Thursday, 24 September 2015

லைப் ஆப் ஜோசுட்டி - ஜீது ஜோசப் - சினிமா விமர்சனம்

ஒரு இயக்குனரின் படம் ஹிட் ஆனால் அடுத்த படத்திற்கு என ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே, அது தான் அடுத்த படத்தின் வசூலுக்கு முதலீடு. அதுவே இந்தியாவில் உள்ள 5 மொழிகளில் அதிரிபுதிரி ஹிட் அடித்திருந்தால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கும் அல்லவா. அந்த எதிர்பார்ப்போடு தான் அரங்கிற்கு போனேன். 


த்ரிஷ்யம் படத்தின் மூலம் அகில இந்தியாவிலும் பிரபலமான ஜீது ஜோசப்பின் அடுத்த படம் தான் லைப் ஆப் ஜோசுட்டி. ஒரு மனிதனின் 8 வயதில் இருந்து 38 வயது வரை நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் படம்.

படத்தின் மிகப்பெரும் குறை மெதுவாக நகரும் திரைக்கதை. த்ரிஷ்யம் மாதிரி பரபரப்பான படத்தை தந்தவரிடம் இருந்து இப்படிப்பட்ட படமா என்று யோசிக்க வைக்கிறது.  ஆனால் படம் மோசமெல்லாம் கிடையாது. ரசிக்கும் படி தான் இருக்கிறது. 

கேரளாவில் உள்ள கட்டப்பனை என்ற மலைகிராமத்தில் இரண்டு வீடுகள் மட்டும் அடுத்தடுத்து இருக்கிறது. ஒரு வீட்டில் திலீப், அடுத்த வீட்டில் ரச்சனா. சிறுவயதில் இருந்தே இருவரும் ஒன்றாக வளருகின்றனர். பருவ வயதில் காதல் கொள்கின்றனர். திலீப் நாலாவது வரை மட்டுமே படித்தவர் என்பதாலும், ரச்சனா வீடு வசதியானது என்பதாலும் காதலுக்கு எதிர்ப்பு வருகிறது. 


ரச்சனாவின் அப்பா வேறொருவருக்கு ரச்சனாவை மணமுடிக்க நினைக்கிறார். பொண்ணு பார்க்க வருபவர்களையெல்லாம் தன் நண்பர்கள் உதவியுடன் எதாவது பொய் சொல்லி திருமணத்தை நிறுத்திக் கொண்டே வருகிறார் திலீப். ஒரு நாள் உண்மை தெரிந்து ரச்சனாவின் அப்பா திருமணத்தை நடத்தி விடுகிறார்.

திருமணமாகிப் போன ரச்சனா திலீப்பின் மேலுள்ள கோவத்தால் அவரை வெறுப்பேத்த வருடத்திற்கு ஒரு பிள்ளையாக பெற்றுப் போடுகிறார். 

திலீப்புக்கு இரண்டு தங்கச்சிகள், ஒருத்தரை  சூரஜ்க்கு திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார்கள். வரதட்சணை பாக்கியிருப்பதால் அதுவும் பிரச்சனையில் இருக்கிறது. இரண்டாவது தங்கச்சிக்கு திருமணம் செய்ய பணம் தேவைப் படுகிறது. வீடு கடனில் இருந்து ஜப்தியாகும் நிலை. எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க டைவர்ஸியான ஜோதியை திருமணம் செய்து குடும்பத்தின் பிரச்சனைகளை தீர்த்து ஜோதியுடன் நியுசிலாந்துக்கு குடும்பம் நடத்த செல்கிறார் திலீப். 

அங்கு போனதும் தான் தெரிகிறது. ஜோதிக்கு ஒரு தோல்வியடைந்த காதல் இருக்கிறது என்று. அதனால் திலீப்புடன் சேர்ந்து வாழ அவகாசம் கேட்கிறார் ஜோதி. 

ஒரு நாள் அந்த பழைய காதலனுடன் ஜோதியை படுக்கையில் பார்க்கும் திலீப் ஜோதியை பிரிகிறார். அதுவரை சம்பாதிக்கனும் என்ற எண்ணமே இல்லாத திலீப் அதன் பிறகு ஒரு தொழில் ஆரம்பிக்க முயற்சிக்கிறார்.

நாலாவது மட்டுமே படித்த திலீப் நியுசிலாந்தில் முன்னேறினாரா, இந்தியா திரும்பினாரா, இந்தியாவில் உள்ள அவரது குடும்பம் என்னவானது என்பது தான் படத்தின் கதை.


எனக்கு இந்த படத்தின் மீது ஆர்வம் ஏற்படவும், இந்த படம் பிடிக்கவும் ஒரு காரணம் இருக்கிறது. அது என் கொள்கை ரீதியுடன் சம்பந்தப்பட்டது. எந்த ஒரு பிரச்சனையிலும் தன் நிலையில் இருந்து பார்க்காமல் எதிரியின் பாயிண்ட் ஆப் வியுவில் இருந்து பார்த்தால் சச்சரவும், சண்டையும் வராது என்று சொல்லியே திலீப்பை வளர்க்கிறார் அவரது அப்பா. இது தான் என்று தெரியாமல் நான் அப்படியே இருந்து இருக்கிறேன். அது தான் என்னை படத்தினுள் இழுத்தது.

படம் துவங்கியதிலிருந்து திலீப்பின் பின்னால் இரண்டு தேவதைகள் வருகிறார்கள். ஒருவர் நல்ல தேவதை, மற்றவர் துர்தேவதை. நல்லவனான திலீப் கெட்டவனாக மாற சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் துர்தேவதை சந்தோஷிக்க அதனை தவிர்த்து நல்லவனாகவே இருக்கும் திலீப்பை ஆசீர்வதித்தே வருகிறார் நல்ல தேவதை. வித்தியாசமான சிந்தனை.

முதல் பாதி மிகுந்த ரகளையாக இருக்கிறது. நண்பர்களுடன் அடிக்கும் கும்மாளமும் ரச்சனாவுடனான காதலும், ரச்சனாவே பெட்டியுடன் வந்து வா வீட்டை விட்டு ஓடிப் போகலாம் என்று கூப்பிடும் போது கூட உன் அப்பாவின் இடத்தில் இருந்து சிந்தித்துப் பார் என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பிகிறார் திலீப். 

அதனால் திலீப் மீது வெறுப்படையும் ரச்சனா அவரை பழி தீர்ப்பதற்காகவே வருடாவருடம் பிரவிப்பதற்காக தாய் வீட்டுக்கு வருவதும், க்ளைமாக்ஸில் பத்து வருடம் கழித்து திலீப் வீடு திரும்பிய அன்றும் கூட பிரசவத்துக்காக ரச்சனா வருவதும் அடிப்பொளி காமெடி.

கொஞ்ச நேரமே வரும் சூரஜ் வெஞ்சாரமூடு கிடைத்த வாய்ப்பில் சிக்சர் அடிக்கிறார். திலீப்பின் பால்ய வயது நண்பராக வருபவர் செம பெர்பார்மன்ஸ், பின்னி எடுக்கிறார். ரச்சனாவின் கல்யாணத்தன்னைக்கு ரச்சனா கல்யாணத்திற்கு சம்மதம் என சர்ச்சில் சொல்வதை கேட்டு ஒடும் திலீப் தற்கொலை தான் செய்து கொள்ளப் போகிறாரோ என்று அவருடன் பயந்து ஓடும் காட்சியில் தியேட்டர் வெடிச் சிரிப்பு சிரிக்கிறது.

இரண்டாம் பாதி தான் சற்று சவசவவென்று நகர்கிறது. இன்னும் சொல்லப் போனால் நகரவே மாட்டேன் என்கிறது. கல்யாணம் செய்த ஜோதி ஏமாற்றி விட திடீரென அமையும் அக்ஷா பட்டுடனான காதல் சுவாரஸ்யம் தான்.

ஆனால் நாலாங்கிளாஸ் படித்த திலீப், நியூசிலாந்தில் உணவகம் ஆரம்பிப்பதும் அதை நியூசிலாந்திலேயே சிறந்த உணவகமாக மாற்றுவது எல்லாம் சினிமாவில் மட்டும் முடிந்த ஒன்று.

எனக்கு என் அப்பாவுக்குமான கெமிஸ்ட்ரி எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது என்னை திட்டாவிட்டால் அவருக்கு உறக்கம் வராது. அதே போல் ஒரு முறையாவது அவரிடம் திட்டு வாங்கி விட வேண்டும் என்பது என் கோட்டா. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது புரியாது. இன்று கூட கோவம் வந்தால் என்னை அடிக்க வருவார். நாம இருப்பதோ எருமை மாட்டிற்கு நிகராக, எங்கப்பா அதையெல்லாம் யோசிக்காமல் கையை ஓங்குவார். ஆனாலும் நான் கம்முன்னு இருப்பேன்.

அதே போல் ஒரு கெமிஸ்ட்ரி திலீப்புக்கும் அவரது தந்தைக்கும் ஒடுகிறது. பார்க்கும் போதே அவ்வளவு நெகிழ்வாக இருக்கிறது. திருமணம் முடிந்து குடும்பம், ஊர், நட்புகள் எல்லாவற்றையும் பிரிந்து நியூசிலாந்து போகும் திலீப்பிடம் அவரது அப்பா செயற்கையாக சிரித்து பேசும் காட்சியில் என்னையறியாமல் கண்ணீர் வழிந்தது. 

க்ளைமாக்ஸில் தனியாக அமர்ந்து இருக்கும் திலீப்பிடம் டீமேக்கர் விற்க வந்து இல்லாள் ஆகும் கௌரவத் தோற்றத்தில் வந்து போகிறார் நயன்தாரா.

வேறு வேலையே இல்லையென்றால், நிதானமாக ஒரு படத்தை பார்க்க தயார் என்றால் மட்டும் அரங்கம் பக்கம் செல்லுங்கள். இல்லையென்றால் இன்னும் நான்கு மாதத்தில் சூர்யா டிவியில் பார்த்துக் கொள்ளலாம்.

ஆரூர் மூனா

5 comments:

 1. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 2. Boss good movie
  I watched
  Appuram ungala oru thadava nerla santhikkanum

  ReplyDelete
 3. வலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..சார்.

  ReplyDelete