Friday, 11 March 2016

மாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்

ட்ரெய்லரை பார்க்கும் போது மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா சாயலில் இருந்தது. அந்த படங்கள் சுமாராக இருந்தாலும் காமெடி நல்லாயிருக்குமே என்ற ஆவல் தான் இந்த படத்தை தேர்வு செய்ய காரணம்.


ஆனால் நடந்தது. 

தமிழகத்தின் எந்த பகுதி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத ஒரு பேரூராட்சி. அங்கு இரண்டு ஆதிக்க சாதிகள் இடையே எப்பொழுதும் பகை இருக்கிறது. 20 வருடங்களாக தேர் இழுக்க முடியாமல் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய வரும் கலெக்டரையே மண்டையை உடைத்து அனுப்பும் அளவுக்கு பிரச்சனை.


ஒரு சாதி தலைவரான ராதாரவியின் தம்பி மகன் விமல். சாதி பாசத்தில் ஊரில் கலப்பு காதலில் இருக்கும் ஜோடிகளை பேசியே பிரித்து வைத்து விடுகிறார். ராதாரவியின் மகளை எதிர்சாதியில் உள்ள ஒருத்தன் காதலிக்கிறான். 


அங்கு பிரச்சனைக்கு போனால் அஞ்சலியை சந்திக்கிறார் விமல். கண்டதும் காதலாகிறது. அஞ்சலி மீதுள்ள காதலால் காதல் ஜோடியை சேர்க்க நினைக்கிறார். சாதி பெரியவர்கள் எதிர்ப்பையும் மீறி காதலை சேர்த்து வைத்தாரா, அஞ்சலியை காதல் மணம் புரிந்தாரா, தேர் இழுக்கப்பட்டதா என்பதே படத்தின் கதை.

இந்த படத்தில்விமலை எனக்கு பிடித்ததற்கு ஒரே காரணம் அவர் என் மச்சான் சதீஷ் போலவே தான் இருக்கிறார். என் வயதுடைய என் மச்சான் மன்னார்குடி பக்கம் ஒரு கிராமத்தின் தலைவராக இருக்கிறான். 

இந்த படத்தில் விமல் எப்படி காதல் பஞ்சாயத்துக்கு போகிறாரோ, எப்படி அவர் கூட நான்கு அல்லக்கைகள் இருக்கின்றனரோ, எப்படி மொட்டை மாடியில் குடிப்பதற்கென்று ஒரு இடம் அமைத்து குடிக்கிறாரோ, எப்படி தங்கமணியிடம் பம்முகிறாரோ அப்படியே என் மச்சானை கண்முன்னே நிறுத்தி விட்டார்.


நான் கூட வருடத்தில் சில நாட்கள் மச்சான் கூட்டத்தில் இணைந்து மகாதியான ஜோதியில் கலப்பதுண்டு. செம என்ஜாயாக இருக்கும். நமக்கு வேலை சென்னையில் இருப்பதால் இரண்டு மூன்று நாட்கள் தான் இந்த அனுபவம் நமக்கு கிட்டும்.

மற்றபடி விமல் எல்லாபடங்களிலும் எப்படி ரியாக்சன் காட்டுவாரோ அப்படியே தான் இந்த படத்திலும். மாற்றி நடியுங்கள் பாஸு, பாக்குற எங்களுக்கு கண்ணை கட்டுது.

அஞ்சலி இதற்கு முந்தைய படத்தில் கொஞ்சம் சதைப்பிடிப்போடு இருப்பதை பார்த்து வருத்தப்பட்டேன். ஆனால் எடையை குறைத்து வயித்தில் பாலை வார்த்து இருக்கிறார். அஞ்சலி வரனும், பழைய பன்னீர்செல்வமா வரனும்.


சூரி மொக்கை போடுகிறார். அவரது காமடி பெரிதாக சொல்லிக் கொள்வது போல் ஒன்னுமில்லை. சிறு நகைப்பு கூட வர மாட்டேன் என்கிறது. இப்படியே போய்க்கிட்டு இருந்தால் சிரமம் தான் சூரி.

காளி கொஞ்சம் இன்னொசண்ட் காமெடியில் புன்னகைக்க வைக்கிறார். முனிஸ்காந்த் படத்தின் ஆரம்பத்தில் காமெடியில் கவனிக்க வைத்தாலும் போகப் போக வலுவிழந்து போகிறது. 

எதிர்சாதிகாரன் நம்ம பொண்ணை கூட்டிக்கிட்டு போயிட்டால் நாம் உடனே அவன் சாதிகாரன் பொண்ணை கூட்டியாந்துடனும் என்கிறதே படத்தின் மையக்கரு. இதெல்லாம் எப்படி வௌங்கும்.

படத்தில் இரண்டு சாதிகளை இலைமறை காயாக காட்டுகிறார்கள். நாயகன் முறுக்கு மீசையும் முரட்டுத்தனமாகவும் இருப்பதையும் பார்த்தால் தேவர் இனத்தையும், நாயகி வீட்டில் மட்டும் தெலுகில் பேசுவதை பார்த்தால் நாயக்கர் இனத்தையும் குறிப்பது போல்  தெரிகிறது. 

ஆனால் படத்தில் பேசுபவர்கள் ஸ்லாங் எல்லாம் கொங்கு மண்டலத்தில் பேசுவது போல் இன்னும் குழப்புகிறது.

படம் 15 வருடத்திற்கு முன்பு வந்தால் ஓடியிருந்தாலும் ஓடியிருக்கும். இப்போ முதல் வார இறுதி நாட்களை தாண்டுவது சந்தேகம் தான்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment