Friday, 29 June 2018

அசுரவதம் - சினிமா விமர்சனம்

சசிகுமார் படத்துக்கும் எனக்கும் ஒரு சோக நிகழ்வு இருக்கு. சுப்ரமணியபுரம் படமும் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படமும் ஒரே நாளில் வெளியானது. சாந்தியில் சுப்ரமணியபுரமும் தேவிபாலாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படமும் வெளியாகி இருந்தது.


நானும் என் நண்பனும் சாந்தி தியேட்டர் வாசலில் நின்று பேசிக்கிட்டு இருந்தோம். நான் சுப்ரணியபுரம் படத்துக்கு போகலாம்னு சொல்ல அவனோ புது இயக்குனர் படம் எப்படியிருக்கும்னு தெரியாது, ரிஸ்க் எடுக்க வேண்டாம் எம்டன் மகன் இயக்குனரின் அடுத்த படம் முனியாண்டி, வா இதற்கே போகலாம்னான்.

போய் தலைவலி வாங்கி வந்தது தான் மிச்சம். ரெண்டு நாள்ல மக்களிடையே மவுத் டாக் பரவி சுப்ரமணியபுரம் பிச்சிக்கிட்டு ஓடுது. எந்த தியேட்டர்லயும் டிக்கெட் கிடைக்காம அல்லாடுறோம். 15 நாளுக்கு பிறகு பாடாவதி தியேட்டரான மடிப்பாக்கம் குமரனில் பார்த்தோம். நல்ல படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தவற விட்ட வருத்தம் இப்பவும் உண்டு.


தாரை தப்பட்டை, பலே வெள்ளைய தேவா படங்களை தவிர வேற படங்கள் என்னை ஏமாற்றியதில்லை. நவீன உலகின் ராமராஜன் சசிகுமார் தான். இவர் படங்களுக்கு மக்கள் குடும்பமாக வருவதே இந்த நூற்றாண்டின் அதிசயம்.

இந்த படத்துக்கு வருவோம். ட்ரெய்லரே பெரும் கவனம் ஈர்த்தது. நம்பி அயனாவரம் கோபிகிருஷ்ணா தியேட்டருக்கு போனால் படம் பார்த்தவங்க மொத்தமே பத்து பேரு தான்.

ஸ்பாய்லர்ஸ் இருக்கும், மத்தவங்க ஒதுங்கிக்கங்க.


ஒரு சாதாரண மளிகை கடை நடத்தி வரும் வசுமித்ர வுக்கு போன் வருகிறது. ஒரு வாரத்தில் கொல்லப் போவதாகவும் அதுவரை சித்ரவதைகளை அனுபவிக்கனும்னு சசிகுமார் சொல்ல வசுமித்ர பாதுகாப்புக்கு ரவுடிகளை அமர்த்திக் கொள்கிறார். 

சொன்னபடி சசிகுமார் கொன்னாரா இல்லையா, என்ன காரணம் அவ்வளவு தான் படத்தின் கதை. 

படத்தில் சிறந்த கதைலாம் கிடையாது. கதையா பார்த்தா தமிழ் சினிமா அடிச்சி துவைச்சி எடுத்த பழிவாங்கல் கதை தான். படம் ஒரு விஷுவல் ட்ரீட். இந்த வகை மேக்கிங் நம்மூருக்கு புதுசு. 

கேமரா ஆங்கிள் முதற்கொண்டு சண்டை காட்சிகள் வரை எல்லாமே புதுசு. டெக்னீசியன்களின் களமான இதில் ஒளிப்பதிவாளர், சண்டை பயிற்சியாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் ஆகியோர் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்.

படத்தின் கதை சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவுமில்லாமல் வெறும் மிரட்டலை மையமாக வைத்தே பரபரவென்று இடைவேளை வரை வந்து விடுகிறார்கள். நமக்கே புதுசா இருக்கு. 

