Thursday, 13 September 2018

சீமராஜா - சினிமா விமர்சனம்

படத்தோட துவக்கத்தில் வில்லனின் மாப்ளை "நான் யாரு தெரியுமா" ன்னு எஸ்கேயிடம் சவால் விட "நீ யாரா வேணும்னாலும் இரு, எவனா வேணும்னாலும் இரு, ஆனா என்கிட்டயிருந்து தள்ளியே இரு" என்று பஞ்ச் பேசுகிறார். இது தனுஷுக்கான குறியீடு. 


க்ளைமாக்ஸ்ல வில்லன்கிட்ட ஒருவனுக்கு எப்படி நண்பன் தேவையோ அது மாதிரி வில்லனும் தேவை. நீ ஆளக் கூடாதுன்னு நினைச்சோம், ஆனா வாழக் கூடாதுன்னு நினைக்கலையே என்பது மாதிரியான ஒரு பஞ்ச் பேசுகிறார். இது அவரது எதிரிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கை குறியீடு. இது மாதிரியான குறியீடுகளால் நிறைந்துள்ளது சீமராஜா படம். 

படத்தின் கதை என்னன்னா நாட்டுடமையாக்கப்பட்ட ஜமீன் ஒன்றிற்கு இளவரசனாக இருக்கிறார். மக்கள் பழைய மரியாதை வைத்திருந்தாலும் புது பணக்காரனான லாலுக்கு இந்த மரியாதை உறுத்துகிறது. 

ராஜாவான தந்தை நெப்போலியன் இறந்து போக ராஜாவாகிறார் எஸ்கே. புதுப் பணக்காரனிடம் இருந்து தம் மக்களின் நிலங்களை காப்பாற்றினாரா நாயகியை கைப்பிடித்தாரா என்பதை புத்தம் புதிய காட்சி அமைப்புகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.


சிவகார்த்திகேயன் என்னும் எஸ்கே பெயரை குறியீட்டுடன் தான் போடுகிறார்கள். தன்னைத் தானே பெரிய ஸ்டார் என்று எஸ்கே நம்ப ஆரம்பித்து இருக்கிறார். இது அவருக்கான எச்சரிக்கை. சிவகார்த்திகேயனை குடும்பம், பெண்கள், நண்டு, சிண்டு, குழந்தை குட்டிகள் முதல் ரிட்டையர்டு பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்குதுனா அது பக்கத்து வீட்டு பையன் மாதிரியான தோற்றம் தான். 

அண்ணன் ஸ்டார் அந்தஸ்துடன் நாலு படி மேல ஏறி உக்கார்ந்துட்டார்னா மக்கள்கிட்டயிருந்து விலகுகிறார்னு அர்த்தம். இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம்ங்க எஸ்கே சாரி சிவகார்த்திகேயன். உங்க படத்தின் வியாபாரம் மட்டும் உச்சத்துல போகட்டும். உங்க பாத்திர வடிவமைப்பு அவசியப்படாம உச்சத்துக்கு போனா இழப்பு உங்களுக்கு தான், பாத்துக்கங்க.


மத்தபடி படம் முழுக்க நம்மளை என்டர்டெயின் பண்ணிக்கிட்டே இருக்கார். நல்ல டான்ஸ், பஞ்ச் வசனங்கள். சண்டை காட்சிகள், ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் னு எல்லாத்திலேயும் நல்ல முன்னேற்றம். 

சமந்தா படத்தின் பெரும்பலம், அந்த அழகும், பெர்பார்மன்ஸும், சிலம்பம் சுற்றும் காட்சிகளும், காஸ்ட்யூமும் அசத்துகிறது. உங்களுக்கு கல்யாணம் ஆனா என்ன, ஆகாட்டி என்ன, இப்போதைய உங்கள் பெர்பார்மன்ஸை இதே நிலையில் வைத்திருந்தால் நீங்க இன்னும் இன்னும் மேல போய்க்கிட்டே இருப்பீங்க.

படத்தின் பெரிய மைனஸ் சூரி தான். சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளில் சுத்தமா சிரிப்பே வரலை. மற்ற படங்களில் சொதப்பினாலும் பொன்ராம் படங்களில் சூரியின் காமெடி மிக நன்றாகவே இருக்கும். ரசித்து ரசித்து மகிழ்வோம். ஆனால்  நேருக்கு மாறாக இந்த படத்தில் பயங்கர கடியா இருக்கு. 


இமான் இசை கூட ரீபிட் மோட் தான். சிம்ரன் அன்றும் ஒல்லி தான், இன்றும் ஒல்லி தான். ஆனால் அன்று அழகாக இருந்தார், இன்று சப்பிப் போட்ட மாங்கொட்டை மாதிரி வறண்டு இருக்கிறார். பேசாம நீங்க ரிட்டையர்டு ஆகிடுங்க மேடம். எங்களது பழைய படங்களின் கனவுக்கன்னி என்ற பெயராவது மிஞ்சட்டும்.

படத்துலயெ உருப்படியான காமெடினா அது நாய்க்கு உடல் முழுக்க கருப்பு பொட்டு வச்சி சிறுத்தைனு ஊருக்குள்ள கிளப்பி விட்டு அதகளம் பண்ணும் காட்சி தான். அது நம்பவே முடியாத அபத்தம்னாலும் என்னால் சிரிக்க முடிந்தது.

ஜனங்க ரசனைய புரிஞ்சிக்கவே முடியாது. படத்தை ஒரளவுக்கு சிரிச்சி ரசிச்சி தான் பார்த்தாங்க. ஆனா இது முழுக்க முழுக்க ப்ளூக் தான். ஆனால் படம் ஓடிடுச்சேன்னு அடுத்த படத்தையும் இதே மாதிரி எடுத்தா உங்க நிலைமை கஷ்டம் ஜி.

மூணு படத்துலயும் நாயகனின் கேரக்டரைசேஷன் ஒரே மாதிரி தான் தான் இருக்கு. அதாவது அப்பாவுக்கு அடங்காத பொறுப்பில்லாமல் ஊரை வெட்டியா சுற்றிக் கொண்டு இருக்கும் நாயகன் பின்னர் சூழ்நிலைக்காக பொறுப்புணர்ந்து செயல்படுவது, அடுத்த படத்துலயாவது மாத்துங்க இயக்குனரே.

படம் தப்பிச்சிக்கிச்சி. அதாவது படம் ஓடிடும். ஆனால் உங்களுக்கு இது எச்சரிச்கை மணி பொன்ராம். ஒரே மாதிரியான காட்சியமைப்பை இரண்டு படங்களில் லாபமாக பார்த்தீர்கள். ஆனால் இப்போது உறுத்துகிறது. சுதாரிக்கா விட்டால் அடுத்த படம் உங்களின் காலை வாரி விட்டுடும். 

ஒரே நாயகனிடம் பணிபுரிவதால் கூட இந்த தேக்கம் வந்திருக்கலாம். ஒரு கேப் தேவை. சிவகார்த்திகேயனை விட்டு வெளியில் வாருங்கள். மற்றவர்களிடம் சில படங்களை பண்ணுங்கள். வ,வா,ச பண்ணும் போது நாயகன் மீது எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லை. ரஜினி முருகன் பண்ணும் போது சற்று காம்ப்ரமைஸ் பண்ண வேண்டியிருந்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் நிறையவே காம்ப்ரமைஸ் செய்துள்ளீர்கள் என்று அனுமானிக்கிறேன். 

ஒரே மாதிரியான காட்சிகள், சுமாரான இன்டர்வெல் பிளாக் சண்டை, சூரியின் எடுபடாத நகைச்சுவை, அவசியமேயில்லாத ப்ளாஷ்பேக் ராஜா கதை என நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் படம் ஒரு முறை பார்க்கலாம் ரகம் தான். 

ஆரூர் மூனா