Thursday, 14 January 2016

ரஜினி முருகன்

பண்டிகைகளின் கொண்டாட்ட மனநிலை அன்று வெளியாகும் சினிமாவின் மூலம் இன்னும் அதிகமாகனுமே தவிர மூடையே சங்கடத்தில் ஆழ்த்தி விட கூடாது. துப்பாக்கி படம் சரியான உதாரணம், அந்த வருட தீபாவளி மக்களிடையே அதிக கொண்டாட்டமானதற்கு துப்பாக்கிக்கும் பங்கிருக்கிறது.


அது போன்ற கொண்டாட்டத்தை அதிகப்படுத்தும் சினிமாவாக வந்திருக்கிறது ரஜினிமுருகன். இந்த பொங்கலுக்கு வெளியான மற்ற படங்கள் எல்லாம் முரட்டு பணக்கார நாயகர்கள் படமே. சாமானியனாக மல்லுக்கு நின்று மக்களின் ஆதரவை ஏகோபித்த அளவில் பெற்று சினிமா வணிகத்தில் முன்னுக்கு நிற்பது சிவகார்த்திகேயன்.

படத்திற்கு அலைஅலையென வரும் மக்களே மேற்கூறிய வார்த்தைகளுக்கு சாட்சி. டிரெய்லர் பார்க்கும் போது பெரிய அளவில் என்னை ஈர்க்கவில்லை, மசாலாப் படமாகவோ வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இன்னுமொரு வர்ஷனாகவோ இருந்து விட வாய்ப்பிருக்கிறது என்றே நினைத்திருந்தேன். 


அழகியல் சினிமாவுக்கான எந்த கட்டமைப்பும் இல்லை, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை இல்லை, மனதை உருக்கும் கதை இல்லை ஆனாலும் மக்களுக்கு படம் மிகவும் பிடித்து இருக்கிறது. 

அரங்கு நிரம்ப அமர்ந்து வலிக்க வலிக்க சிரித்து செல்கிறார்கள். பாடலுக்கு ஆண்பெண் பேதமில்லாமல் திரையின் முன் நின்று ஆட்டம் போடுகிறார்கள். எந்த பாடலுக்கும் ஒரு ஆண்மகன் கூட தம்மடிக்க வெளியே போகவில்லை. பொங்கல் மாதிரியான பண்டிகைகளுக்கு இந்த படம் போதும்.

அப்பா, அம்மாவிடம் காசை களவாண்டு நண்பனுடன் செலவழித்து வேலைக்கு போகாமல் அழகான பெண்ணை காதலித்து அவளை கைப்பிடிக்க முயற்சித்து சொத்து பிரச்சனையில் வில்லனுடன் மோதி ஜெயித்து வணக்கம் போடும் வணிக சினிமா தான் ரஜினி முருகன்.

திரையில் பார்க்கும் போது அவ்வளவு ப்ரெஷ்ஷாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். நமக்கு அவரை ரொம்ப பிடிக்குமென்பதால் அவரது எல்லா செய்கைகளையும் ரசிக்கிறோம். நடிப்பில் நல்ல கம்பர்டபிளாக செட்டாகி விட்டார். 

இனி சிவகார்த்திகேயன் தேர்வு செய்யும் சினிமாவே அவரது பாதையை தீர்மானித்து விடும். உடலை வளைத்து, வெயிலில் கறுத்து வருத்தப்பட்டு ஜெயிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை. குழந்தைகள் அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் ஆகர்ஷமாக கொண்டாடுகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ், பல ஆங்கிள்களில் எனக்கு வரலட்சுமியை நினைவுபடுத்துகிறார். நல்ல வேளை காலையில் தாரை தப்பட்டை பார்த்து வரலட்சுமி பற்றிய மனநிலை எனக்கு மாறியிருந்ததால் அதையும் கூடுதல் தகுதியாக எடுத்துக் கொண்டே கீர்த்தி சுரேஷை ரசிக்க முடிந்தது. 

நல்ல இளமையும் அழகிய கேரள தேசத்து முகவெட்டும் அவருக்கான கூடுதல் பலம். நன்றாகவே இருக்கிறார்.

வேதாளம் படம் பார்த்து விட்டு சூரியை யாராவது காமெடி நடிகர்கள் என்றால் வாயில் குச்சியை விட்டு குத்திக் கொண்டு இருந்தேன். ஆனால் அவர் மாட்ட வேண்டிய இயக்குனர்களிடம் மாட்டினால் மிளிர்வார் என்பதை இந்த படம் உறுதி செய்கிறது. 

இடைவேளை வரை டம்மியாக வந்து கொண்டிருந்த ராஜ்கிரண் அதன் பிறகு நடிப்பில் பின்னி எடுக்கிறார். சிவகார்த்திகேயன் லெவலுக்கு இறங்கி காமெடியில் கலக்கியிருக்கிறார். 

80களில் எல்லா நடிகர்களுக்கும் போட்டு வெளுத்து எடுத்த இந்த பார்முலாவை இந்த காலத்தில் போட்டு வெற்றிகரமாக கலகலக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். 

இந்த படம் நீண்ட நாட்களுக்கு நினைவில் வைத்து மகிழும் அற்புத படமல்ல. படம் பார்க்கும் வரை சிரித்து விட்டு அந்த நாளை மட்டும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் கமர்ஷியல் படம் ரஜினி முருகன். 

ஆரூர் மூனா

5 comments:

 1. ஆங் . . . சொல்ல மறந்துட்டேன், நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. இத திருவாரூர்லயா பாத்தீங்க ?

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க, பொங்கலை முன்னிட்டு திருவாரூர் வாசம் தான்

   Delete
 3. அனைவர் விமர்சனமும் பார்க்கும் பொழுது பொங்கல் கொண்டாட்டத்தில் முதலாவதாக ஓடி கொண்டிருப்பது தலைவர் முருகன் படம் தான் போல ...;-)

  ReplyDelete
 4. Hello,
  I have visited your website and it's really good so we have a best opportunity for you.
  Earn money easily by advertising with kachhua.com.
  For registration :click below link:
  http://kachhua.com/pages/affiliate
  or contact us: 7048200816

  ReplyDelete