இரவில் சசிகுமாரை வசுமித்ர தேடிக் கொண்டிருக்க இருட்டில் ஒரு சிகரெட் கங்கு தெரிய கூடவே புகை படர மின்னல் வெளிச்சத்தில் சசிகுமார் நிற்கும் காட்சி செம அப்ளாஸ் வாங்குகிறது.

வசுமித்ர இந்த பாத்திரத்திற்கு பொருத்தமான காஸ்டிங் கிடையாது. சுமை தாங்க முடியாமல் திணறுகிறார். உடல்மொழி னு ஒன்னு இருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை போல. நடக்கும் போதும் ஒடும் போதும் கோவப்படும் போதும் அந்த தாக்கம் நம்மை பற்றிக் கொள்ளவே இல்லை. அந்நியமாக இருக்கிறது. 

பாம்பு எதற்கு வருகிறது அதனால் சொல்ல விழைவது என்னன்னு புரியல. துப்பாக்கி சசிகுமாருக்கு எப்படி கிடைக்கிறது, கிராமத்தில் பட்டுபட்டுனு சாதாரணமா சுடுவதும் பொருந்தவில்லை. 

ப்ளாஷ்பேக் பழிவாங்கும் படத்திற்கு பொருத்தமான குரூரத்தை கொண்டிருக்கிறது. ஆனாலும் சாகும் போது வசுமித்ர பலாத்காரத்திற்கு உட்படுத்திய பெண்களின் பெயர்களை சொல்லிக் கொண்டே இருப்பது உறுத்துகிறது. அப்படி சொல்வது பொருந்தனும்னா சாதாரண மளிகை கடைக்காரர் என்ற பேக்ட்ராப் இருந்திருக்க கூடாது. இன்னும் குரூரமான பேக்ட்ராப் இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

விஷூவலா புது முயற்சியை கொண்டிருக்கும் அசுரவதத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

ஆரூர் மூனா

Friday, 22 June 2018

டிக் டிக் டிக் - சினிமா விமர்சனம்

முன்னலாம் வெள்ளிக்கிழமையானா வண்டி நேரா தியேட்டருக்கு போயிடும். பல வருசமா பழகிப் போன விஷயம் அது. இடையில் சில வருடங்கள் பழக்கத்தை நிறுத்திட்டு, இன்னிக்கி படத்துக்கு போகலாம்னு கிளம்பும் போதே ஒரு மாதிரியான அன்கம்பர்ட்டபிள் பீல் வந்துச்சி. ஒரு வழியா தயக்கத்தை உடைச்சி தியேட்டருக்கு போயிட்டேன். 


படத்தின் விமர்சனத்தில் நிறைய ஸ்பாய்லர்ஸ் இருக்கும். படம் பார்க்கனும்னு நினைச்சா எஸ்ஸாகிடுங்க. கவனமா விமர்சனம் பழக்கம் விட்டுப் போச்சுல்ல, கொஞ்ச நாள்ல அந்த கான்சியஸ் வந்துடும்.

ஒரு பெரிய விண்கல், அதாவது 50 கிலோ மீட்டர் விட்டமுள்ள விண்கல், சென்னைக்கு அருகில் உள்ள கடலில் விழப் போகுது. அப்படி விழுந்தா தமிழ்நாடு, ஆந்திரா, இலங்கை போன்றவற்றின் கடல்பகுதியில் 1000 மீட்டர் அளவுக்கு எழும்பும் கடல் அளவுகள் உருவாகும். 

4 கோடி பேர் இறக்கும் வாய்ப்புள்ளதால் இந்திய அரசாங்கம் அந்த விண்கல்லை விண்வெளியிலேயே உடைத்து விட திட்டம் போடுது. திட்டத்தை செயல்படுத்த ஜெயிலில் இருக்கும் திருடன் ஜெயம் ரவி, ரிச்சி ஸ்ட்ரீட்ல செல்போன் ரிப்பேர் பண்ணும் திலக், ஹேக்கர் அர்ஜுனன் ஆகியோரை அனுப்புது, விண்கல்லை தகர்த்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.


படத்தின் கதை கேட்டதும் ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது. நான் ப்ளஸ் 2 படிக்கும் சமயம் விஜயகாந்தின் தாயகம் னு ஒரு படம் ரிலீசாச்சி. பள்ளியை கட்டடிச்சிட்டு நண்பர்களுடன் முதல் காட்சி பார்க்க உக்கார்ந்து இருக்கோம். ஒரு விஞ்ஞானியை காஷ்மீர் தீவிரவாதி கடத்தி விட தமிழ்நாட்டு மீனவரான விஜயகாந்த் கையில் அருவாளை எடுத்துக்கிட்டு காப்பாத்த கிளம்புவார். தியேட்டரே விழுந்து விழுந்து கைதட்டி கலாய்ச்ச சீன் அது. 


இந்த படமும் அப்படி தான் இருக்கு. இயக்குனர்  சக்தி சௌந்தர்ராஜனின் முந்தைய படங்களான நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்றவை சுவாரஸ்யமான கன்ட்டென்ட்டுகளை கொண்டிருக்கும் ஆனால் எக்ஸிக்யுசனில் கோட்டை விட்டுருப்பார்கள். சம்பவங்கள் இந்த படத்திற்கும் பொருந்துகிறது.


படத்தின் பலம்னா அது சிஜி தான். பெரிய அளவுல மெனக்கெடாம அதிக பொருட்செலவும் வைக்காம முடிந்த அளவுக்கு கச்சிதமா பண்ணியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் ப்ளூமேட் அபத்தங்கள் நிகழவேயில்லை. பல நூறு கோடிகள் போட்டு க்ராபிக்ஸ் கொடூரங்கள் நிகழ்த்தும் ஷங்கர்லாம் பத்து அடி தள்ளி நிக்கலாம்.

ஜெயம் ரவி நல்லா பண்ணியிருக்கார். கண்ணில் ஒரு மெல்லிய சோகம் தவழ்ந்து கொண்டே இருப்பது கச்சிதமாக பொருந்துகிறது. உடல்மொழி, உச்சரிக்கும் திறன் இவர் வேற கட்டத்தில் இருக்க வேண்டிய நடிகர் என்பதை நமக்கு குறியிட்டு குறியீட்டில் காட்டுகிறார். 

நிவேதா பெத்துராஜ் நாயகியாக வருகிறார். ஒரு உட்டாலக்கடி கிஸ்ஸிங் சீன் தவிர ஒன்றும் சொல்லிக் கொள்வது போல் இல்லை. ஒரு நாள் கூத்து படத்தில் இருக்கும் க்யூட்னஸ் இதில் மிஸ்ஸிங்.


மற்ற நடிகர்களும் பெரிய சிரத்தை எடுத்துக் கொள்ளாமல் கடனே னு நடித்திருக்கிறார்கள். 

அவ்வளோ பெரிய ஆபரேசன் நடத்த ஒரு ஜவான் கூடவா ராணுவத்தில் இல்லை. அதுவும் 200 கிலோ எடையுள்ள அணு ஆயுதம், விண்வெளியில் அக்கடா னு இருக்குமாம். போய் மேஜிக்லாம் பண்ணி பொத்துனாப்புல தூக்கிட்டு வந்துடுவாங்களாம். டேய். எங்களையெல்லாம் பார்த்தா எப்பட்றா தெரியுது. 

சீனா ஸ்பேஸ் ஸ்டேசன்ல இருக்கிறவன்லாம் பழைய ஜெய்சங்கர் பட வில்லனின் கையாள் போலவே இருக்கிறார்களே, மக்கள் கலாய்ப்பார்கள் என்று கூடவா தெரியவில்லை. சீன ராணுவ வீரன் சண்டை போடும் போது பஞ்சத்தில் அடிபட்ட கூர்க்கா மாதிரியே தெரிவது எனக்கு மட்டும் தானா,

20 முதல் 25 வயதுக்குள் இருக்கும் நாயகி எப்படி ராணுவத்தில் இவ்வளவு பெரிய நிலையில் இருக்கிறார் என்று சொல்லுங்கள் டாடி சொல்லுங்கள். ராணுவ விருது வழங்கும் விழாவில் முடியை விரித்துப் போட்டு மெடல் வாங்கும் பெண் அதிகாரியை இப்ப தான் பார்க்கிறேன். 

இந்த மாதிரி படங்களுக்கு டீட்டெயிலிங் ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு சொல்லனும்னா தெலுகுல ஷை னு ஒரு படம் வந்தது. ராஜமவுலி ஆரம்ப காலத்துல இயக்கிய படம். படம் ரக்பி விளையாட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு மசாலா படம். மசாலா படம் தானேன்னு அடிச்சி விடல. 

ரொம்பவும் பக்குவமா, படத்தின் ஆரம்பத்திலிருந்து ரக்பி பற்றிய விதிகளை கொஞ்சம் கொஞ்சமா பார்வையாளர்களுக்கு புரிய வைத்துக் கொண்டே இருப்பார் இயக்குனர். அது தான் க்ளைமாக்ஸ் மேட்ச்சுக்குள் மக்களை ஈர்க்க காரணமாக அமைந்தது. 

பல கோடி போட்டு எடுக்கிற படத்துக்கு இந்த மெனக்கெடல் கூட இல்லைனா எப்படி இயக்குனர் சார். பாக்குற எங்களைப் பார்த்தா  கேனப் பயலுக மாதிரியா தெரியுது. 

ஆரூர் மூனா 

Wednesday, 20 June 2018

ரோஸ்மில்க்

மெர்சல் படத்துலயே எனக்கு புடிச்ச சீன், தம்பி ரோஸ்மில்க் வாங்கித் தர்றேண்டா என்பது தான். மத்தவன்லாம் சமந்தாவை ரசிச்சிக்கிட்டு இருந்தா நான் விஜய் ரோஸ்மில்க் குடிக்கும் அழகை ரசிச்சிட்டு இருப்பேன்.


