Sunday, 8 November 2015

குடும்பத்துடன் கொண்டாடும் தீபாவளி

பதிவு போடுவது எதாவது ஒரு காரணத்தினால் தடைபட்டால் அந்த இடைவெளியை கடந்து அடுத்த பதிவு போடுவதென்பது சாமானியமான காரியமன்று. கண்டென்ட்டும் சிக்காது. வலுக்கட்டாயமாக போட்டு இழுத்தாலும் வெறும் காத்து தான் வரும்.


அந்த கேப்பை உடைப்பதற்காக செய்யப்பட்ட பகீரபிரயத்தனம் தான் இது.

தீபாவளிக்கு சிரமப்பட்டு சொந்தஊருக்கு வருவதை விட சுலபமானதும், வசதியானதும் சென்னையில் இருந்து விடுவதே. முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்து விடலாம். அதுவும் அதிகாலை காட்சிகள் சென்னையில் பிரத்யேகமாக திரையிடப்படும். எல்லாருக்கும் முன்னர் விமர்சனம் போடலாம். ஹிட்ஸ் அள்ளலாம்.

விடியற்காலை எழுந்து எண்ணெய் தேய்த்து சாமி கும்பிட்டு குளிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. முன்னிரவு மகா தியானத்தில் மூழ்கி விட்டு காலையில் சாவகாசமாக எழலாம். பலகாரங்கள் கூட கடையில் வாங்கி தீபாவளியை நடத்திக் கொள்ளலாம். 

ஆனால் சொந்த ஊருக்கு போய் கொண்டாட நினைப்பவர்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள், சிக்கல்கள் உண்மையிலேயே கொடுமையானது. 


இப்பொழுதாவது முன்பதிவு, சிறப்பு பேருந்துகள் போன்ற வசதிகள் இருக்கிறது. 1998 தீபாவளிக்கு முதல் நாள் பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு வந்தேன். அப்பொழுது எல்லாம் கணினி முன்பதிவு கிடையாது. நேரில் பாரிமுனை வந்து தான் டிக்கெட் புக் செய்ய வேண்டும். 

அதனால் இரவு ஒன்பது மணிக்கு பேருந்தை எதிர்நோக்கி நின்றேன். தீபாவளி ஒரு நாள் மட்டுமே எனக்கு விடுமுறை. திருவாரூர் போய் சேர்ந்த அன்று இரவே சென்னைக்கு கிளம்பியாகனும்.

முன்பதிவில்லாத பேருந்தில் ஏறுவதற்கு டோக்கன் கொடுக்கிறார்கள். 4000 பேருக்கு நாற்பது டோக்கன் எம்மாத்திரம். டோக்கன் வாங்கவே முடியவில்லை. நடுராத்திரி பனிரெண்டு மணிக்கு பேருந்து கிளம்புவதை நிறுத்துகிறார்கள். இனி விடியற்காலை தான் பேருந்து என்ற அறிவிப்பு செய்கிறார்கள். அன்று இரவு முழுக்க பேருந்து நிலையத்தில் காத்திருந்து காலை நாலு மணிக்கு வந்த பாண்டி பேருந்தில் ஏறி, அங்கிருந்து மாறி மாறி மதியத்திற்கு மேல் திருவாரூருக்கு வந்தடைந்தேன். 

வந்து குளித்து சாப்பிட்டு விட்டு பேருக்கு ரெண்டு வெடி வெடித்து விட்டு கிளம்பி பேருந்து நிலையத்தை வந்தடைந்தேன். சென்னைக்கு திரும்புவதற்காக. வாழ்க்கையே வெறுத்து விடும், இது போன்ற கொடுமையான பயணங்களில். 

2003 தீபாவளி இன்னும் கொடுமை. அப்போ வேலையில் சேர்ந்திருந்ததால் கையில் காசு எக்கச்சக்கமாக இருந்த நேரம். ஏதோ ஒரு தனியார் பேருந்தில் ஒரு மாதத்திற்கு முன்பே கூடுதல் விலை கொடுத்து டிக்கெட் புக் பண்ணியிருந்தேன். பேருந்தில் ஏறி அமரும் போது இரவு, பத்து மணி பேருந்து கோயம்பேட்டை தாண்டிய போது விடிந்திருந்தது. அப்படி ஒரு டிராபிக். அண்ணாநகர் முதல் அசோக் நகர் வரை ஒரு வாகனம் நகர முடியவில்லை. சென்னையே ஸ்தம்பித்த நாள் அன்று. 

நம்மிடம் காசு இருந்தால் கூட நேரம் சரியில்லை என்றால் தீபாவளி, பொங்கல் போன்ற விஷேசங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவது கேள்விக்குறியாகி விடும்.

இப்பவும் வீட்டில் அம்மா பாரம்பரியமாக எல்லா பலகாரங்களையும் வீட்டில் தான் செய்வார். நான் தான் இப்பக் கூட, ஏன் இன்று கூட நான் தான் மில்லுக்கு போய் அரிசி, ரவை, பயித்தம்பருப்பு, சர்க்கரை எல்லாத்தையும் அரைத்து வந்தேன். அங்கே க்யூ நிற்கும். அவமானமெல்லாம் இதில் பார்க்க முடியாது. 

சினிமா சென்னையில் இருப்பது போல் அதிகாலை காட்சிகள் இருக்காது. 1 1 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும். அதற்குள் சென்னையில் இருந்து விமர்சனங்கள் வரத் தொடங்கியிருக்கும். முக்கிய நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு பலகாரங்கள் கொடுப்பது, ஆட்டுக்கறியும், கோழிக்கறியும் வாங்கி வந்து கொடுப்பது போன்ற வேலைகள் நம் தலையில் தான் கட்டப்படும்.

இந்த வேலைகளை முடித்து விட்டு சினிமா முதல் காட்சி பார்ப்பதென்பது சாத்தியமே இருக்காது. அதுவும் இப்போ நாம அரைக்கிழம். திருவாரூர் மாதிரியான ஊர்களில் 25-30 வயதுடைய சின்னப்பசங்க மட்டும் தான் முதல் காட்சி டிக்கெட் எடுக்க நிற்பார்கள். அவர்களுக்கு நிகராக போட்டிப் போட்டு படம் பார்க்கவும் வெட்கமாக இருக்கும். என் வயதுடைய நண்பர்கள் எவனும் முதல் காட்சிக்கு வரமாட்டான். சென்னையில் இந்த பிரச்சனையே இருக்காது.

இதை ஜஸ்ட் லைக் தட் நாம் வேலை இருக்கு, தீபாவளிக்கு வரமுடியாது என்று சொல்லி விட்டால் எல்லாம் சுபமாகவே இருக்கும். ஆனால் என் அம்மா அப்பாவுடன் பண்டிகையை கொண்டாடும் மகிழ்வை அது தருமா. 

தீபாவளியன்று அதிகாலை நாலு மணிக்கு என் அப்பா தான் இப்பவும் எனக்கு எண்ணெய் தேய்த்து விடுவார், எண்ணெய் தேய்த்த தலையுடன் அப்படியே வந்து ரெண்டு சரத்தை கொளுத்திப் போட வேண்டும், ரெண்டு உலக்கை வெடியும் சேர்த்து வெடிக்கனும். 

அப்புறம் கொல்லையில் மர அடுப்பில் சூடாக்கப்பட்ட வெந்நீரை எடுத்து பதமாக வெளாவி கூப்பிடுவார். போய் குளித்து விட்டு வந்து புத்தாடைகளை அணிந்து ஒரு பண்டில் சரம், பத்து உலக்கை வெடி போன்றவற்றை வெடிக்க வைத்து வாசலை பேப்பர் குப்பைகளால் நிறைத்து முடிப்பதற்குள், மற்றவர்கள் வந்து குளித்து முடித்ததும் சாமி கும்பிட்டு, இலை போட்டு இட்லி, வடை, சுளியன் மேலும் பலகாரங்கள் வைத்து சாம்பார், தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட்டு முடித்ததும் அம்மா பலகாரங்கள் நிரப்பிய பையை கையில் கொடுப்பார். 

நண்பர்கள் வீடுகளில் கொடுத்து அவர்கள் வீட்டு பலகாரங்களை திரும்ப பெற்று வீட்டில் கொடுத்து விட்டு கடும் கூட்டத்திற்கு இடையே பாய் கடையில் ஒரு கிலோ ஆட்டுக்கறியை வாங்கி, வழியில் கோழிக்கறியையும் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்து விட்டு சினிமாவுக்கு போய் விசிலடித்து பேப்பர் பறக்க விட்டு படம் பார்த்து வீட்டுக்கு மதிய சாப்பாட்டுக்கு வந்து தோசை, ஆட்டுக்கறி குழம்பு, கோழிக்கறி வறுவல் ஒரு காட்டு காட்டி விட்டு நண்பர்களை சந்திக்க கிளம்பி விடுவேன். 

மாலை வந்து மிச்சமிருக்கும் வெடிகளை வெடித்து சில வெடிகளை கார்த்திகைக்கு ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிட்டு அரக்கப் பறக்க சென்னைக்கு கிளம்ப வேண்டும். ஆனால் அந்த ஒரு நாள் மகிழ்ச்சியும் அனுபவமும் நம்மை பல மாதங்களுக்கு தெம்புடனே வழிநடத்தும்.

அதனாலேயே இந்த அனுபவத்தை என் மகளுக்கும் கொடுப்பதற்காக என் அம்மா, அப்பா காலம் வரை, எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் கொண்டாடும் பழக்கத்தை கைவிடக் கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.

ஆரூர் மூனா

5 comments:

 1. எக்காரணத்தைக் கொண்டும் பாரம்பரியத்தைக் கைவிடக்கூடாதுங்க.

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவின் நோக்கமும் அதுதானுங்க, நன்றி அய்யா,

   Delete
 2. பேருந்து பிரச்னை எனக்கும் பல சமயங்களில் ஏற்பட்டிருக்கிறது். மில்லுக்கு போய் மாவு அரைத்து கொண்டு வருவது பிடிக்காத விசயம் காரணம் அங் கே இருக்கும் கூட்டம்

  ReplyDelete
  Replies
  1. நம்ம இரண்டு இடத்தையும் கெட்டியா புடிச்சிக்கினு இருக்கிறதுனால தான் பிரச்சனை சார். ஒன்னு சொந்த ஊரை விடனும். இல்லை வாழும் ஊரையாவது விடனும்.

   Delete
 3. விழாக்காலங்களில் சொந்த ஊரில் இருக்க முடியாதது வருத்தம் தருவதுதான்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete