Friday, 29 January 2016

இறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்

படத்தின் ட்ரெய்லரை பார்த்ததுமே இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படத்தின் பட்டியலில் சேர்ந்து விட்டது. காலையில் அரங்க வளாத்தினுள் வண்டியை நுழைத்தால் பகீரென்று இருந்தது. அரண்மனை 2 படத்திற்கு கூட்டம் பம்மியது. வண்டி போடவே இடமில்லை. தப்பான படத்தை தேர்வு செய்து விட்டோமே என்று நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு. 


வெறும் கதைன்னு பார்த்தால் சக் தே இந்தியா படத்தின் அதே டெம்ப்ளேட் தான். வீரராக தோற்ற ஒருவன் சில வருடங்களுக்கு பிறகு பயிற்சியாளராகி சாதாரண ஒருத்தரை பயிற்சி கொடுத்து உலக சாம்பியன் ஷிப் ஆக்குதே கதை, இரண்டு படத்திற்கு ஒரு வித்தியாசமும் இல்லை. 

ஆனாலும் இறுதிசுற்று படம் சக்தே இந்தியாவை விட நாலு அடி முன்னே நிற்கிறது. காரணம் மிக மிக எதர்த்தமான திரைக்கதை. சினிமாத்தனம் இல்லாத சினிமாவாக பிரம்மாண்டமாக நிற்கிறது படம்.

மாதவன் மேன்லினஸ்ஸில் அடித்து தூள் பறத்துகிறார். வயசானாலும் அந்த ஆண்மையின் வசீகரத்தில் எந்த குறைவும் ஏற்படவில்லை. என்னா ஹேர்ஸ்டைல். அதை விட பெரிய விஷயம். பெர்பார்மன்ஸில் பின்னுகிறார். 


இந்த மனிதனுக்குள் இருந்த ஆக்டிங் சென்ஸ் குறைந்து விட்டதோ என்று எண்ணினேன். காரணம் மன்மதன் அம்பு. ஆனால் மின்னலேயில் பார்த்த மாதவன் எந்த சேதாரமும் ஏற்படாமல் கண் முன்னே நிற்கிறார். 

க்ளைமாக்ஸில் ஜாகீர் உசேனிடம் எல்லா திமிரையும் விட்டு ரித்திகாவுக்காக கெஞ்சும் போது பெர்பார்மன்ஸில் பின்னியிருக்கிறார். அதே போல் இறுதியாக தூரத்தில் இருந்தபடி எப்படி அடிப்பது என்று ரித்திகாவுக்கு ஹிண்ட் கொடுப்பது வரை பின்னி பெடலெடுக்கிறார் மனுசன். 

அடுத்த ரவுண்டுக்கு தயாராகுங்கள் மாதவன். ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கிறோம்.


ரித்திகா சிங் முதல் காட்சி முதலே ஆச்சரியப்பட வைக்கிறார். படத்திற்கான ப்ரோமோவில் பார்த்தேன், ஒரு வார்த்தை கூட அவருக்கு தமிழ் பேச வரவில்லை. ஆனால் படத்தில் ப்ராம்ப்ட்டில் வசனம் சொல்லாமல் அட்சர சுத்தமாக பேசுகிறார். அதுவே படத்தின் ஆகச் சிறந்த ப்ளஸ். 

மீன் விற்கும் காட்சியில் ஆரம்பித்து படிப்படியாக ஸ்கோர் செய்து கொண்டே போகிறார். முதல் ரவுண்ட்டில் வேண்டும் என்றே பவுல் செய்ய அம்பயரை முகத்தை பேர்க்கும் போது அப்ளாஸ் அள்ளுகிறார். 

திருட்டுப் பட்டம் சுமந்து வெறுமையுடன் ஆட்டோவில் மாதவனுடன் வரும் போது நடிக்க தெரிந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார். இன்னும் என்ன சொல்ல, முழுசா சொல்லனும்னா சொல்லிக்கிட்டே போகலாம். இந்த ஒரு பதிவு பத்தாது. 