ரோஸ்மில்க் பெருமையப் பத்தி நாளெல்லாம் சொல்லிக்கிட்டே போகலாம். கடைல வாங்கி குடிக்கிற ரோஸ்மில்க்கை விட அபூர்வமாக வீட்டு விஷேசங்களில் கிடைக்கும் ரோஸ்மில்க் அலாதி சுவையா இருக்கும்.
மைலாப்பூர் காளத்தி பேப்பர்ல கிடைக்கும் ரோஸ்மில்க் நல்ல டேஸ்ட்டா தான் இருக்கும், ஆனால் நான் சாப்பிட்ட ரோஸ்மில்க்குகளில் அது சிறந்ததுனுலாம் சொல்லமாட்டேன்.
திருவாரூர்ல ராம்ஜி மாமா னு ஒரு சமையற்காரர் இருந்தார். வடக்கு வீதி குடும்ப விழாக்களுக்கு அவர் தான் சமையல். எங்க ஊர் கல்யாணங்களில் முதல் நாள் மாலை கண்டிப்பாக ரோஸ்மில்க் இருக்கும்.
அதன் சுவையே அலாதி. கடையில் சிரப் வாங்கி பாலில் கலக்காமல் ரோஜா இதழ்கள், பன்னீர் சிரப், சர்க்கரை கலந்து அவரே தயாரிப்பார். அதுவும் கறந்த பாலை காய்ச்சி குளிர வைத்து அதில் செய்யப்படும் ரோஸ்மில்க்கின் சுவை மறக்கவே மறக்காது.
தரமான ரோஸ்மில்க் சுவைக்க ஒரு விதி இருக்கிறது.
நல்லா சில்லுனு இருக்கும் ரோஸ்மில்க்கை முகத்தருகே எடுத்து வரும் போது அதன் மணம் நாசியை துளைத்து, மயிர்கால்கள் சிலிர்க்கனும். பிறகு சுவைக்கும் போது பக்குவமாக கலக்கப்பட்ட எசன்ஸ் மற்றும் பாலின் கலவை வாயெல்லாம் பரவி ஒரு திருப்தி தரும் பாருங்க. எத்தனை டம்ளர் குடித்தாலும் அலுக்காது. மனமும் வயிறும் கேட்டுக்கிட்டே இருக்கும்.
சென்னையில் கொஞ்சம் வெயிலடித்தாலும் உடன் தேடும்பானம் ரோஸ்மில்க் தான். இப்பலாம் காலை மாலை வேளைகளில் காபி, டீயெல்லாம் குடிப்பதில்லை. ரோஸ்மில்க் தான்.
காதி பவனிலிருந்து சிரப் வாங்கி கொடுத்து விடுவேன். ரெண்டு ஐஸ் க்யூப்கள் டம்ளரில் போட்டு திக்கா பாலை ஊற்றி எனக்கு எந்தளவுக்கு புடிக்குமோ அந்தளவுக்கு மட்டும் எசன்ஸை ஊற்றி தருவார் வீட்டம்மா,
எவ்வளவு கொஞ்சமா இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் தரமான ரோஸ்மில்க் குடித்த திருப்தியை தரனும் அது. சந்தானம் கூட ஒரு படத்தில் சொல்வாரே, குடிச்சிட்டு வச்ச மாதிரி இருக்கனும்னு. அது தான் நம்ம பதம்.
இப்ப சில இடங்களில் ரோஸ்மில்க்கை அப்டேட் பண்றேன்னு சப்ஜா விதைகள் அல்லது பாதாம் பிசின் சேர்த்து தர்றாங்க. ரோஸ்மில்க் டேஸ்ட்டையே கெடுத்து விட்டுது அது. ரோஸ்மில்க் பாரம்பரியம் மாறாமல் இருந்தால் தான் அந்த சுவை கிடைக்கும்.
ஆரூரான் திருமண மண்டபத்தில் பெரும்பாலும் தெரிந்தவர்கள் திருமணம் தான் நடக்கும். வெங்கடேஸ்வரா பள்ளிக்கு பக்கத்தில் வேறு மண்டபம் இருக்குமா, பள்ளி முடிந்து வரும்போது நோட்டம் விட்டே வருவோம். சமையற்கூடத்தில் ராம்ஜி மாமா இருந்தால் சட்டு சட்டுனு பசங்களுக்கு தகவல் பரவி விடும்.
வீட்டுக்கு போய் டவுசர் மாற்றி, பேட்டும் பாலும் எடுத்துக்கிட்டு மண்டபத்துல பூந்துடுவோம். எங்களை பார்த்தவுடன் "வந்துட்டானுங்க, பிரம்மஹத்திங்க"னு திட்டுவார்.
ஆனால் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் ரோஸ்மில்க் ஊத்திக் கொடுத்துக்கிட்டே இருப்பார். "போதும் மாமா" ன்னு சொன்னாலும் "இன்னும் குடிடா படுவா" ன்னு கொடுப்பார்.
இப்பலாம் திருமணங்களில் நுழைந்தவுடன் வெல்கம் ட்ரிங்க் னு ஒன்னு கொடுக்குறானுங்க. நல்லா கெமிக்கல் கலந்த க்ரேப் ஜுஸ் தான் பெரும்பாலும் இருக்கும். கொமட்டிக்கிட்டு வரும் நமக்கு.
இப்ப ஆரூரான் மண்டபத்துக்குள்ள போய் 20 வருசத்துக்கு மேல ஆயிடுச்சி, ராம்ஜி மாமாவையும் பார்த்து 15 வருசத்துக்கு மேல ஆச்சி. இப்ப எங்க இருந்தாலும் ரோஸ்மில்க்கை தயார் செய்து கொடுத்துக்கிட்டு தான் இருப்பார். இந்த பக்குவமெல்லாம் அதுவா அமையனும்.

ஆரூர் மூனா