சில சமயம் மற்றவர்கள் வீட்டில் இரவு போய் மிச்சமிருக்கும் சாப்பாட்டை வாங்கியும் சாப்பிட வேண்டியிருக்கும்.

20 வருடங்களுக்கு முன்பு அந்த ஐடிஐ பிட்டர் படித்த பையனுக்கு தாழ்த்தப்பட்ட கோட்டாவில் அரசு வேலை கிடைத்தது. திருவாரூருக்கு குடியேறினார்கள். இப்போ அவர்கள் குடும்பம் மேம்பட்ட நிலைமையை அடைந்து விட்டது.

திருவாரூரில் இரண்டு வீடு வைத்து இருக்கிறார். கார் வாங்கி விட்டார்.  இப்போ அவர் போஸ்டிங் எக்சிகியூட்டிவ் என்ஜினியர். அவரது மகன் பிஈ சென்னையில் படிக்கிறான்.

அதை விட முக்கியமாக திருவாரூரில் அவரது ஏரியாவை சுற்றியிருக்கும் மக்கள் அவரது சாதி பாராமல், வேலையை மட்டுமே மதிப்பீடாக வைத்து விசேசங்களுக்கு கூப்பிடுகிறார்கள். மற்றவர்கள் வீட்டுக்குள் எந்த தயக்கமும் இன்றி நுழைய முடிகிறது.

ஒரு நாள் அவர் என்னுடன் சென்னையில் சரக்கடித்த போது சிறுவயதில் எப்படியெல்லாம் மற்றவர்களால் அவமானத்துள்ளாக்கப் பட்டார் என்று கூறிய போது சமூகத்தின் கேவலத்தை கண்டு அதிர்ந்தே போனேன்.

இந்த நிலை மாற காரணம், இட ஒதுக்கீடு. இந்த மாற்றம் இத்தனை நாட்களாக வெகு சொற்ப அளவிலேயே நடந்துள்ளது. இன்னும் நடக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அது வரை அவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட்டே தீர வேண்டும்.

அவர்களை உங்களுடன் ஒப்பிடாதீர்கள். உங்களது ஏழ்மையை விட அவர்களது தீண்டாமை கொடுமையானது. கேவலமானது. உங்கள் ஏழ்மையை நீங்கள் சிறிது உழைத்தால் விரட்டி அடித்து விடலாம். ஆனால் அவர்கள் தீண்டாமையை அது போல் சாதாரணமாக செய்து விட முடியாது.

தாழ்த்தப்பட்ட ஒருத்தர் அந்த இடஓதுக்கீட்டை பயன்படுத்தி முன்னேறி விட்டார் என்றால் அவர் அதற்கடுத்த தாழ்த்தப்பட்ட குடும்பத்திற்காக சலுகையை தன் வம்சத்திற்கு வேண்டாம் என விட்டுக் கொடுப்பது தான் சரி. அதனை செய்யாமல் இடஒதுக்கீட்டை, அதன் சலுகையை பயன்படுத்துதல் என்பது தனிமனித ஒழுங்கீனமே.

இதற்காக இடஒதுக்கீட்டையே அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது மற்ற சாதிக்காரரின் சுயநலம் உங்கள் எண்ணங்களை விசாலமாக்குங்கள். 

சாதிமத பேதமற்ற மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாட்டை உருவாக்குவோம்.

நன்றி 

ஆரூர் மூனா

பாயும் புலி - சினிமா விமர்சனம்

படத்தின் கதையை விட படம் பார்க்க அலைந்த கதையே பெரும் கதையாகப் போனதால் அதை முதலில் பார்ப்போம்.

வழக்கமாக முதல் காட்சி பார்க்கும் திரையரங்கங்களான ஏஜிஎஸ் மற்றும் கங்கா இரண்டின் வெப்சைட்டிலும் புதன் முதல் பார்த்துக் கொண்டே இருந்தேன். ரிசர்வேசன் ஓப்பன் ஆகவே இல்லை. குழப்பமாகவே இருந்தது. இன்று காலை எழுந்து ஏழு மணிவாக்கில் மறுபடியும் புக்மை ஷோ மற்றும் டிக்கெட் நியூ இணையதளங்களை பார்த்தால் பக்கத்தில் உள்ள அரங்கங்கள் எதிலும் படத்தின் முன்பதிவு இல்லை. ஆனால் ஒன்பதரை மணிக்கு மகாராணி அரங்கில் காட்சி இருப்பதாக தளம் காட்டியது.


ரெண்டு டிக்கெட்டை ரிசர்வ் பண்ணிக் கொண்டு சிவாவுக்கு  போன் செய்து வருகிறீர்களா என்று கேட்டால் அவர் ரொம்ப தொலைவாக இருக்கிறது. என்னால் வர முடியாது என்று சொல்லி விட்டார். பிறகு நண்பன் போலி பன்னிக்குட்டி வீட்டுக்கு போய் விவரமே சொல்லாமல் அள்ளிப் போட்டுக் கொண்டு அரங்கிற்கு விரைந்தோம். 9.20 வரை அரங்கின் நுழைவாயில் திறக்கப்படவேயில்லை. கூட இருந்த பயபுள்ள பசிக்குது, பசிக்குதுன்னு புலம்பிக் கொண்டே இருந்தான். 

9.30க்கு கதவை திறந்து காட்சிகள் ரத்து, ரீபண்ட் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவித்தார்கள். பிறகு வழியில் சாப்பிட்டு வீட்டுக்கு வந்து முல்லையுடன் விளையாடிக் கொண்டு இருந்தேன். 12 மணிக்கு போன் செய்த சிவா, சைதை ராஜ் திரையரங்கில் காட்சிகளுக்கான டிக்கெட் வழங்கப்படுகிறது, என்று நக்கல் செய்த படியே காட்சிக்கு சென்றார். ஜாக்கியும் ஆல்பர்ட் அரங்கில் காட்சி தொடங்கியதாக தெரிவித்தார். 


மணி 12.30 ஆனது. நமக்கு கை பரபரக்க தொடங்கியது. ஏஜிஎஸ்க்கு போன் செய்து விசாரித்தால் 12,20க்கு முதல் காட்சி தொடங்கி விட்டதாக தெரிவித்தார்கள். அருகில் உள்ள வேறு என்ன அரங்கில் அந்த நேரத்திற்கு காட்சி இருக்கும் என பார்த்தால் எஸ்2வில் 1 மணிக்காட்சி இருந்தது. உடனே படம் பார்க்க கிளம்பி விட்டேன். 


சத்தியமாக இந்த படம் பார்த்தே ஆகவேண்டும் என்ற பேராவல் எல்லாம் கிடையாது. ஒரு விஷயம் மறுதலிக்கப்படும் போது அதை அடைந்தே தீர வேண்டும் என்று மனம் விரும்பும் அல்லவா. அந்த கான்செப்ட் தான் இந்த படத்தை இப்படி துரத்தி துரத்தி பார்க்க வைத்தது. 

--------------------------------------------------------

மதுரையில் பணக்காரர்களை மிரட்டி ஒரு கும்பல் கோடிகளில் பணம் பறிக்கிறது. தராத தொழிலதிபர்களை கடத்தி கொல்கிறது. அதை தடுக்க முயன்ற ஒரு எஸ்ஐ வெட்டிக் கொல்லப் படுகிறார். அந்த கும்பலை வீழ்த்த அந்த ஏரியாவுக்கு ஏசியாக நியமிக்கப்படுகிறார். 

விஷாலின் குடும்பமோ பாரம்பரியமிக்கது. கக்கன் போன்ற நற்பெயரைப் பெற்ற தாத்தாவின் வாரிசு அவர். விஷால் மதுரைக்குள் வந்ததும் படிப்படியாக அந்த கடத்தல் கும்பலை என்கவுண்ட்டர் செய்து வீழ்த்துகிறார். ஆனாலும் கடத்தல் தொடர்கிறது. 