நாசர் லோக்கல் பாக்சர் எப்படி இருப்பார்கள் என்பதை கண்முன்னே நிறுத்துகிறார். முதலில் அலட்சியமாக மாதவனை அணுகும் போது பிறகு அவரைப் பற்றி படிப்படியாக புரிந்து கொண்டு அவருக்கு துணை நிற்கும் போதும் செம செம. 

இந்த மாதிரி படங்களில் ஒரு சின்ன அபாயம் இருக்கிறது. நாம் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே இணைந்து பயணிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் சொதப்பி விடும். அப்படி நம்மை படத்துடன் பயணிக்க வைக்க வேண்டியது இயக்குனர் கடமை. அதை சரியாக செய்து வெற்றிக் கனியை பறித்து இருக்கிறார் இயக்குனர். 

படத்திற்கு தேவையில்லாத ஒரு சீன் ஒரு ப்ரேம் கிடையாது. அவ்வளவு நறுக் எடிட்டிங். அந்த செங்கிஸ்கான் பற்றிய விவாதம் சம்பந்தமில்லாமல் இருக்கும் போதே நினைத்தேன். அது க்ளைமாக்ஸ்க்கான லீட் என்று. அதை சரியாக ப்ளேஸ் பண்ணியிருக்கிறார் இயக்குனர். 

எல்லாம் முடிந்து வெற்றி பெற்ற பிறகு மாதவன் ஒதுங்கியிருக்க ஜாகீர் உசேன் முன்னின்று பெருமை பட்டுக் கொள்ளும் போதே தியேட்டரே எதிர்பார்க்கிறது அந்த காட்சியில் ரித்திகா அவரை அடித்து  பொளக்க வேண்டுமென. அது நடந்ததும் அரங்கில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். இது தான் இந்த படத்தின் வெற்றிக்கு சான்று.

நாயகி வட இந்திய முகமாக தெரிகிறதே, அன்னியமாக இருக்கிறதே என்று யோசிக்கும் போது அதற்கு சரியான காரண காரியம் அமைத்து நம்ப வைத்து இருக்கிறார் இயக்குனர். 

பாடல்கள் எல்லாம் ஏஒன். எல்லாமே மான்டேஜ் சாங்ஸ். அதற்கேற்ற சரியான காட்சிகள். 

சினிமா ரசிகர்கள் கண்டு களிக்க ஏற்ற வகையில் ஒரு சிறந்த படம் இறுதிச்சுற்று. 

படம் பார்த்து முடித்ததும் மனமெல்லாம் நிறைந்து விமர்சனம் எழுத வீட்டுக்கு வரும் போது ஒரு போன் வந்தது. யூனியன் ஆபீஸில் வெள்ள நிவாரண பொருட்கள் கொடுக்கிறார்கள், வந்து பெற்றுக் கொள்ளவும் என. இப்ப அது அவசியமில்லை கூட. ஆனால் யூனியன் காரர்கள் தயவு வேண்டுமே. அதனால் எதுவும் சொல்ல முடியாமல் நேரே யூனியன் ஆபீசுக்கு போய் விட்டேன். 

எல்லாம் முடியும் நேரம் வேலைக்கு செல்ல வேண்டிய நேரமாகிடுச்சி. அதனால் தான் விமர்சனம் லேட்டு.

ஆரூர் மூனா

Thursday, 14 January 2016

ரஜினி முருகன்

பண்டிகைகளின் கொண்டாட்ட மனநிலை அன்று வெளியாகும் சினிமாவின் மூலம் இன்னும் அதிகமாகனுமே தவிர மூடையே சங்கடத்தில் ஆழ்த்தி விட கூடாது. துப்பாக்கி படம் சரியான உதாரணம், அந்த வருட தீபாவளி மக்களிடையே அதிக கொண்டாட்டமானதற்கு துப்பாக்கிக்கும் பங்கிருக்கிறது.


அது போன்ற கொண்டாட்டத்தை அதிகப்படுத்தும் சினிமாவாக வந்திருக்கிறது ரஜினிமுருகன். இந்த பொங்கலுக்கு வெளியான மற்ற படங்கள் எல்லாம் முரட்டு பணக்கார நாயகர்கள் படமே. சாமானியனாக மல்லுக்கு நின்று மக்களின் ஆதரவை ஏகோபித்த அளவில் பெற்று சினிமா வணிகத்தில் முன்னுக்கு நிற்பது சிவகார்த்திகேயன்.