பிறகு தான் இந்த பிரச்சனையின் ஆணிவேர் தெரிகிறது. அதில் விஷால் குடும்பத்தின் ஒரு ஆள் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிகிறது. குடும்பமே என்ன முடிவு எடுக்கிறது என்பதே பாயும் புலி படத்தின் கதை. 

விஷால் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நன்றாக செய்திருக்கிறார். அவரின் தற்போதைய அவதாரத்திற்கு ஏகப்பட்ட பில்ட்அப்புகள் இருக்கும் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பதே பெரிய ஆறுதல்.

இன்டர்வெல் சண்டைக் காட்சியை தவிர மற்ற இடங்களில் முக்கியமாக க்ளைமாக்ஸில் எகிறி அடிக்காமல் இயல்பாகவே சண்டை போட்டு இருக்கிறார். முதல் பாதியில் சூரியுடன் சேர்ந்து சில காட்சிகள் சிரிக்க வைக்கிறார். 

காஜல் இந்த படத்திற்கு எதற்கு என்றே தெரியவில்லை. ஒரு ஹீரோயின் வேண்டுமே என்ற காரணத்திற்காக மட்டுமே காஜல். இரண்டு டூயட் ஆடிப் போகிறார். முதல் காட்சியிலும் அப்புக்குட்டியுடனான ஆக்சிடெண்ட் காட்சியிலும் மப்படித்து தெளியாத முகத்துடன் அரைகுறை மேக்கப்புடன் பயமுறுத்துகிறார்.

சூரி முதல் பாதியில் அரை மணிநேரம் காட்சிகளை நகர்த்த மட்டுமே பயன்படுத்தப் பட்டு இருக்கிறார். அந்த ஹெல்மெட் போட்டு குளிக்கப் போகும் காட்சியில் நகைக்க வைக்கிறார். பள்ளி மாணவனுக்கு அண்ணனனாக போய் அடி வெளுக்குமிடத்தில் நன்றாக சிரிக்க வைக்கிறார். 

சமுத்திரக்கனி கிட்டத்தட்ட விஷாலுக்கு இணையாக படம் முழுக்க வரும் பாத்திரம். போலீசுக்கு பயந்து தெருத்தெருவாய் ஒடும் இடத்திலும் அப்பாவின் தலையில் கம்பியை கொண்டு அடிக்குமிடத்திலும் கொஞ்சமாய் க்ளைமாக்ஸிலும் கவனிக்க வைக்கிறார். 

பாண்டிய நாடு படத்தில் எப்படி பாரதிராஜாவுக்கு கனமான பாத்திரமோ அதே போல் இந்த படத்தில் வேல. ராமமூர்த்திக்கு. ஆனால் குருவித் தலையில் பனங்காயாய் ஆகிப் போகிறது நிலைமை. சற்று மெனக்கெட்டு அந்த பாத்திரத்திற்கு நல்ல நடிகரை போட்டு இருக்கலாம்.  

முதல் மான்டேஜ் பாடல் மட்டும் கவனிக்க வைக்கிறது.

சுசீந்திரன் என்ற இயக்குனருக்காக மட்டுமே இந்த படம் பார்க்கனும் என்று நினைத்தேன். ஆனால் மனிதர் பாய வேண்டிய புலியை பம்மிய புலியாக்கி விட்டு இருக்கிறார். 

பெரிய அளவுக்கு ஹிட் இல்லாவிடினும் சுமாரான வெற்றி அடையும் என்றே தோணுகிறது. தனிஒருவனுக்கு டிக்கெட் கிடைக்காவிடில் கண்டிப்பாக எடுக்கலாம் டிக்கெட் பாயும் புலிக்கு.

ஆரூர் மூனா