படத்திற்கு அலைஅலையென வரும் மக்களே மேற்கூறிய வார்த்தைகளுக்கு சாட்சி. டிரெய்லர் பார்க்கும் போது பெரிய அளவில் என்னை ஈர்க்கவில்லை, மசாலாப் படமாகவோ வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இன்னுமொரு வர்ஷனாகவோ இருந்து விட வாய்ப்பிருக்கிறது என்றே நினைத்திருந்தேன். 


அழகியல் சினிமாவுக்கான எந்த கட்டமைப்பும் இல்லை, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை இல்லை, மனதை உருக்கும் கதை இல்லை ஆனாலும் மக்களுக்கு படம் மிகவும் பிடித்து இருக்கிறது. 

அரங்கு நிரம்ப அமர்ந்து வலிக்க வலிக்க சிரித்து செல்கிறார்கள். பாடலுக்கு ஆண்பெண் பேதமில்லாமல் திரையின் முன் நின்று ஆட்டம் போடுகிறார்கள். எந்த பாடலுக்கும் ஒரு ஆண்மகன் கூட தம்மடிக்க வெளியே போகவில்லை. பொங்கல் மாதிரியான பண்டிகைகளுக்கு இந்த படம் போதும்.

அப்பா, அம்மாவிடம் காசை களவாண்டு நண்பனுடன் செலவழித்து வேலைக்கு போகாமல் அழகான பெண்ணை காதலித்து அவளை கைப்பிடிக்க முயற்சித்து சொத்து பிரச்சனையில் வில்லனுடன் மோதி ஜெயித்து வணக்கம் போடும் வணிக சினிமா தான் ரஜினி முருகன்.

திரையில் பார்க்கும் போது அவ்வளவு ப்ரெஷ்ஷாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். நமக்கு அவரை ரொம்ப பிடிக்குமென்பதால் அவரது எல்லா செய்கைகளையும் ரசிக்கிறோம். நடிப்பில் நல்ல கம்பர்டபிளாக செட்டாகி விட்டார். 

இனி சிவகார்த்திகேயன் தேர்வு செய்யும் சினிமாவே அவரது பாதையை தீர்மானித்து விடும். உடலை வளைத்து, வெயிலில் கறுத்து வருத்தப்பட்டு ஜெயிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை. குழந்தைகள் அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் ஆகர்ஷமாக கொண்டாடுகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ், பல ஆங்கிள்களில் எனக்கு வரலட்சுமியை நினைவுபடுத்துகிறார். நல்ல வேளை காலையில் தாரை தப்பட்டை பார்த்து வரலட்சுமி பற்றிய மனநிலை எனக்கு மாறியிருந்ததால் அதையும் கூடுதல் தகுதியாக எடுத்துக் கொண்டே கீர்த்தி சுரேஷை ரசிக்க முடிந்தது. 

நல்ல இளமையும் அழகிய கேரள தேசத்து முகவெட்டும் அவருக்கான கூடுதல் பலம். நன்றாகவே இருக்கிறார்.

வேதாளம் படம் பார்த்து விட்டு சூரியை யாராவது காமெடி நடிகர்கள் என்றால் வாயில் குச்சியை விட்டு குத்திக் கொண்டு இருந்தேன். ஆனால் அவர் மாட்ட வேண்டிய இயக்குனர்களிடம் மாட்டினால் மிளிர்வார் என்பதை இந்த படம் உறுதி செய்கிறது. 

இடைவேளை வரை டம்மியாக வந்து கொண்டிருந்த ராஜ்கிரண் அதன் பிறகு நடிப்பில் பின்னி எடுக்கிறார். சிவகார்த்திகேயன் லெவலுக்கு இறங்கி காமெடியில் கலக்கியிருக்கிறார். 

80களில் எல்லா நடிகர்களுக்கும் போட்டு வெளுத்து எடுத்த இந்த பார்முலாவை இந்த காலத்தில் போட்டு வெற்றிகரமாக கலகலக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். 

இந்த படம் நீண்ட நாட்களுக்கு நினைவில் வைத்து மகிழும் அற்புத படமல்ல. படம் பார்க்கும் வரை சிரித்து விட்டு அந்த நாளை மட்டும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் கமர்ஷியல் படம் ரஜினி முருகன். 

ஆரூர் மூனா

தாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்

சென்னையில் முதல் காட்சி பார்ப்பதென்றால் வீட்டுப் பக்கத்தில் இருக்கும்  ஏஜிஎஸ்ஸில் காலை 9 மணிக்காட்சி எப்படியும் பார்த்து விமர்சனம் போட்டு விடுவேன். விமர்சனத்திற்காக வரும் லைக்கை விட குடும்பத்துடன் கொண்டாடும் விஷேசங்கள் தான் முக்கியம் என்பதால் எப்பொழுதுமே அம்மா அப்பாவுடன் திருவாரூரில் தான் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு கொண்டாட்டங்கள்.


இங்கு முதல் காட்சியே 11 மணிக்கு தான் அதிலும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 25 பேர் தான். இது தான் சிறுநகரங்களின் லட்சணம். சரி விமர்சனத்திற்கு போவோம்.

பாலாவுக்கென ஒரு டிபிக்கல் டெம்ப்ளேட் இருக்கு.  அந்த இலக்கணத்தை துளியும் மாறாமல் எடுத்திருக்கும் படம் தான் தாரை தப்பட்டை. நல்ல சந்தோஷமான கொண்டாட்டாமான கதையில் கனக்கும் க்ளைமாக்ஸ். இது தான் பாலாவுக்கான டெம்ப்ளேட். இது வரை இதை மாற்றி எடுத்த ஒரே படம் பரதேசி, படம் முழுவதுமே கனக்கும்.

தஞ்சாவூரின் மிகப் பாரம்பரிய கர்நாடக இசைக் கலைஞர் ஜிஎம் குமார். பாரம்பரிய கலைகளில் மீது மக்களின் கவனம் குறைந்து போனதால் வறுமையில் இருக்கும் அவரது மகன் சசிக்குமார் ஒரு பாரம்பரிய நடனக் குழு வைத்திருக்கும் கலைஞர். அங்கு ஆட்டக்காரியாக இருக்கும் வரலட்சுமி, புரிதலுடன் இருக்கும் சசிக்குமாரின் காதலி. எங்கு சென்று ஆடினாலும் கைக்கும் வாய்க்கும் பத்தாத சம்பளம் தான் குழுவுக்கு. 


காதலை வெளியில் சொல்லாமல் தயக்கத்துடன் இருக்கிறார் சசிக்குமார். சசியின் மீது அதி தீவிர காதலுடன் இருக்கும் வரூவை பெண் கேட்டு வருகிறார் சுரேஷ். வரூவின் அம்மா, மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என சசியிடம் சொல்லி அவர் மூலமாகவே சம்மதிக்க வைக்கிறார். 

சசியின் வார்த்தைக்காக கல்யாணம் செய்து கொள்கிறார் வரூ. சில மாதங்கள் கழித்து வரூ ஏமாற்றப்பட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டதை அறிகிறார் சசி. வரூவுக்கு என்ன ஆனது, ஏமாற்றியவன் யார், அவரை சசி இக்கட்டில் இருந்து மீட்டாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

சசிக்கு ஆல்டைம் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் இந்த படம், கடுமையான உழைப்பை படத்திற்காக கொடுத்து இருக்கிறார். க்ளைமாக்ஸில் அவருக்கான அடியை வாங்கியிருந்தால் எவனும் செத்தே போயிருப்பான். 


எப்பொழுதும் வருமான குறைச்சலால் தாழ்வு மனப்பான்மையில் வரூவிடம் காதலை சொல்ல தயங்கும் சசி மனதை கவர்கிறார். க்ளைமாக்ஸ் விஸ்வரூபம் பயத்தை  உண்டாக்குகிறது. 

படத்தின் ஆகச் சிறந்த பலம் சந்தேகமேயில்லாமல் வரூ தான். என்னா பெர்பார்மன்ஸ், என்னா ப்ரசன்டேன்சன். தலையை குனிந்து வணக்கம் செலுத்துகிறேன் வரலட்சுமி.

சத்தியமாக எந்த நடிகையும் நடிக்க முன் வராத கதாபாத்திரம் அது. முதலில் குட்டைப் பாவாடையுடன் ஆடும் கரகாட்டகாரிகளுக்கான உடையை அணிவதற்கே பெரிய தைரியம் வேண்டும். சசி பசிக்கிறது என்று சொன்னதற்காக காலில் காயத்துடன் தெறிக்க நடனமாடி மயங்கி விழும் காட்சியிலும், சசிக்கு பசிக்கும் என்றால் அம்மணமாக கூட ஆடுவேன் என்று சொல்லும் காட்சியிலும் பெர்பார்மன்ஸில் தெறிக்க விடுகிறார். 

வில்லன் சுரேஷால் ஏமாற்றப்பட்டு ப்ராவுடன் ஒருத்தனை அடித்து துவைத்து வில்லனிடம் சாவு அடி வாங்கும் காட்சியிலும், குடித்து விட்டு ஜிஎம் குமாரிடம் மல்லுக்கு நிற்கும் காட்சியிலும் பட்டைய கிளப்புகிறார். அவருக்கான மாஸ்டர் பீஸ் படம் இது.

காலமாற்றத்தினால் வலுவிழந்தும் கம்பீரம் குறையாமல் திமிருடன் திரியும் ஜிஎம் குமார் மனதை நெருடுகிறார். அத்தனை அவமானங்களையும் கடந்து சாதித்து விட்ட திருப்தியில் சாகும் போது மனதை தொடுகிறார்.

கர்ண கொடூர கதாபாத்திரம் சுரேஷுக்கு, இனி கோலிவுட்டை ஒரு வலம் தில்லாக வருவார். 

அமுதவாணன் ஆனந்தி சம்பந்த பட்ட காட்சிகள் வருத்தத்தை, இயலாமையை அப்படியே கண்முன், நிறுத்துகிறது.

இத்தனை பாராட்டுகள் இருந்தாலும் அத்தனையும் போய் சேரும் நதிமூலம் பாலா. இத்தகையப்பட்ட ஆட்களிடம் இருந்து வாங்கியிருக்கும் பெர்பார்மன்ஸ் தான் படத்தை எடுத்து நிப்பாட்டுகிறது. 

பின்னணி இசையும் பாடல்களும் இளையராஜா தான் இசையின் கடவுள் எனும் பெயரை நிரந்தரமாக்கி நிறுத்துகிறது. 

இவ்வளவு இருந்தும் பாலாவின் அசைக்க முடியாத டெம்ப்ளேட், யூகிக்க முடிந்த க்ளைமாக்ஸ் படத்தின் பலவீனம். இந்த டெம்ப்ளேட்டை விட்டு வெளியில் வராவிட்டால் பாலா இனி தொடர்ந்து முன்னணியில் இருப்பது சிரமம். 

தனிமனித உணர்வுகளை இந்த அளவுக்கு மெருகூட்டி மக்களுக்கு படைப்பது பாலாவுக்கு மட்டுமே கிடைத்த வரம்.

ஆரூர் மூனா

Monday, 11 January 2016

லோயர் பெர்த்தும் மிலிட்டரி ரம்மும்

கிறிஸ்துமஸ் சமயத்திலேயே குடும்பத்துடன் போய் திருவாரூரில் உட்கார்ந்தாச்சி. பொங்கல் வரை வீட்டம்மாவும் முல்லையும் திருவாரூர் வாசத்தில். புத்தாண்டுக்கு பிறகு நான் மட்டும் சென்னை வந்து வேலைக்கு போய்க் கொண்டு இருக்கிறேன். 


முல்லையை விட்டு இருக்க மனமில்லாததால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை திருவாரூர் விஜயம் நடந்துக் கொண்டு இருக்கிறது. நேற்றிரவு சென்னைக்கு பயணமானேன். 

எப்போதுமே அரிசி, உளுந்து, புளி போன்ற பொருட்கள் திருவாரூரில் இருந்து தான் எடுத்து வந்துக் கொண்டு இருக்கிறேன். அப்படியே பழகிப் போச்சி. நேற்றும் நாற்பது கிலோவுக்கு மேல் வெயிட்டுகளை சுமந்து கொண்டு ரயிலேறுவதால் சைடு லோயர் பெர்த் புக் பண்ணியிருந்தேன். 

எப்பொழுமே எனக்கான லோயர் பெர்த்தை கடன் கொடுத்தே பழகிப் போன நான் இந்த முறை யாருக்கும் கொடுக்க கூடாது என்று கடுகடுப்பான முகமூடி அணிந்து பெட்டியில் ஏறினேன். 

முகமூடியை கழற்றி எறியும் நிலையை உறுதிப்படுத்த வழக்கம் போல ஒரு பெண்மணி வந்து பெர்த்தை மாற்றிக் கொண்டு அப்பர் பெர்த்துக்கு  செல்லும்படி கேட்டார். கையில் நிறைய பொருட்கள் இருப்பதால் யோசித்து மறுத்தேன். "செங்கல்பட்டுல இறங்கிடுவோம் தம்பி. வயதானவள், அப்பர் பெர்த்தில் ஏறமுடியாது" என்று கெஞ்சினார். 

சில நிமிடங்களில் மனசு கேட்காமல் அவரிடம் பெர்த்தை கொடுத்து விட்டு சைடு அப்பருக்கு மாறினேன். கடுகடுப்பான முகமூடி என்னைப் பார்த்து சிரித்தது. தூக்கம் வரவில்லை. மனசு முழுக்க பொருட்களின் மீது தான் இருந்தது. 

அந்த அம்மா செங்கல்பட்டில் இறங்க பெர்த்தை விட்டு அகன்ற சமயம் அப்பர்பெர்த்தில் இருந்து இறங்கினேன். லோயர் பெர்த்தில் அடுத்த கூபேயில் இருந்து வந்து வேறொரு பெண்மணி அமர்ந்தார். கடுப்பாகி அம்மா நகருங்க, இது என் பெர்த்து என்று சொல்ல முனங்கிக் கொண்டே எழுந்து சென்றார்.

5 நிமிடம் கழித்து ஒன்னுக்கு போய்விட்டு வந்தால் மிடில்பெர்த்தில் படுத்திருந்த பெண்மணி வந்து சைடு லோயரில் படுத்து இருந்தார். மண்டை காயும் அளவுக்கு சூடாகிப் போனேன். அவரிடமும் சத்தம் போட்டு எழுப்பி விட்டு பெர்த்தில் படுத்தேன். 

போராளி சட்டை போட்டு லோயர் பெர்த் கேட்கும் வயதான ஆட்களையெல்லாம் டிஸ்சும் டிஸ்சும்னு சுட்டு விடும் அளவுக்கு கோவத்தில் பொங்கிப் போனேன். என் அம்மாவுக்கு கூட என்றாவது இந்த நிலை வந்தால் அவரும் லோயர் பெர்த் கேட்பாரே என்று சமாதானமானேன்

படக்கென போராளி சட்டையை கழட்டி விட்டு சமூக ஆர்வலர்சட்டையை மாட்டிக் கொண்டு இனி வயதானவர்கள் கேட்டால் எப்போதும் போல் லோயர் பெர்த் கொடுப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். 

எழும்பூரில் இறங்கிய போது செம குளிர், நடுக்க ஆரம்பித்தது. ரெண்டு நாளைக்கு முன் நள்ளிரவிலும் வேர்த்துக் கொட்டிய சென்னையா இது என்று ஆச்சரியமானது. 

சமூக ஆர்வலர் சட்டையை கழட்டி கடாசி விட்டு மகாதியான பிரபுவாகிப் போனேன். இன்னும் இருக்கும் இரண்டு நாட்களும் மிலிட்டரி ரம் இருந்தால் தான் குளிரும் சென்னையை சமாளிக்க முடியும் போல.

ஆரூர் மூனா